அற்பமான சரீர முயற்சி

ஒகஸ்ட் 3

வீரனுடைய கால்களில் பிரியப்படார் (சங்.147:10)

 

எத்தனை கவர்ச்சிமிக்க நுண்ணறிவு இங்கே விளங்குகிறது! மகத்துவமானவரும் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவருமாகிய தெவன் வீரனுடைய கால்களில் பிரியப்படார்!

விளையாட்டு உலகத்தோடு இதனைச் சம்பந்தப்படுத்தி எண்ணிப்பார்க்கலாம். தடகளத்தில் ஓடும் மாவீரன் வளைந்து வரைவாய் ஓடி எல்லைக்கோட்டைக் கடக்கும் வேளையில் கைகள் இரண்டையும் உயர்த்தி வெற்றியில் மகிழ்வடைகிறான். கூடைப்பந்து விளையாடுபவன் திடலில் மின்னல் போல் அங்கும் இங்கும் ஓடி கூடைக்குள்ளாக பந்தைப் போடுகிறான். கால்பந்து விளையாடுபவனோ முறுக்கேறிய தசையும் வலிமையும் மிகுந்து, தடைசெய்ய முடியாத வகையில் எதிரியின் பகுதிக்குள் பாய்ந்து செல்கிறான்.

இவற்றைக் கண்ணுறும் திரள்கூட்டம் கட்டுப்பாட்டை மீறுகிறது. அவர்கள் குதிக்கின்றனர், சத்தமிடுகின்றனர், ஆரவாரம் செய்கின்றனர். இல்லையேல் ஏளனத்தொனி எழும்பி வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த விளையாட்டில் அவர்கள் வெறித்தனமாக ஆர்வங்கொண்டிருக்கின்றனர். வீரனுடைய கால்களில் அவர்கள் பிரியப்படுகிறார்கள் என்று அவர்களைக் குறித்து நிச்சயமாகச் சொல்லமுடியும். அதாவது, வீரர்களின் விளையாட்டுத் திறனில் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

விளையாட்டில் ஆர்வம் கொள்ளக்கூடாது என்று இவ்வசனம் தடைசெய்வதில்லை. உடற்பயிற்சியைப் பற்றிச் சிறப்பாகவே வேதம் பல இடங்களில் பேசுகிறது. ஆயினும் வீரனுடைய கால்களில் தேவன் பிரியப்படார் என்று கூறி, நாம் எவ்வௌற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைவுபடுத்தப்படுகிறோம்.

ஒரு குறிப்பிட்ட விளையாட்டில், ஓர் இளம் விசுவாசி அதிகமாக ஈடுபாடு கொண்டவனாக, அதனையே நோக்கமாகக் கொண்டவனாக அவன் மாறிவிடுவது எளிது. அவ்விளையாட்டில், மிகச்சிறந்த வீரனாக உயரவேண்டுமென்று எல்லாவித முயற்சிகளையும் அவன் செய்கிறான். அதற்கென தனது நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்கிறான். அவன் உண்கிற உணவைக் குறித்தும் உறக்கத்தைக் குறித்தும் ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கிறான். முடிவில்லாமல் பயிற்சி பெறுகிறான், ஒவ்வொரு முறை விளையாடும் போதும் கருத்தூன்றிக் கற்றுத் திறமையை நிறைவாக்கிக் கொள்கிறான். உடற்கூறுகள் அனைத்தும் மிக நேர்த்தியாகச் செயல்படும்படி வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகைளயும் மேற்கொள்கிறான். அந்த விளையாட்டே தன்னுடைய வாழ்க்கையென்று பேசுகிறான். அவனுடைய வாழ்க்கையைப் பொருத்தமட்டில் அது உண்மையாகவே காணப்படுகிறது.

வீரனுடைய கால்களில் தேவன் பிரியப்படுகிறதில்லை என்பதை இது போன்ற இளம்விசுவாசிகள் அறியும்போது தங்களுடைய செயல்களைக் கைவிட வலியுறுத்தப்படுகின்றனர். தேவனோடு ஐக்கியம் கொண்டு, அவன் நடக்க விரும்பினால், தேவனுடைய கருத்தினைத் தனது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேவன் எவற்றில் பிரியமாயிருக்கிறார்? “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்” (சங்.147:11). அதாவது, சரீரத்திற்குரியவைகளைக் காட்டிலும், ஆவிக்குரியவற்றில் தேவன் பிரியமாயிருக்கிறார். “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேபவக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்தாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என்று இக்கருத்தினை பவுல் வலியுறுத்துகிறார் (1.தீமோ.4.8).

இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து, ஆரவாரங்கள் ஓய்ந்துபோகும். விளையாட்டு அரங்குகள் வெறுமையாய்க் காட்சியளிக்கும், ஆட்டக் கணிப்புகள் மறந்துபோகும். தேவனுடைய இராஜ்யத்தையும், அதனுடைய நீதியையும் தேடி தற்போது வாழ்ந்தால், அதுவே அந்நாளில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.