August

உற்சாகமூட்டுதலின் அவசியம்

(வேதபகுதி: உபாகமம் 1:5-15)

“… நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்ததுபோதும், நீங்கள் திரும்பிப் பிரயாணப்பட்டு, … போங்கள் ” (வச. 6,7).

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. கூடாரங்களில் தங்கியிருக்க ஒரு காலம் உண்டு, கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டு பயணிக்கவும் ஒரு காலம் உண்டு. பல வேளைகளில் நாம் எதற்காக அழைக்கப்பட்டோமோ அதை மறந்துபோனவர்களாவோ அல்லது எங்கு செல்ல வேண்டுமோ அதற்கு எதிரான திசையில் பயணிக்கிறவர்களாகவோ இருப்போம். நம்முடைய தூக்கத்தைக் களைந்து, நம்மைத் திருப்தியாக்கி வைத்திருக்கிற காரியங்களைவிட்டு எழுந்து செல்வதற்கு ஒரு செயலூக்கம் அவசியமாயிருக்கிறது. தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாக அதைச் செய்தார். வேதவாக்கியங்கள் மூலமாக நமக்கும் அதைச் செய்கிறார். நாம் எதற்காக அழைக்கப்பட்டோமோ அந்த இலக்கை நோக்கியே நம்முடைய பயணம் இருக்கும்படி ஒருவருக்கொருவர் புத்திசொல்வோம்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு அளித்த வாக்குறுதியின் தேசமே இந்தப் புதிய தலைமுறையினருக்கான இலக்கு. தேவனுடைய ஆசிர்வாதங்கள் நாம் அனுபவித்து மகிழ்வதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன. முந்தின தலைமுறையினருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தும் அதை இழந்துவிட்டனர். தேவன் நமக்கு அருளிய பொறுப்புகளை நாம் நிறைவேற்றாவிட்டால், அதை வேறு ஒருவருக்குக் கொடுப்பார். தேவனுடைய திட்டங்கள் ஒருபோதும் பொய்த்துப்போவதில்லை. “நீ இந்தக் காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்” (எஸ்தர் 4:14) என்னும் மொர்தேகாயின் கூற்று புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கும் அந்நியமானது அல்ல. ஆகவே நம்முடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்கும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் எப்பொழுதும் எச்சரிக்கையுடனும் விசுவாசத்துடனும் செயல்படுவோம்.

உன்னைப் பெரிய எண்ணிக்கையுள்ள மக்கள் கூட்டமாக்குவேன், உனக்கு ஒரு நாட்டைக் கொடுப்பேன், உன்னை ஆசீர்வதிப்பேன் என்பதே தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி (ஆதி. 12;1-7). தேவன் தாம் சொன்னபடியே எவ்விதக் குறைவுமின்றி தம் வாக்கை நிறைவேற்றிவிட்டார் (வச. 8,10,11). திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. உலக இச்சைகளினால் ஆட்பட்டு அவற்றை இழந்துபோகாதிருப்பதற்கு எப்பொழும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பேதுரு நம்மை எச்சரிக்கிறார்.

மோசேயும் பவுலும் தங்கள் மேலிருந்த ஊழியத்தின் அழுத்தங்களை பிறருடன் பகிர்ந்துகொண்டார்கள். மோசே ஞானமும், அறிவும் நிறைந்த மனிதர்களை ஏற்படுத்தியது போலவும் (வச. 15), மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனிதர்களிடத்தில் பவுல் ஒப்புவித்ததுபோலவும் (2 தீமோ. 2:2) நாம் செயல்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். எங்கே அதிகாரக் குவிப்பு ஏற்படுகிறதோ அங்கே பிரச்சினைகளும் எழுகின்றன. கர்த்தருடைய வேலையை கர்த்தருடைய மக்கள் யாவரும் இணைந்து செய்ய வேண்டும். நூறு வேலையை தனியொருவராய்ச் செய்வதைக் காட்டிலும், நூறு பேர்கள் இணைந்து செய்வது அதைச் சுலபமாக்குவதுடன் பளுவையும், அழுத்தங்களையும் குறைக்கும். “இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுவது எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது? (சங். 133:1).