December

பொறுமையுள்ள ஆசிரியர்

(வேதபகுதி: ஆதியாகமம் 30:25-43)

“நான் என் ஸ்தானத்திற்கும், என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்” (வச. 25).

ரெபெக்காளின் திட்டம் எவ்வளவு தவறானாது! அவள் யாக்கோபை ஏசாவின் கைக்குத் தப்பும்படி சிறிது நாட்களுக்குத் தன் சகோதரன் வீட்டுக்கு அனுப்பிவிட்டாள் (27:43-45). ஆனால் அங்கு நாட்கள் வருடங்களாக மாறின. யோசேப்பு பிறந்தவுடன் யாக்கோபு தன் குடும்பத்தைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தார். குறிப்பாக தனக்கு ஆபத்து விளைவிக்க எண்ணம் கொண்டிருக்கும் தன் சகோதரன் ஏசாவைச் சந்திக்க வேண்டும். நாமும் பல நேரங்களில் பிரச்சினைகளுக்குப் பயந்து புறாவின் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு தூரமாய்ப் பறந்து சென்றிருக்கலாம். ஆனால் ஒரு நாள் அவற்றை நேருக்கு நேராகச் சந்தித்தே ஆக வேண்டும். இப்படியான தருணங்களில் அந்த நல்ல யோசேப்பு நமக்குத் துணையாயிருக்கிறார். ஏசாவைப் போன்று, நமக்கு எதிராகவும், விரோதமாகவும் இருக்கிற தீர்ப்பை குலைத்துப் போடுவதற்கு, பெத்லேகேமில் பிறந்த உலக இரட்சகராம் கிறிஸ்து நமக்கு இருக்கிறார்.

லாபானுடன் பதினான்கு ஆண்டுகள் இருந்த பிறகும், தேவன் யாக்கோபுக்கு சில இன்றியமையாத பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக அங்கே தொடர்ந்து இருப்பதற்கு அனுமதித்தார். லாபான் யாக்கோபை நோக்கி: “உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார்” என்று அறிந்திருக்கிறேன் என்றான் (வச. 27). யாக்கோபின் உழைப்பு, பிரயாசம் ஆகியன இருந்தாலும், ஆசீர்வதிக்கிறவர் கர்த்தரே என்பதை லாபான் அறிந்துகொண்டது மட்டுமின்றி, அதை அறிக்கையும் செய்தான். இந்தக் குறிப்பிடத்தக்க வாக்குமூலம், சூழ்ச்சியால் அல்ல, தேவனால் மட்டுமே ஒருவனை ஆசீர்வதிக்க முடியும் என்று யாக்கோபுக்கு உணர்த்துவதாக இருந்தது. இந்தக் கோட்பாடு நம்முடைய இரட்சிப்புக்கும் பொருந்தும். நாம் செய்யக்கூடிய எந்த கிரியைகளாலும் நாம் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாது; மாறாக நம்முடைய பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்திய இரட்சகரின் மூலமாகவே நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

யாக்கோபு சதித்திட்டம் தீட்டி லாபானை ஏமாற்றினாலும் தேவன் அவனைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தவில்லை. அந்தத் தகுதியற்ற ஏமாற்றுக்காரனிடம் தேவன் நீடிய பொறுமையுடன் நடந்துகொண்டார். யாக்கோபின் தவறுகளை உணர்த்தி, அவனை ஒழுங்குபடுத்துவதற்கும், வழிநடத்துவதற்கும், பல ஆண்டுகளைச் செலவிட்டார். கர்த்தராகிய இயேசுவையும், பன்னிரு சீடர்களையும் எண்ணிப்பார்ப்போம். இந்தச் சீடர்கள் எத்தனை முறை தவறு செய்தார்கள், எத்தனை தடவை தங்கள் அவிசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள். ஆயினும் அவர்களுடன் மூன்றரை ஆண்டுகள் பொறுமையுடன் செலவிட்டு கற்றுக் கொடுத்தார். அவர் அவர்களிடம் உடனடிப் பலனை அல்ல, நீண்டகால அடிப்படையிலான பலனையே எதிர்பார்த்தார். நம்மிடத்திலும் அவர் இவ்விதமாகவே எதிர்பார்க்கிறார். “நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாய் இருப்பாய்” என்று ஆண்டவர் பேதுருவை அழைத்தபோது, மூன்றரை ஆண்டுகள் கழித்து அவன் எவ்விதமாய் பயனுள்ளவனாக விளங்குவான் என்றே பார்த்தார். “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறல்லை” (எண். 23:21) என்று தேவன் கூறியபோது, அவன் பாவம் செய்யவில்லை என்று கூறவில்லை; மாறாக, அவனுடைய அக்கிரமத்தை மன்னித்து என்னுடைய மனதிலிருந்து அதை எடுத்துவிட்டேன் என்ற பொருளிலேயே கூறினார். நாமும் அவருடைய கிருபையை அனுபவித்திருக்கிற படியால், “கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது” (சங். 138:8) என்று தாவீதுடன் இணைந்து பாடுவோம்.