August

தேவனுடைய அன்பை பெற்ற மக்கள்

(வேத பகுதி: உபாகமம் 5:22-33)

”அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்” (வச.29).

தேவன் எங்களோடு நேரடியாகப் பேச வேண்டாம், அவர் என்ன பேசுகிறாரோ அதைக் கேட்டு நீர் எங்களுக்குச் சொல்லும் என்று மோசேயிடம் மக்கள் வைத்த விண்ணப்பத்தை கேட்டு தேவன் மக்களின் நிலைக்கு இறங்கி வந்தார். பல நேரங்களில் தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையையும் நாம் புரிந்து கொள்ளாமல் போகும் போதோ, அல்லது தேவனைக் குறித்து அச்ச உணர்வு அடையும் போதோ, அவர் நம்முடைய இயலாமையைப் புரிந்து கொண்டு இளகிய இருதயத்துடனும் தாழ்மையான உள்ளத்துடனும் நம்மிடம் இடைபடுகிறார். நாம் எண்ணற்ற முறைகள் தேவனுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாதவர்களாக பின் வாங்கியிருக்கிறோம். அவருடைய நடைக்கு ஒத்துப் போக முடியாதவர்களாக தயங்கி நின்றாருக்கிறோம். ஆயினும் அவர் நம்மை விட்டு விடாமல் நமக்காக நம்மோடு கூட இருந்து நடத்திச் செல்கிறார். “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என இரு முறை தன்னுடைய பாணியில் கேட்ட கர்த்தர், மூன்றாம் முறை பேதுருவின் நிலைக்கு இறங்கி வந்து “நீ என்னை நேசிக்கிறாயா” என்று கேட்டார். கிறிஸ்துவின் உயர்த்தெழுதலைக் குறித்து நம்பிக்கையற்றவர்களாக, சேர்ந்து போன நிலையில் நடந்து சென்ற எம்மாவூர் சீடர்களிடம் அவர்கள் வேகத்துக்கு ஏற்றாற்போல் நடந்து சென்று வசனத்தை விளக்கிக் காட்டினார். நம்முடைய தேவன் ஒரு தந்தையைப் போல கரிசனையுடன் நடந்து கொள்கிறார். சபையின் ஊழியர் களோ, மூப்பர்களோ இளம் விசுவாசிகள் தங்களிடம் நெருங்கி வர முடியாதபடி நடந்து கொள்ளக் கூடாது.

இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு மோசே இருந்தது போல நமக்கு மத்தியஸ்தராக உயிர்த்தெழுந்த கிறிஸ்து இருக்கிறார். காண முடியாத தேவனை, அவருடைய .மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனை அனுப்பி, தன்னுடைய கிருபையையும் சத்தியத்தையும் வெளிப்படுத்தினார். நியாயாயப் பிரமாணத்தை நிறை வேன்ற முடியாத படி, மாம்சத்தில் பெலவீனமாயிருந்தோம். தேவனே நிறைவேற்றும்படி தம்முடைய குமாரனை அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

“என் கற்பனைகளை எல்லாம் கைக்கொள்ளுவதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்” (வச.29) என்பதே அன்பான தேவனின் எதிர்பார்ப்பு. கீழ்ப்படிதல் இருதயத்தில் தொடங்குகிறது. எம்மாவூர் சீடர்களின் மந்த இருதயத்தை கொழுந்து விட்டு எரியும் வண்ணமாக உயிர்ப்பித்தார். பேதுரு துக்கப்பட்டு அழுதான். ஆகவே நாமும் நம்முடைய பிள்ளைகளும் நன்றாய் இருக்கும் படியாக அவருக்கு இருதயப்பூர்வமான நம்முடைய கீழ்ப்படிதலைச் சமர்ப்பிப்போம்.