மத்தேயு 2:1-23

2. மேசியா அரசரின் இளமைக் காலம்
(அதி. 2)

அ. அரசரைத் தொழுதுகொள்ள வந்த ஞானிகள் (2:1-12)

2:1,2 இயேசு கிறிஸ்துவின் பிறப்போடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் குறித்துப் படிக்குங்கால், அவற்றின் கால வரிசையைக் கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படுவது எளிது. முதலாம் வசனத்தைப் படிக்கும்போது, மரியாளும் யோசேப்பும் குழந்தையோடு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் இருந்த நாட்களிலேயே ஏரோது இயேசுவைக் கொலைசெய்ய முயன்றான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயின் சான்றுகள் அனைத்தையும் ஒன்றுகூட்டிக் காணுங்கால், ஏரோதின் கொலை முயற்சி ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்தது என்பதை அறிய இயலும். ஞானிகள் இயேசு கிறிஸ்துவை ஒரு வீட்டில் கண்டதாக மத்தேயு 11 -ஆவது வசனத்தில் கூறுகிறார். இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள் யாவரையும் கொலை செய்யும்படி ஏரோது உத்தரவு பிறப்பித்தான் என்று 16-ஆவது வசனம் கூறுகிறது. ஆகவே இராஜரீகப் பிறப்பு நிகழ்ந்த பின்னர் குறிப்பிட்டுச் சொல்லப்படாத சிறிது காலம் கழித்தே, இந்த வேதபகுதியில் காணும் விவரங்கள் நிகழ்ந்தன என்பது புலப்படுகிறது.

மகா ஏரோது ஏசாவின் வழிவந்தவன். ஆகவே அவன் யூதர்களின் பாரம்பரிய எதிரியாக இருந்தான். அவன் யூத மதத்தைத் தழுவியவனாக இருந்தான். ஆயினும் அரசியல் ஆதாயந்தேடியே அவன் மதமாற்றத்தை மேற்கொண்டான் எனத் தோன்றுகிறது. அவனுடைய ஆட்சியின் இறுதிக் காலத்திலேயே யூதருக்கு ராஜாவாகப் பிறந்தவரைத் தேடி கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தனர். யூத மதத்தைச் சார்ந்திராதவரும் இயற்கைச் சக்திகளை மையமாகக் கொண்டு சமயச்சடங்குகளை செய்கிற ஆசாரியர்களாகவுமே இவர்கள் இருந்திருப்பார்கள், இப்படிப்பட்ட ஞானம் உடையவரும், முன்னறியும் ஆற்றல் படைத்தவரும் அரசர்களின் ஆலோசகர்களாக நியமிக்கப்படுவது வழக்கமாயிருந்தது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எத்தனைபேர், எவ்வளவுகாலம் பயணம் செய்தனர் என்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.

கிழக்கிலே தோன்றிய நட்சத்திரத்தினாலே அவர்கள் அரசரின் பிறப்பை எவ்வாறோ அறிந்து கொண்டனர். அதனால் அவரை அவர்கள் வணங்க வந்தனர். மேசியாவின் வருகையைக் குறித்த பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அவர்கள் அறிந்திருக்கக்கூடும். யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்னும் பிலேயாமின் தீர்க்கதரிசனத்தை இவர்கள் அறிந்திருப்பார்கள் (எண். 24:17). கிறிஸ்துவின் முதலாம் வருகையைக் குறித்து தானியேல் நூலில் காணும் எழுபது வாரக் கணக்கை அந்தத் தீர்க்கதரிசனத்தோடு இணைத்துப்பார்த்து அரசரின் பிறப்பை அவர்கள் அறிந்திருப்பார்கள் (தானி. 9:24,25). ஆனால் இந்த அறிவை அந்த மனிதர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் பெற்றிருந்தனர் என்றே தோன்றுகிறது.

அந்த நட்சத்திரம் தோன்றியதைக் குறித்துப்பற்பல அறிவியல் விளக்கங்கள் தரப்படுகின்றன. பல கோள்கள் ஒன்றிணைந்த காட்சியாக அது இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நட்சத்திரத்தின் பாதை ஒழுங்கற்றதாயிருந்தது. அது சாஸ்திரிகளுக்கு முன்பாகச் சென்று, எருசலேமிலிருந்து இயேசு கிறிஸ்து இருந்த வீட்டிற்கு அவர்களை நடத்திச் சென்றது (வச. 9). பிறகு அது நின்றுவிட்டது. வழக்கத்திற்கு மாறாகச் செயல்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, உண்மையில் இதனை அற்புதம் என்று கணிப்பதே தகும்.

2:3 யூதருக்கு அரசராகப் போகிற குழந்தை பிறந்திருக்கிறது என்பதைக் கேள்வியுற்ற ஏரோது ராஜா கலங்கினான். இப்படி ஒரு குழந்தை பிறந்திருப்பது அவனுடைய நிலைதடுமாறிய ஆட்சிக்கு வந்த ஆபத்தேயாகும். அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அந்தச் செய்தியை அந்நகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்க வேண்டும். ஆயின் இச்செய்தியின் நிமித்தம் அவர்களுடைய வாழ்க்கைச் சூழ்நிலைக்குப் பாதிப்பு ஏற்படலாம்; இல்லையேல் அவர்களை அடக்கி ஆண்ட ரோமர்களின் வெறுப்பைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்நகரத்தார் யாவரும் கலங்கினர்.

2:4-6 கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்பதைக் கண்டறிய யூத சமயத் தலைவர்களையெல்லாம் ஏரோது ஒன்று கூட்டினான். பிரதான ஆசாரியனையும் அவனது குமாரர்களையும் சேர்த்து பிரதான ஆசாரியர் என்று இங்கே மத்தேயு குறிப்பிட்டுள்ளார் (ஒருவேளை அவனுடைய குடும்பத்தின் உறுப்பினர்களும் இதில் அடங்குவர்). ஜனத்தின் வேதபாரகர் என்போர் ஆசாரியரல்லாத பொது மக்களில் மோசேயின் நியாயப்பிரமாணத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவராவர். நியாயப்பிரமாணத்தைப் பாதுகாத்து, போதித்து வந்த இவர்கள் ஆலாசனைச் சங்கத்தில் நீதிபதிகளாகவும் விளங்கினர். யூதாவிலுள்ள பெத்லகேமிலே அரசர் பிறப்பார் என்று மீகா 5:2-ஆம் வசனத்தை மேற்கோள் காட்டி ஆசாரியரும், வேதபாரகரும் சரியான பதிலைக் கூறினர். மீகாவின் தீர்க்கதரிசன நூல் “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம்” என்று அந்த ஊரைக் குறிப்பிடுகிறது. பாலஸ்தீனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் பெத்லகேம் என்னும் பெயரை உடையதாக இருந்ததால், யூதாவின் எல்லைக்குப்பட்ட எப்பிராத்தா மாவட்டத்தில் உள்ள பெத்லகேம் என்னும் இடம் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2:7,8 நட்சத்திரம் முதலில் காணப்பட்டது எப்போது என்பதை அறிய ஏரோது ராஜா சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து விசாரித்தான். இவ்வாறு அவன் இரகசியமாய் விசாரித்த விதம், அவனுடைய கொடுமையில் இன்பம் காணும் இயல்பினைக் காட்டிக்கொடுத்துவிட்டது. அவனால் சரியான குழந்தையைக் கண்டுபிடிக்க இந்தச் செய்தி அவனுக்குத் தேவைப்படும். தன்னுடைய உண்மையான நோக்கத்தை மூடிமறைக்கும் பொருட்டு, பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படியாகவும், கண்டபின்பு அவனுக்கு அறிவிக்க வேண்டுமென்றும் அவர்களிடம் அவன் சொல்லி அனுப்பினான்.

2:9 சாஸ்திரிகள் தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தபோது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் மீண்டும் காட்சியளித்தது. கிழக்கிலிருந்து அவர்கள் வந்த பாதை நெடுகிலும் அவர்களை அந்த நட்சத்திரம் வழிநடத்தவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. ஆனால் இப்பொழுதோ அந்தப் பிள்ளை இருந்த இடம் வரைக்கும் அது அவர்களை வழிநடத்தியது.

2:10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் என்று குறிப்பிடத்தக்கவகையில் சொல்லப்பட்டிருக்கிறது. புறஇனத்தவரான சாஸ்திரிகள் கிறிஸ்துவைக் கருத்தாய்த் தேடினர்; ஏரோது அவரைக் கொல்லத் திட்டமிட்டான்; ஆசாரியரும் வேதபாரகரும் அலட்சியப் போக்குடன் இருந்தனர் (இன்றும்கூட அப்படித்தான் இருக்கின்றனர்); எருசலேம் மக்கள் கலங்கினர். மேசியா எவ்வாறு வரவேற்கப்படுவார் என்பதற்கு இந்த மனப்பான்மைகள் யாவும் முன்அடையாளங்களாக விளங்கின.

2:11 சாஸ்திரிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்த போது, பிள்ளையையும் அதன் தாயாகிய மரியாளையும் அங்கே கண்டனர். உடனே அவர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு விலையுயர்ந்த பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய தாயையும் அவர்கள் கண்டனர் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். பொதுவாக தாயை முதலில் குறிப்பிட்டு, பின்னரே பிள்ளையைப் பற்றிச் சொல்லுவார்கள், ஆயின் இந்தப் பிள்ளையோ தனிச்சிறப்பு வாய்ந்தது. அதற்கே முதன்மையான இடம் வழங்கப்பட வேண்டும் (வசனங்கள் 13,14,20,21 ஆகியவற்றையும் காணுங்கள்). சாஸ்திரிகள் பிள்ளையைப் பணிந்துகொண்டனர். மரியாளையோ யோசேப்பையோ அவர்கள் பணிந்துகொள்ளவில்லை. (யோசேப்பைக் குறித்து ஒன்றும் இங்கு சொல்லப்படவில்லை. வெகுவிரைவில் நற்செய்தி நூலிலிருந்து அவன் முற்றிலுமாகத் தலைமறைவாகிவிடுவான்.) நம்முடைய புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் இயேசு ஒருவரே பாத்திரராக இருக்கிறார்; மரியாளோ யோசேப்போ ஆராதனைக்குரியவரல்லர்.

அவர்கள் கொண்டுவந்த பொக்கிஷங்கள் மேன்மையான பொருள் உடையன. தெய்வீகத்திற்கும் மாட்சிக்கும் பொன் அடையாளமாய் இருக்கிறது; அவருடைய தெய்வீக ஆள்தன்மையின் ஒளிவீசும் நிறைவை இது எடுத்தியம்புகிறது. தூபவர்க்கம் நறுமணம் வீசும் பசைப்பொருளாகவோ தைலமாகவோ இருக்கும்; அவருடைய பாவமற்ற நிறைவான வாழ்வின் நறுமணத்தை இது குறிக்கிறது. வெள்ளைப்போளம் கசப்பான செடியாகும்; உலகத்தின் பாவத்தை சுமக்கும்போது அவர் அனுபவிக்கப்போகிற பாடுகளை இது முன்னறிவிக்கிறது. ஏசாயா 60:6 –இல் சொல்லப்பட்டுள்ளவற்றை, புறஇனத்தாரின் காணிக்கைகள் நினைவுபடுத்துகின்றன. மேசியாவுக்குப் புறஇனத்தவர் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள் என ஏசாயா முன்னுரைத்தான். எனினும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் மட்டுமே அவன் அங்கே குறிப்பிட்டுள்ளான். “. . . யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்”. வெள்ளைப்போளம் அங்கு சொல்லப்படாததன் காரணம் என்ன? ஏனெனில் ஏசாயா கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தே பேசினான். அப்பொழுது அவர் பாடுகளை அனுபவிக்கப் போவதில்லை. ஆகவே அந்தக் கசப்பான வெள்ளைப்போளம் குறிப்பிடப்படவில்லை. இங்கே மத்தேயுவில் அவருடைய முதல் வருகை காட்சியளிக்கிறது, ஆகவே வெள்ளைப்போளம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்தேயுவில் கிறிஸ்துவின் பாடுகளை நாம் காண்கிறோம். ஆனால் பின்னர் வரவிருக்கிற மகிமையைப்பற்றி ஏசாயாவின் இப்பகுதி பேசுகிறது.

2:12 ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சாஸ்திரிகள் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, அதற்குக் கீழ்ப்படிந்து வேறொரு வழியாக அவர்கள் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றனர். உண்மையான இருதயத்தோடு கிறிஸ்துவைச் சந்திக்கும் எவரும் வந்த வண்ணமாகவே திரும்பிச் செல்கிறதில்லை. அவரோடு மெய்யான முறையில் கொள்கிற ஈடுபாடு அம்மனிதனை முழுவதும் மறுரூபப்படுத்துவது திண்ணம்.

ஆ. யோசேப்பும், மரியாளும், இயேசுவும் எகிப்திற்குத் தப்பியோடுதல் (2:13-15)

2:13,14 நம்முடைய கர்த்தர் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தது முதற்கொண்டே அவர்மீது மரணம் என்னும் அச்சுறுத்தல் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவர் சாவதற்காகப் பிறந்தது உண்மையெனினும், குறித்த வேளையில்தான் அது நிறைவேறும். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கிற எவனும் அவனுடைய வேலை நிறைவேறும்வரை அழிவைச் சந்திக்க மாட்டான்.

யோசேப்பு தனது குடும்பத்துடன் எகிப்துக்கு ஓடிப்போகும்படி சொப்பனத்தில் கர்த்தருடைய தூதனால் எச்சரிக்கப்பட்டான். தனது “தேடிக்கொல்லும்” பணியை தீவிரமாகச் செயல்படுத்த ஏரோது ஆயத்தமானான். ஏரோதின் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடிய அக்குடும்பத்தினர் அந்நிய நாட்டிலே அகதிகள் ஆனார்கள். அவர்கள் எகிப்தில் எவ்வளவு காலம் தங்கியிருந்தனர் என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால் ஏரோதின் மரணத்தில் அவர்கள் நாடு திரும்புவதற்கான வழிபிறந்தது.

2:15 இவ்வாறாக, இன்னுமொரு பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனம் புதுப்பொருள் என்னும் ஆடையை அணிந்துகொண்டது. “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தேவன் ஓசியா தீர்க்கதரிசியின்மூலமாகக் கூறினார் (ஓசியா 11:1). இஸ்ரவேல்மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பயணம் மேற்கொண்ட நிகழ்ச்சியையே இந்தக் குறிப்பு முதன்மையாகக் கூறுகிறது. ஆனால் அக்கூற்று இருபொருள் கொண்டதாக இருக்கிறது. மேசியாவின் வரலாறு இஸ்ரவேலின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. அந்தத் தீர்க்கதரிசனம் எகிப்திலிருந்து கிறிஸ்து இஸ்ரவேலுக்குத் திரும்பிய நிகழ்ச்சியில் நிறைவடைந்தது.

நீதியோடு இப்புவியில் ஆட்சிபுரிய கர்த்தர் திரும்பும் வேளையில், ஆயிரமாண்டு ஆசிர்வாதங்களில் பங்கடையும் நாடுகளில் எகிப்தும் ஒன்றாகத் திகழும் (ஏசா. 19:21-25; செப். 3;9,10; சங். 68:31). இஸ்ரவேலுக்குப் பரம்பரை எதிரியாக இருக்கும் ஒரு நாடு இவ்வாறு நன்மை பெறுவதற்கான காரணம் என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடைக்கலம் கொடுத்த செய்கைக்கு, தெய்வீக நன்றிக்கடனாக இது இருக்குமோ?

இ. பெத்லகேம் குழந்தைகளை ஏரோது கொன்று குவித்தல் (2:16-18)

2:16 சாஸ்திரிகள் திரும்பிவரத் தவறியபோது, இளம் அரசரைக் கண்டுபிடிக்க தான் வகுத்த திட்டத்தில் வஞ்சிக்கப்பட்டதை ஏரோது உணர்ந்தான். முட்டாள்தனமான கோபம் அவனைப் பற்றிக் கொண்டது. பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்ய அவன் உடனடியாகக் கட்டளையிட்டான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்ற கணக்கில் உடன்பாடு இல்லை. இருபத்தாறு குழந்தைகள் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

2:17,18 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கூக்குரல் எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட சொற்களின் நிறைவேறுதலாயிருந்தது. “ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால், அவைகளினிமித்தம் ஆறுதலடையாதிருக்கிறாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே. 31:15).

அத்தீர்க்கதரிசனத்தில், ராகேல் இஸ்ரவேலுக்கு அடையாளமாயிருக்கிறாள். படுகொலை நிகழ்ச்சி நடந்த பெத்லகேமுக்கு அருகில் இருந்த ராமாவில் ராகேல் புதைக்கப்பட்டாள். இஸ்ரவேலின் வருத்தமானது ராகேலின் வருத்தம் என்று இங்கே சொல்லப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் அவளுடைய கல்லறையின் வழியாகச் சென்றபோது அவர்களோடு சேர்ந்து ராகேலும் அழுததாக இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது. இளம் பகைஞரை அழிக்க ஏரோது செய்த முயற்சி அவனுக்கு எந்த ஆதாயத்தையும் உண்டாக்கவில்லை. அவகீர்த்தியின் வரலாற்றில் அவமானச் சின்னமாக ஏரோதின் பெயர் பொறிக்கப்பட்டது.

ஈ. யோசேப்பும் மரியாளும் இயேசுவும் நாசரேத்தில் குடியேறுதல் (2:19-23)

ஏரோது இறந்த பின்பு, இப்பொழுது நாடு திரும்புவது பாதுகாப்பானது என்று கர்த்தருடைய தூதன் யேசேப்புக்கு உறுதியளித்தான். யோசேப்பு இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தபோது ஏரோதின் மகனாகிய அர்கெலாயு அவனுடைய தகப்பனுடைய இடத்தில் யூதேயாவின் அரசனாகப் பதவி ஏற்றிருக்கிறான் என்று கேள்விப்பட்டான். ஆகவே அவன் அந்தப் பகுதிக்குச் செல்லப் பயந்தான். அவனுடைய பயம் சொப்பனத்தில் தேவனால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே அவன் வடதிசையிலுள்ள கலிலேயா நாட்டின் புறங்களுக்கு பயணம் மேற்கொண்டு நாசரேத்தில் தங்கினான்.

தீர்க்கதரிசனம் நிறைவேறியுள்ளதாக இந்த அதிகாரத்தில் நான்காவது முறையாகத் மத்தேயு நினைவுறுத்தியுள்ளார். எந்தத் தீர்க்கதரிசியின் பெயரையும் இங்கே அவர் குறிப்பிடவில்லை. மேசியா நசரேயன் என்னப்படுவார் என்று தீர்க்கதரிசிகள் உரைத்தனர் என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில் எங்கும் நேரடியாகச் சொல்லப்படவில்லை. “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அதின் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்” என்னும் ஏசாயா 11:1- ஆம் வசனத்தையே மத்தேயு குறிப்பிடுகிறார் என்று பல வேத அறிஞர்கள் கூறுகின்றனர். நெட்சர் (netzer) என்னும் எபிரேயச் சொல்லே கிளை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நெட்சர், நசரேயன் என்னும் சொற்கள் ஒன்றோடொன்று அவ்வளவு தொடர்புடையவையாகத் தோன்றவில்லை. நாசரேத்தில் வாழும் மனிதர் கள் நசரேயன் என்று அழைக்கப்படுவதுண்டு.அந்த ஊரே மற்ற இடங்களில் வசிக்கும் மக்களால் இழிவாகக் கருதப்பட்டது. நத்தானியேல் இதனைப் பழமொழி போன்ற ஒரு கேள்வியாகக் கேட்கிறான், “நாசரேத்திலிருந்து யாதொருநன்மை உண்டாகக் கூடுமா?” எந்த “முக்கியத்துவமும்”இல்லாத அந்த ஊரின் மீது சுமத்தப்பட்டபழிச்சொற்கள், அங்கு வாழ்ந்த மனிதர்கள்மேலும் விழுந்தன. ஆகவே 23-ஆவது வசனத்தில் அவர் நசரேயன் என்னப்படுவார் என்று சொல்லப்பட்டுள்ளதின் பொருள் யாதெனில், அவர் அவமரியாதையாய் நடத்தப்படுவார் என்பதேயாகும். நசரேயன் என்று இயேசு கிறிஸ்து அழைக்கப்படுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதாக எந்த வசனமும் கூறவில்லை. ஆயினும், “அவர் அசட்டை பண்ணப்பட்டவரும் மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும்” (ஏசா. 53:3) ஆவார் என்று சொல்லப்பட்டதை அறிவோம். அவர் ஒரு புழு, மனிதனல்ல; மனிதரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறார் என்று வேறொரு வசனம் கூறுகிறது (சங். 22:6). ஆகவே அதே சொற்களைத் தீர்க்கதரிசிகள் கூறவில்லையாயினும் பல தீர்க்கதரிசனங்களில் இந்தக் கருத்து நிலவுவதை மறுத்துரைக்க முடியாது. இந்த விளக்கம் பெரும்பாலும் சரியானதாகத் தோன்றுகிறது.

சர்வ வல்லமையுள்ள தேவன் இப்பூமிக்கு வந்தபோது, அவரை ஏளனப்படுத்தும் வகையில் நிந்தைக்குரிய பட்டப்பெயர் அவருக்குச் சூட்டப் பட்டது என்பது நமக்குப் பெரும் வியப்பளிக்கிறது. அவரைப் பின்பற்றுவோரும் அவருடைய நிந்தையில் பங்கு பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் (எபி.13:13).