December

பிரச்சினைகளுக்கு நடுவிலும் தேவன்

(வேதபகுதி: ஆதியாகமம் 30:1-24)

“தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிசொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்” (வச. 22).

யாக்கோபு லேயாளை நேசித்தான், அவளைக் காட்டிலும் ராகேலை சற்று அதிகமாக நேசித்தான். கர்த்தர் ராகேலின் கர்ப்பத்தை அடைந்திருந்தபடியால் குழந்தை பெறத் தாமதமானது. மனித முயற்சிகள் அங்கே தலைதூக்கின. யாக்கோபின் வீடு ஒரு போர்க்களமாக மாறியது. இரண்டு உணர்ச்சிவசப்பட்ட பெண்கள் யாக்கோபின் பாசத்திற்காகச் சண்டையிட்டுக்கொண்டர். தாய்ப் பாசத்துக்கு அடிமையாகி ரெபேக்காளின் சொல் கேட்டு வளர்ந்த யாக்கோபின் வாழ்க்கையில், மேலும் இரு பெண்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஏசாவைக் காட்டிலும் தாயின் அன்பை மிகுதியாக அனுபவித்திருந்த யாக்கோபு, தன்னுடைய வாழ்க்கையிலும் பாகுபாடு காட்டுதலின் வலியை உணர்ந்த தருணம் இது. சுயநலத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு தங்களுடைய காரியங்களைச் சாதிக்க நினைத்தால் என்னவெல்லாம் ஏற்படும் என்பதை அவன் கண்கூடாகக் கண்டும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தான். தங்களுடைய பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் உரிமையைக் கூட கணவன் என்ற முறையில் யாக்கோபுக்கு விட்டுத்தராத பெண்களுடன் யாக்கோபு வாழ்ந்து கொண்டிருந்தான் (பென்யமீனைத் தவிர, அதுவும் ராகேலின் மரணத்துக்குப் பின்னரே). இவர்களுக்கு நடுவில் யாக்கோபு சற்றுத் தடுமாற்றம் அடைந்தார் என்பதே உண்மை.

இத்தகைய பிரச்சினைகள் நிறைந்த குடும்பத்திலும் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் தாம் கொடுத்த வாக்குறுதியின் மையமாக யாக்கோபு விளங்கினான். யாக்கோபின் குமாரர்களின் பெயர்களை இப்பகுதியில் பார்க்கிறோம். இவர்களே இஸ்ரயேல் என்னும் ஒரு புதிய நாட்டைக் கட்டியெழுப்பப்போகிற கோத்திரப் பிதாக்கள். இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் யாக்கோபு தன்னுடைய மனைவிகளுக்கு கர்த்தரைக் குறித்துப் போதித்திருந்தான் என்பது அவன் கர்த்தரைத் தேடக்கூடியவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு குழந்தைக்குப் பெயர் சூட்டும்போதும், அங்கே, கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தார், கர்த்தர் கேட்டார், கர்த்தரைத் துதிப்பேன், தேவன் என் வழக்கைத் தீர்த்தார், தேவன் என் நிந்தையை நீக்கினார், கர்த்தர் எனக்குத் தருவார் என்னும் விசுவாசமுள்ள வார்த்தைகளை அப்பெண்கள் வெளிப்படுத்தினார்கள்.

இன்றைக்கும் கிறிஸ்தவக் குடும்பங்கள் தேவனுடைய இருதயத்துக்கு விலையேறப்பெற்ற பொக்கிஷமாகவே இருக்கின்றன. யாக்கோபின் குடும்பத்தில் காணப்பட்ட மனித பலவீனங்களைப் போலவே நம்முடைய குடும்பங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றின் நடுவிலும் தேவன் நம்மைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். தம்முடைய சித்தத்துக்கும், விருப்பத்துக்கும் நேராகவே அதன் ஒவ்வொரு உறுப்பினர்களையும் நடத்த விரும்புகிறார். நம்முடைய ஒவ்வொருவருடைய பெயர்களையும் அவர் அறிந்திருக்கிறார். தம்முடைய ஊழியத்துக்கும் சேவைக்கும் மட்டுமின்றி, நித்திய நோக்கத்துக்காக நம் ஒவ்வொருவரையும் அவர் ஆயத்தம் செய்கிறார். நமக்கான அழைப்பு எவ்வளவு மகிமையானது. நம்முடைய தகுதிக்கு அப்பாற்பட்டு, அவர் நம்மை ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ராகேலுக்குப் பிறந்த உலக இரட்சகருக்கு அடையாளமான யோசேப்புடன் இப்பகுதி முடிகிறது. கிறிஸ்து நம்முடைய பாரங்களைச் சுமந்தவர் மட்டுமல்ல, அதிலிருந்து நம்மை விடுதலை அளிப்பவர். அவரே நம்முடைய நம்பிக்கையின் நாயகர். அவர் நம்மை விசாரிக்கிறவர், நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுவோம்.