தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும்

பெப்ரவரி 28
அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3).

மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில், வியத்தகு வகையில் தெய்வீகமும், மனித இயல்பும் ஒருங்கிணைந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, திருமறையைப் பார்ப்போம். அதனை எழுதிய தெய்வீக எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். தூய ஆவியானவரால் ஏவுதல் பெற்று அதனைப் பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர்.

இரட்சிப்பைப் பொறுத்தமட்டில், கர்த்தரே அதனைத் தொடங்குகிறவரும், நிறைவேற்றுகிறவருமாக இருக்கிறார். அதனை ஒரு மனிதனால் சம்பாதிக்க முடியாது. அதனை அடைவதற்கு அவன் தகுதி படைத்தவனும் இல்லை. இரட்சிப்பிற்கென்று தனிமனிதர்களைத் தேவன் தெளிவாகத் தெரிந்துகொள்கிறார். எனினும் அவர்கள் குறுகிய வாசலின் வழியாக உட்புகவேண்டும். அகவேதான் பவுல் தீத்துவுக்கு, “…. விசுவாசம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி” என்று எழுதியுள்ளார்.

தேவனுடைய செயலின்படி, “தேவனுடைய பெலத்தினாலே நாம் காக்கப்பட்டிருக்கிறோம்” என்று காண்கிறோம். அங்கு மனிதனுடைய பங்கு, “விசுவாசத்தைக்கொண்டு” என்பதாகும். “விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு…” என்று அதனை இணைத்துக் காண்கிறோம் (1.பேது.1:5).

இறைவனாலே என்னைப் பரிசுத்தமாக்க இயலும். ஆயினும் எனது ஒத்துழைப்பின்றி என்னை அவரால் பரிசுத்தமாக்க முடியாது. என்னுடைய விசுவாசத்தோடும் தைரியத்தையும், ஞானத்தையும், இச்சையடக்கத்தையும், பொறுமையையும், தேவபக்தியையும், சகோதர சிநேகத்தையும், அன்பையும் நான் கூட்டி வழங்கவேண்டும் (2.பேது.1:5-7). தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை நான் அணிந்துகொள்ளவேண்டும் (எபேசி.6:13-18). முந்தின மனிதனைக் களைந்து, புதிய மனிதனை நான் அணிந்துகொள்ளவேண்டும் (எபேசி.4:22-24). ஆவிக்கேற்றபடி நான் நடக்கவேண்டும் (கலா.5:16).

இதுபோலவே, கிறிஸ்தவ ஊழியத்திலும் தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் ஒருங்கிணைந்து செயல்ப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். பவுல் நட்டான், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார் (1.கொரி.3:6).

ஊள்ளுர் சபையில் தலைமைத்துவத்தைக் குறித்து நோக்குங்கால், தேவனே ஒரு மனிதனைக் கண்காணியாக நிறுவமுடியம் என்பதை அறிந்திருக்கிறோம். எபேசுப் பட்டணத்தில் கண்காணிகளைத் தூய ஆவியானவரே ஏற்படுத்தினார் என்பதைப் பவுல் நினைவுபடுத்துகிறார் (அப்.20:28). என்றாலும் மனிதனுடைய சித்தம் அதில் தேவைப்படுகிறது. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் (1.தீமோ.3:1).

கடைசியாக, நாம் மேலே குறிப்பிட்டுள்ள வேதவசனத்திலும் இவ்வுண்மையைக் காண்கிறோம். தேவனே நமது எதிரிகளை அழிக்கிறார். எனினும் நாம் அவர்களைத் துரத்தி, அழிக்க வேண்டும் (உபா.9.3).

ஒரு விசுவாசி ஏற்றத்தாழ்வு இன்றிக் காணப்படவேண்டுமென்றால், அங்கு தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் ஒருங்கிணைய வேண்டும். எல்லாமே தேவனைச் சார்ந்தது என்று ஜெபிக்கவேண்டும். எல்லாமே தன்னைச் சார்ந்தது என்று அவன் செயல்புரிய வேண்டும். போர்க்கால அறிவுரைகளை எடுத்துரைப்போம்.”கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம், படைக்கலனை ஏந்திச் செல்லுவோம். “மிகுதியான அறுவடை வேண்டுமென்று தேவனிடத்தில் மன்றாடுவோம். மண்வெட்டியை நாம் பயன்படுத்துவோம்.


கர்த்தரே வெற்றிக்குக் காரணர்

பெப்ரவரி 27

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1.கொரி.1:27).

கர்த்தரே வெற்றிக்குக் காரணர்

தேவையற்றது என்று கருதப்பட்ட சரிவர அறுக்கப்படாத மரப்பலகையைப் பயன்படுத்தி அழகிய மரம்பொருள் ஒன்றை ஒரு தச்சன் உருவாக்குவானென்னால், நேர்த்தியான மரத்திலிருந்து அத்தகைய பொருளை உருவாக்குவதிலும் அதிகமாகப் புகழப்படுவான். அதுபோலவே அழிவானவற்றையும், அற்பமானவற்றையும், பலவீனமானவற்றையும் பயன்படுத்தி, மகிமையான விளைவுகளைத் தேவன் உண்டாக்கும்போது, அவருடைய செயல்த்திறனும் வல்லமையும் உயர்த்தப்படுகின்றன. வெற்றிக்குக் காரணம் மூலப்பொருட்களே என்று மனிதர்கள் கூறமாட்டார்கள். கர்த்தரே வெற்றிக்குக் காரணர் என்று அறிக்கைசெய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

பலமுள்ளவற்றை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவற்றைத் தெரிந்துகொண்டதை உறுதிசெய்ய, நியாயாதிபதிகள் நூல் பற்பல எடுத்துக்காட்டுகளைத் தருகின்றது. எடுத்துக்காட்டாக, பென்ஜமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஏகூத் இடதுகைக்காரன். இடதுகை பலவீனத்தைக் குறிப்பதாகத் திருமறையில் காணலாம். ஆனாலும் மோவாபின் மன்னனாகிய அக்லோனைக் கொன்று இஸ்ரவேல் நாட்டை மீட்டு, 80 ஆண்டுகள் அதற்கு அமைதியைக் கொடுத்தான் (நியா.3:12-30).

படைக்கலன் என்று கருதுவதற்குத் தகுதியற்ற தாற்கோலை ஆயுதமாக ஏந்திப் போருக்குச் சென்ற சம்கார், 600 பெலிஸ்தரைக் கொன்று இஸ்ரவேலை மீட்டுக்கொண்டான் (3:31). “பலவீன பாண்டமாகிய” தொபோராள் தேவனுடைய வல்லமையால் கானானியரை நொறுக்கி வெற்றிகொண்டாள் (4:1-5:31). மனிதனின் எண்ணத்தின்படி, பாராக்கின் 10,000 வீரர்கள் கொண்ட காலாட்படை சிசெராவின் 900 இரும்பு  ரதங்களுக்கு எவ்விதத்திலும் சமமானவர்கள் அல்ல. எனினும் பாராக், சிசெராவின் படையைக் கலங்கடித்தான் (4:10-15). ஒரு கூடார ஆணியைக்கொண்டு, யாகேல் என்னும் பெண்ணொருத்தி சிசெராவைக் கொன்றாள் (4:21). செப்டஜின்ட் மொழிபெயர்ப்பில் அந்தக் கூடார ஆணியை அவள் தனது இடதுகரத்தில் பிடித்திருந்தாள் என்று சொல்லப்பட்டுள்ளது. மீதியானியருக்கு எதிராகப் போர்தொடுத்த கிதியோனின் படைவீரர்களின் எண்ணிக்கையை 32 ஆயிரத்திலிருந்து 300 ஆகக் கர்த்தர் குறைத்தார் (7:1-7). அவனுடைய படை ஒரு சுட்ட வாற்கோதுமை அப்பத்திற்கு ஒப்பிடப்பட்டது. வாற்கோதுமை அப்பம் எளியவர்களின் உணவாகும். அது ஏழ்மையையும், பலவீனத்தையும் சித்தரிக்கிறது (7:13). அவனுடைய படைக்கலன்கள் எக்காளமும், பானையும், தீவட்டியுமே (7:16). அவற்றைப் படைக்கலன்கள் என்று கருத இயலுமா? அது போதாதென்று, நிச்சயமாகத் தோல்விதான் என்று எண்ணும்படி, அந்தப் பானை உடைக்கப்படவேண்டும் (7:19). ஒரு பெண்மணி எந்திரக்கல்லைத் தூக்கிப்போட்டு அபிமலேக்கைக் கொன்று போட்டாள் (9:53). தோலா என்னும் பெயர் புழு என்று பொருள்படும். ஒரு படைத்தலைவனுக்கு உகந்த பெயர் அதுவன்று (10:1). சிம்சோனின் தாயை முதன்முதலில் சந்திக்கும்போது பெயர் சொல்லப்படாதவளாக, பிள்ளையற்றவளாகவே காண்கிறோம் (13:2). கடைசியில், அவன் படைக்கலன் என்று கருதுவதற்கு எத்தகுதியும் இல்லாத ஒரு கழுதையின் தாடையெலும்பை எடுத்து, அதினாலே 1000 பேரைக் கொன்றுபோட்டான் (15:15).

தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுதல்

பெப்ரவரி 26

தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோ.5:44)

மனிதனாலும் தேவனாலும் ஒரேநேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது என்றே கர்த்தர் இச்சொற்களின் வாயிலாக அறிவுறுத்துகிறார். மனிதர்களால் வரும் புகழை நாடிச் செல்வோமென்றால், நமது விசுவாச வாழ்க்கையில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று வலியுறுத்துகிறார்.

இதற்கொத்த கருத்தினை அப்போஸ்தலனாகிய பவுல், ”நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே” என்று கூறி மனிதனால் வரும் புகழ்ச்சியையும், தேவனால் வரும் புகழ்ச்சியையும் ஒருங்கே விரும்பவது சரியன்று என்று தெளிவுறுத்துகிறார்.

இதனை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக விளக்குகிறேன். இளைஞன் ஒருவன் இறையியலில் முதுகலைப்பட்டம் வாங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான். மேலும், அதனை அங்கீகாரம் பெற்ற  பல்கலைக்கழகத்திலிருந்து பெறவேண்டும் என்று நினைத்தான். ஆனால், விசுவாசத்தைக் குறித்த அடிப்படை உண்மைகளை மறுத்துப் போதிக்கும் பல்கலைக் கழகங்களே அவ்வித அங்கீகாரததைக்; கொண்டிருந்தன. ஒருவர் தன்னுடைய பெயருக்குப் பின்னால் பட்டத்தை எழுதவேண்டுமாயின், அறிஞர்கள் என்று கருதப்படும், கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களிடமிருந்தே அதனைப் பெறவேண்டும். அதன்நிமித்தம் அப்பயிற்சியில் அவன் தீட்டுப்படுகிறான். முன்போல அவன் உறுதியுடன் பேசுவதில்லை.

இவ்வலகில் ஒரு பேரறிஞர் என்றோ, அறிவியல் மேதை என்றோ அறியப்படவேண்டுமாயின் அங்கு ஆபத்து மறைந்திருக்கும். வேதாகம அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அவர் ஆளாகிறார். உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய உபதேசங்களில் கண்டிப்பற்ற முறையில் நடந்துகொள்வதோடு அக்கருத்துக்களைக் குறைகூறிப் பேசவும் வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார்.

வேதபாட பள்ளிகளும் அவ்வகை வேதனைக்குள்ளாகின்றன. கல்வித் துறையில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தங்களது பெயரைப் பதிவு செய்வதா, வேண்டாமா என்ற எண்ணம் அவர்களை வருத்துகிறது. “அங்கீகாரம் என்னும் இச்சை வேதாகமக் கொள்கைகளை வலுவிழக்கச் செய்துவிடும். ஆவியானவரின் செயல்பாடு அற்ற மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட உலகீய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு அப்பள்ளிகள் சென்றுவிடுகின்றன.

தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுதலே தகும். அதனையே நாம் பெரிதும் நாடவேண்டும். அதற்கு மாறானதை நாடுவோமெனில் அதற்காகப் பெரிய விலைகொடுக்கவேண்டியவர்களாயிருப்போம். “சத்தியத்தை விற்று நாம் பெறும் நாணயத்தில், நிச்சயமாகவே அந்திக் கிறிஸ்துவின் உருவம் மங்கலாய்த் தெரியும்”.

விசுவாசத்தின் அளவிற்குத்தக்க வெற்றி

பெப்ரவரி 25


உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்.9:29)

தம்மால் அவர்களுக்குப் பார்வையளிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பார்வையற்ற இருவரிடம் வினவியபோது, அவர்கள் அவ்வாறு விசுவாசிக்கிறதாக விடைபகர்ந்தனர். அப்பொழுது அவர்களுடைய கண்களை அவர் தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படி ஆகக்கடவது” என்றார். உடனே அவர்கள் பார்வையைப் பெற்றனர்.

நாம் போதுமான அளவு விசுவாசத்தை உடையவர்களாக இருந்தால் நாம் விரும்பியபடி செல்வத்தையும், உடல்நலத்தையும் மற்ற எதையும் பெறலாம் என்ற முடிவுக்கு வருவது மிக எளிது. அதில் எவ்வித உண்மையுமில்லை. அதற்கு மாறாக, கர்த்தருடைய சொற்களையோ, தேவனுடைய வாக்குறுதிகளையோ அல்லது திருமறையில் நமக்களிக்கப்பட்ட கட்டளைகளையோ நமது விசுவாசம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இல்லையெனில் அது நம்புதற்கரிய வெறும் ஆசையாய்ப் போய்விடும்.

நமது விசுவாசத்தின் அளவைப் பொருத்தே, தேவனுடைய வாக்குறுதிகளை நாம் சார்ந்திருக்கிறோம் என்ற உண்மையே மேற்கூறிய வசனம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. சீரியர்கள் முறிய அடிக்கப்படுவார்கள் என்னும் வாக்குறுதி மன்னர் யோவாசுக்கு அளிக்கப்பட்டது. அப்பொழுது தன்னுடைய அம்பை எடுத்துத் தரையில் அடிக்கும்படி எலிசா அவனிடம் கூறினான். யோவாஸ் மும்முறை அடித்து நிறுத்திவிட்டான். ஐந்து அல்லது ஆறுமுறை அடிந்திருந்தால் அவன் சீரியரைத் தீர முறியடித்திருப்பான் என்று அறிந்திருந்த எலிசா கோபம்கொண்டு யோவாஸ் மூன்றுமறை மட்டுமே சீரியரை முறியடிப்பான் என்று கூறினான் (2.இராஜா.13:14-19). அவனுடைய விசுவாசத்தின் அளவின்படி அவனுக்கு வெற்றிகிட்டியது.

சீடர்கள் வாழ்விலும் அதுபோலவே நடைபெறும். யாவற்றையம் துறந்து நாம் விசுவாச வாழ்க்கையை நடத்தும்படி அழைக்கப்பட்டுள்ளோம். பூமியில் செல்வத்தைச் சேர்ப்பதற்கு நாம் தடைசெய்யப்பட்டுள்ளோம். இக்கட்டளைக்குக் கீழ்ப்படிய எந்த அளவிற்கு நாம் தைரியம் கொண்டிருக்கிறோம். காப்பீட்டுப் பத்திரங்கள், சேமிப்புக் கணக்குகள், பங்குகள், செல்வங்கள் இவைகளை நாம் உடையவராக இருக்கக்கூடாதா? அதனுடைய விடையை “உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது” என்னும் வசனத்தில் காணுங்கள். “என்னுடைய குடும்பத்தின் தேவைக்காக அயராது உழைப்பேன். தேவைக்கு மிகுதியாகப் பெறுவதைக் கர்த்தருடைய ஊழியத்திற்கு அளிப்பேன். பிற்கால வாழ்க்கைக்குக் கர்த்தரையே சார்ந்திருப்பேன்” என்று நீங்கள் முடிவெடுப்பீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுடைய வருங்காலத்தை அவர் காத்துக்கொள்வார்.

கர்த்தரும், அவருடைய சொற்களும், ஒருநாளும் உண்மையற்றுப்போவதில்லை. மாறாக, மனித அறிவின் அடிப்படையில் எதிர்நோக்கும் வியாதியின் நாளுக்குத் தேவையென்று செல்வத்தைச் சேர்த்து வைப்போமாயின், அவர் நம்மீது தொடர்ந்து அன்பு பாராட்டி நம்மைப் பயன்படுத்தி நமது விசுவாசத்திற்குத்தக்கவாறு அப்படிப்பட்ட நாளை நம் வாழ்வில் வரச்செய்வார்.

எசேக்கியேல் 47 வது அதிகாரத்தில் நாம் காணும் ஆலயத்தினின்று ஓடி வருகிற வெள்ளத்தைப் போன்றதே விசுவாசம். கணுக்கால் அளவோ, முழங்கால் அளவோ, இடுப்பளவோ இன்னும் அதிகமாகவோ நீர் பாய்ந்துவரும். அதில் நீங்கள் நீந்தவும் செய்யலாம்.

தேவனுடைய நற்பேறு அவரை முற்றிலும் நம்புகிறவர்களையே சாரும். அவருடைய உண்மையும், போதுமான தன்மையையும் நாம் நிரூபிப்போமாயின், நமது பிற்கால வாழ்வினில் கைத்தடியும், உன்றுகோலும், தலையணைகளும் தேவையில்லை. “நீரில் ஒருமுறை நடப்பீர்கள் என்றால், படகில் செல்ல நீங்கள் விரும்பமாட்டீர்கள்”

தந்தையைப் போலும் தனையன்

பெப்பரவரி 24

ஆதாம்… தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான் (ஆதி.5:3)

நமது சாயலாக, நமது ரூபத்தின்படி பிள்ளைகளைப் பெறுவது நமது சரீரப் பிரகாரமான வாழ்வின் அடிப்படை உண்மையாக இருக்கிறது. ஆதாம் தன் சாயலில் ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். சேத்தைக் கண்ட மக்கள், மனிதர்களுடைய வழக்கத்தின்படியே, “தந்தையைப் போலும் தனையன்” என்று கூறியிருப்பார்கள்.
ஆவிக்குரிய வாழ்விலும் நமது சாயலிலே பிள்ளைகளைப் பெறுகிறோம் என்னும் உண்மை நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறதாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நாம் பிறருக்கு அறிமுகப்படுத்துகிறபோது, நம்முடைய குணநலன்களை அவர்கள் எவ்விதச் சிந்தனையுமின்றி ஏற்றுக் கொள்கின்றனர். இது வம்சாவழி இல்லை. மாதரியைப் பின்பற்றுதலாயிருக்கிறது. கிறிஸ்தவர்கள் எங்ஙனம் திகழவேண்டும் என்பதற்கு, அவர்கள் நம்மையே நோக்கிப் பார்க்கின்றனர். எவ்விதக் கருத்தூன்றிய சிந்தனையும் கொள்ளாது நமது நடத்தையை மாதிரியாகக் கருதுகின்றனர். ஒரு குடும்பச் சாயலைப் போலவே அவர்கள் நமது சாயலை வெகுவிரைவில் வெளிப்படுத்துகிறவர்களாகவே காணப்படுவர்.

விசுவாசத்தில் என் பிள்ளைகளாக இருப்போர் வேதத்திற்கு நான் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தையே, அளவுகோலாக கணக்கில்கொள்வர். நான் ஜெபத்திற்கு தரும் இடத்தையே அவர்களும் கொடுப்பார்கள். நான் ஆராதனை செலுத்துகிறவனாக இருப்பேனென்றால், அப்பண்பு அவர்களையும் ஆராதிக்கிறவர்களாக்கும்.

ஒரு சீடனிடம் எதிர்பார்க்கப்படும் அத்தனையும் கடினமான செயல்களையும் நான் கடைப்பிடிப்பேனென்றால், அதுவே எல்லா விசுவாசிகளுக்கும் தகுதியானவை என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். அதற்கு மாறாக, கர்த்தருடைய சொற்களைவிட்டு விலகி, செல்வத்திற்காகவும், புகழ்ச்சிக்காகவும், இன்பத்திற்காகவும் வாழ்வேனென்றால், அவர்களும் என்னையே பின்பற்றுவர்.

கர்த்தருக்கென்று அயராது உழைத்து ஆத்தும ஆதாயம் செய்கிறவர்கள், அனல் உள்ளவராய் உழைக்கும் ஊழியர்களைப் பெற்றெடுப்பர். தேவவார்த்தைகளை மனப்பாடம் செய்து அதில் தியானமாயிருந்து களிகூருகிறவர்கள், தங்களுடைய ஆவிக்குரிய பிள்ளைகளை அத்தகைய சீரிய நோக்கமுடையவர்களாகக் காணச்செய்வர்.

சபைகூடிவருதலை நீங்கள் புறக்கணிப்பீர்கள் என்றால், உங்களுடைய பாதுகாப்பில் இருப்பவர்களும் அவ்வாறே செய்வார்கள். சபைக் கூட்டங்களுக்கு நீங்கள் காலதாமதாமாகச் செல்வீர்களெனில் அவர்கள் சரியான நேரத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. நீங்கள் கடைசி வரிசையில் அமர்வீர்களென்றால் அவர்களும் அவ்வாறே அமர்வார்கள்.

மேற்கூறியவைகளுக்கு மாறாக, நீங்கள் ஒழுங்குடனும், சார்ந்திருக்கத்தக்கபடியும், காலதாமதமின்றியும் திறம்பட உழைக்கிறவர்களாக இருப்பீர்களாயின் உங்களுடைய தீமோத்தேயுக்கள் உங்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவார்கள்.

“என்னுடைய சாயலில் பிள்ளைகளைப் பெற்றெடுத்தால், அதில் நான் மனநிறைவு அடைவேனா?” என்னும் கேள்வி நம் ஒவ்வொருவரையும் எதிர்கொள்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்“ என்று கூறியிருப்பதைக் கவனிப்போம். (1.கொரி.4:16). நம்மால் அவ்வாறு கூறமுடியுமா?

புத்திமான் புத்தி கேட்பான்

பெப்பரவரி 23


புத்திமான் கேட்பான். (நீதி.1:5)

புத்திமான் கேட்பான், மதியீனனோ கேட்கமாட்டான் என்று அவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை நீதிமொழிகள் நூல் வலியுறுத்திக் கூறுகிறது.

பிறர் கூறுவதைக் கேட்பதற்கு மதீயீனன் மனத்திறன் படைத்தவன் அல்லன் என்று இந்நூல் கூறவில்லை. பிறர் கூறுவதைப் புரிந்துகொள்ளும் திறன் படைத்தவனாகவே அவன் இருக்கிறான். ஆனாலும், அவனிடம் எதையும் சொல்வதற்கு அவன் இடங்கொடுப்பதில்லை. சிந்தித்துச் செயலாற்றுவதில் திறம்படைத்தவன் என்றும், முடிவில்லா ஞானம் உடையவன் என்றும் தன்னைக் குறித்து அவன் கருதுகிறான். நண்பர் எவரேனும் அவனுக்கு அறிவுரை கூறவிழைந்தால், அவனுடைய எள்ளிநகையாடுதலைப் பரிசாகப் பெறுவர். தன்னுடைய பாவத்தினாலும், மதீயினத்தினாலும் உண்டாகிற வீழ்ச்சியிலிருந்து தப்பிக்க அவன் முயற்சி செய்வதைக் காணும் அவனுடைய நண்பர்களால், அவன் அடையும் வீழ்ச்சியினின்று அவனைக் காக்க இயலாது. ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மற்றொரு இக்கட்டை நோக்கி அவன் செல்லுவான். அவனுடைய பொருளாதார நிலை சீர்குலையும். அவனது தனிப்பட்ட வாழ்வும் சீரழியும். அவனுடைய தொழிலும் குழப்பத்தின் எல்லையில் நிற்கும். தானே தனக்கு மிகப்பெரிய எதிரி என்பதை அறியாது, வாழ்க்கை தனக்கு மாபெரும் தொல்லையைத் தருகிறது என்று தன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் கூறுவான். மற்றவர்களுக்குத் தாராளமாக அறிவுரை நல்கும் அவன், தன்னுடைய வாழ்க்கையைச் சீராக நடத்த மறந்து போவான். முன் யோசனையின்றித் தாறுமாறாகப் பேசும் அவன், மற்றவர்களுடைய அறிவு, அமைதி, மற்றும் உண்மையுடைய பேச்சிற்குத் தடையாய் நிற்பான்.

ஆனால் புத்தியுள்ளவன் நற்கூறுகளால் உண்டாக்கப்பட்டிருக்கிறான். மனிதர்கள் யாவரும் முதல் மனிதனாகிய ஆதாமின் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவன் அறிந்திருக்கிறான். சில இடையூறுகளில் தான் கவனிக்காமல் விட்டுவிட்ட அம்சங்களை மற்றவர்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறான். சிலவேளைகளில் தனக்கு ஞாபகமறதி உண்டாகியிருக்கும் என்று ஒப்புக்கொள்கிறான். மற்றவர்கள் கற்றுத்தருவதை, தான் சரியான முடிவெடுப்பதற்குத் தேவையான அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்கிறான். மற்றவர்கள் தரும் அறிவுரைகளை நாடி வேண்டுகிறான். ஏனெனில், “ அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் பாதுகாப்பு உண்டாகும்” என்பதை அவன் அறிந்திருக்கிறான் (நீதி.11:14). எல்லோரைப் போலவும் சில தருணங்களில் தவறுசெய்கிறான். ஒவ்வொரு முறை தோல்வியைச் சந்திக்கும்போதும், அது தான் வெற்றி பெறுவதற்கான படி என்று கருதி, அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்கிறான். அவனுடைய தவறைப் பிறர் கடிந்துணர்த்தும்போது, “நான் தவறிழைத்து விட்டேன், மன்னியுங்கள்” என்று கூறி நன்றிபாராட்டுகிறான். புத்தியுள்ள பிள்ளைகள் பெற்றோர்களின் ஒழங்கு நடவடிக்கைக்குக் கட்டுப்படுகின்றனர். மதியீனமான பிள்ளைகள் எதிர்த்து நிற்கின்றனர். ஒழுக்கத்தின் தூய்மையைக் காப்பதற்குத் தேவையான கற்பனைகளுக்கு ஞானமுள்ள இளைஞர்கள் கீழ்ப்படிகின்றனர். மூடர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவர். கர்த்தருக்குப் பிரியமாக இருக்கின்றனவா என்று ஞானமுள்ள இளைஞன் எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பான். மூடனோ தனக்குப் பிரியமானபடி செய்வான்.

இவ்விதமாகப் புத்திமான் புத்தியில் வளருகிறான். அறிவீனன் மாற்ற முடியாதபடி தன் அறிவீனத்திலே சிக்கித் தவிக்கிறான்.

இடம்பெயரும் இறைப்பணியாளர்

பெப்ரவரி 22

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்… (எபேசி.4:12).

புரட்சிகரமான உட்கருத்தைக் காணுங்கள்! எபேசியர் நான்காவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள வரங்கள் பரிசத்தவான்கள் சீர்பொருந்துவதற்காகவும், அவர்கள் நற்செய்திப் பணியினை நிறைவேற்றுவதற்காகவுமே தரப்பட்டுள்ளன. பரிசுத்தவான்களின் தொடரும் பணி வரங்களைப் பெருகச் செய்யும். ஒருவர் தான் இறைப்பணியாற்றும் இடத்தில் குறுகிய காலத்திற்குள் தனது பணியை நிறைவேற்றிவிட்டு வேறு இடத்தை வென்றிட நாடிச்செல்வாராயின் அதுவே கிறிஸ்தவப் பணியில் அடையும் வெற்றியாகக் கருதப்படும்.

இதைத்தான் பவுல் தன் வாழ்வில் நிறைவேற்றினார். எடுத்துக்காட்டாக, தெசலோனிக்கேயா பட்டணத்திற்கு வருகை புரிந்த பவுல் மூன்று ஓய்வுநாட்கள் நற்செய்தியை வழங்கினார். அதன் விளைவு, ஆங்கு செயலாக்கம் மிக்க சபை நிறுவப்பட்டது. சபை நிறுவுதலில் இத்தகைய விரைவு அபூர்வமானது. ஆயினும், எபேசுப் பட்டணத்தில் தங்கியிருந்த இரண்டாண்டுக் காலமே அவர் சபை நிறுவுவதற்கென எடுத்துக்கொண்ட நெடுங்காலமாகும்.

சொல்லப்பட்டுள்ள வரங்களில் ஏதொன்றையும் தம்மக்கள் சார்ந்திருக்கக்கூடாது என்றே தேவன் விரும்புகிறார். வரங்கள் தியாகம் செய்யப்படத்தக்கவையே. விசுவாசிகள் என்றென்றும் திறமைமிக்க சொற்பொழிவுகளையே நாடுவார்கள் எனில், ஊழியத்தில் பங்கவகிக்காமல், அடையவேண்டிய ஆவிக்குரிய வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். தேவன் விரும்பும் நற்செய்தி விரிவாக்க வளர்ச்சி உலகில் நிகழாது போய்விடும்.

வெளிநாட்டிலிருந்து வந்து வெற்றிமிக்க இறைப்பணியைச் செய்த ஊழியர், தனக்குப்பின் தான் செய்த பணியினைத் தொடர வேறோரு ஊழியரைக் கொண்டுவரமாட்டார் என வில்லியம் டில்லான் என்பவர் உரைத்துள்ளார். இவ்வுண்மை உள்நாட்டு ஊழியருக்கும் பொருந்தும். ஒரு உழியரின் பணி நிறைவேறிய பின்னர், அச்சபையின் பொறுப்பை அங்கிருக்கும் விசுவாசிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும். மேடைச் சொற்பொழிவாளர்களை அச்சபை தேடி அலையக்கூடாது.

பொதுவாக நற்செய்திப் பணியாளர்கள் தஙர்கள் பணியாற்றும் இடத்தை வாழ்வின் நிரந்தர நியமனமாகக் கருதுகின்றனர். பிறரால் அங்ஙனம் சிறப்பாகப் பணியாற்ற இயலாது எனவும் அவர்கள் காரணம் காட்டுகின்றனர். தாம் அங்கிருந்து இடம்பெயர்ந்ததால் சபைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துபோகும் என்று நினைக்கின்றனர். மற்றவர்கள் சரியான முறையிலும் நம்பிக்கைக்குரிய வகையிலும் பணியினைத் தொடரமாட்டார்கள் என்றும் குறைகூறுவர். ஆனால், மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டுமே. அதற்கென சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டுமே. பிறரும் பயிற்சிபெற வேண்டும். பொறுப்புகள் வகிக்கவேண்டும். வளர்ச்சி காணப்படவேண்டும். ஒரு குறிப்பிட்டபோதகரோ, நற்செய்திப்பணியாளரோ இன்றி, சபை தொடர்ந்து செயல்ப்படும் என்ற நிலை வந்தவுடன் அவர் மனக்கிலேசம் அடையவேண்டுவதில்லை. அதனை மனமகிழ்ச்சிக்குக் காரணம் என்றே கருதவேண்டும். தேவையுள்ள பிறஇடத்திற்குச் செல்வதற்கு அவருக்கு விடுதலை கிடைக்கிறது என்றே கருதவேண்டும்.

ஒரு மனிதர் எவ்வளவுதான் வரம் பெற்றவராக இருப்பினும், அவரை நிரந்தரமாகச் சார்ந்து கட்டப்படும் இறைப்பணி தகுதியற்றது என்றே சொல்லவேண்டும். அவருக்கு அங்கு வேலையில்லை என்று சொல்லும் அளவிற்கு அவருடைய திறமை மற்றவர்களிடம் பெருகவேண்டும். பரந்த இவ்வுலகில், அத்தகையோர் வேலையற்றுப்போக தேவன் விடமாட்டார்.

தெரிந்துகொள்ள வேண்டிய சுற்றத்தார்

பெப்ரவரி 21
என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். (2.இராஜா.4:13).

சூனேம் ஊரில் வசித்த கனம் பொருந்திய பெண்மணி விருந்தோம்பலில் சிறந்தவள். அவ்வூரின் வழியாக எலிசா பயணம் மேற்கொண்டபோதெல்லாம் அவனுக்கு விருந்து பரிமாறினாள். மேலும் அவன் தங்குவதற்குப் படுக்கை அறை கட்டும்படித் தன் கணவனுக்கும் ஆலோசனை நல்கினாள். நற்பண்புகள் மிக்க நங்கைக்கு நன்மைசெய்ய விரும்பினான் எலிசா. அரசனிடமோ படைத் தலைவனிடமோ ஏதேனும் பரிந்துரைக்க வேண்டுமோ என வினவினான். “என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன்“ என்று பாங்குடன் பதிலுரைத்தாள் சூனேம் பெண்மணி. “என் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக இருக்கிறது” என்பதே அதன் பொருள். “என்னோடு வாழும் எளிய மக்களிடம் அன்புகூருகிறேன், மேன்மக்களாகக் கருதப்படுகிறவர்களுடன் உறவுகொண்டாட எவ்வித விருப்பமும் எனக்கில்லை” என்பதே அவளுடைய சொற்களின் பொருளாயிருந்தது. உண்மையாகவே அப்பெண் ஞானம் மிக்கவள். புகழ்ச்சியும், செல்வமும், அதிகாரமும் உடையவர்களோடு பழகுவது மனநிறைவைத் தரும் என்று எண்ணுவோர், உலகத்தில் சிறந்தவர்கள், மெய்யாகவே சமுதாயத்தின் முன்னிலையில் இருக்கமாட்டார்கள் என்னும் உண்மையைக் கற்றறிய வேண்டும்.

நற்செய்திப் பணியினை மேற்கொண்டு, உலகினில் பெரும் புகழும் பெற்ற சிலரை நான் அறிந்திருக்கிறேன். ஆயினும், அன்னாரது அனுபவங்கள் நமக்குப் பெரும் ஏமாற்றத்தையே வருவிக்கின்றன. கிறிஸ்தவப் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் வெறும் மதி மயக்கமே ஆகும். சிலரைத் தெரிந்துகொள்ளலாம் என்று எனக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படுமாயின், தாழ்மையுடைய, தெய்வீக குணம்படைத்த, உறுதிப+ண்ட மனிதர்களையே நான் தெரிந்துகொள்வேன். இவ்வுலகினில் அறியப்படாதவராயினும் அவர்கள் விண்ணுலகில் நன்கு அறியப்பட்டவர்கள்.

இதற்கொத்த கருத்தினை விளம்பும் யு.று. டோசர், “பரிசுத்தவான்களை நான் நம்பகிறேன். இன்றைய நாட்களில் பலதரப்பட்ட கிறிஸ்தவர்கள் உள்ளனர். மனம்மாறிய திரையுலகக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தங்கள் பெயரை முன்நிறுத்தும் திருத்தொண்டர்கள் பலரை நான் அமெரிக்காவிலும், கனடாவிலும் கண்டிருக்கிறேன். அவர்கள் யாவரும் உண்மையான மனமாற்றத்திற்கு வெகு தொலைவில் நிற்கின்றனா. நான் மெய்யான பரிசுத்தவான்களைக் காணவிழைகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காட்டுவோரைக் காண வாஞ்சை கொண்டுள்ளேன். மனிதனின் நெஞ்சினில் கர்த்தரின் அழகு மிளிரவேண்டும். இங்ஙனம் வாழும் பரிசுத்தவான் காந்தத்தைப்போலச் செயல்ப்படுகிறான். மார்தட்டித் தம்பட்டம் அடிக்கும் சமயக்காவலர், அறங்காவலர் அகியோரைக் காட்டிலும் அவன் மேன்மையானவன்” எனக் கூறியுள்ளார்.

சார்ல்ஸ் சிமியோனும் இக்கருத்தை இவ்வாறு வலியுறுத்துகிறார்: „ என் வாழ்வின் தொடக்கமும் முதல் இந்நேரம் வரை உலகில் சிறந்தவர்களுடன் ஈடுபாடு உடையவனாக இருக்கிறேன். கர்த்தர் நிமித்தம் அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குத் தயை பாராட்ட அயராது முயற்சி செய்கின்றனர்.

“என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன்“ என்னும் சூனேம் பெண்மணியின் சொற்களில் ஆவிக்குரிய கருத்து வண்ண மலர்த் தோட்டத்தைப் போன்று மிளிருவதைக் கண்டு போற்றுவோம்.

கிறிஸ்தவப் பணியில் அவசரம்

பெப்ரவரி 20

நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் (ஆதி.24:33)

தனது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை ஆபிரகாமின் வேலைக்காரன் உணர்ந்திருந்தது போன்று, நாமும் நம் வாழ்வின் நோக்கத்தை உணர்ந்திருத்தல் இன்றியமையாதது ஆகும். ஒரே நேரத்தில் அனைத்துத் திக்குகளையும் நோக்கி விரைவாக நாம் ஓடவேண்டும் என்பது இதன் பொருளன்று. நரம்புகள் தெறிக்க எல்லாச் செயல்களையும் செய்யவேண்டும் என்பதும் இதன் பொருளன்று. நமக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பினுக்கு முதலிடம் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

இராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவர் கூறியுள்ள சொற்களுக்கு நாம் இசைந்து செயல்ப்படுவது தகுதியானது. „காடுகள் அழகுபொருந்தியவை, இருள் சூழ்ந்தவை, நெருக்கமானவை. நாம் அங்கு அமர்ந்திருந்து ஓய்வெடுக்கமுடியாது. ஆனால் நான் கைக்கொள்ள வேண்டிய வாக்குறுதிகள் ஏராளம். உறங்குவதற்கு முன்னர் செல்லவேண்டிய இலக்கு வெகுதொலைவு“.

ஏமி கார்மைக்கேல் அம்மையாரும் இதே ஆவியைப் பற்றிக்கொண்டவராக, „ தேவனுடைய சூளுரை என்மீது விழுந்த கடமையாகும். மரத்தின் கீழ் நிழலில் விளையாடுவதற்கு நான் தங்கமாட்டேன். தோட்டத்தில் பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பது என் பணியல்ல. எனக்களிக்கப்பட்ட பணியினை நிறைவேற்றிக் கணக்கினை ஒப்புவிக்கும்வரை ஓய்ந்திருக்கப்போவதில்லை“ என்று எழுதியுள்ளார்.

வேறோரு இடத்தில் அம்மையார் எழுதியுள்ளதாவது: „ நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பன்னிரண்டு மணிவேளை மிகக் குறுகியதாக இருக்கிறது. பெற்ற பொறுப்பினை உணர்ந்து, விரைவினில் நிறைவேற்ற நான் கொண்டிருக்கும் உறுதி என்னில் மடிந்துபோகக் கூடாது. நல்ல மேய்ப்பரே, மலைகளில் உம்முடன் சேர்ந்து தேடுகிறவராக எப்பொழுதும் நாங்கள் காணப்படவேண்டும்.

சார்ல்ஸ் சிமியோன் எங்கு சென்றிடினும், கென்றி மார்ட்டின் என்பவரது படத்தை எடுத்துச் செல்வாராம். தனது அறையில் அமர்ந்து வேதத்தைப் படிக்கும் வேளையில் தன்னைப் பார்த்து, „ஊக்கத்துடன் செயல்ப்படு. கவலையற்றுப்போகாதே, கவலையற்றுப்போகாதே“ என்று மார்ட்டின் சொல்வது போன்று சிமியோனுக்குத் தோன்றும். அதற்கு சிமியோன்“ நான் ஊக்கத்துடன் செயலாற்றுவேன், நான் ஊக்கத்துடன் செயலாற்றுவேன். ஆத்துமாக்கள் அழிந்துபோகின்றன, நான் கவலையற்றவனாய் இருக்கமாட்டேன். இயேசு கிறிஸ்துவின் திருப்பெயர் மகிமையடையவேண்டும்“ என்று பதிலுரைப்பார்.

அச்சமின்றித் துணிவுடன் செயலாற்றிய அப்போஸ்தலனாகிய பவுல் உரைத்த சொற்களில் காணும் அவசரத்தைக் கவனியுங்கள்,“ஒன்று செய்கிறேன்… கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்“ (பிலி.3:13-14).

மேலும், நம்முடைய நற்பேறு மிகுந்த இரட்சகர் விரைவில் செயல்புரிவதையே தமது நோக்கமாகக் கொண்டிருந்தார். „ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்“ (லூக்.12:50).

ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை உணர்ந்தவர்களாக, பற்பல காரணங்களைக் கூறி ஓய்ந்திருக்கக்கூடாது.

மனிதனின் தாறுமாறான வழி

பெப்ரவரி 19

மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் (நீதி.19:3).

வேதாகமத்தைப் போன்றதொரு மனோதத்துவநூல் வேறு எதுவும் இல்லை. எங்கும் காணக்கிடைக்காத, மனிதனின் நடத்தையைக் குறித்த வெளிச்சத்தை வேதம் தருகின்றது. எடுத்துக்காட்டாக இங்கே ஒரு மனிதனைக் காண்கிறோம். அவனுடைய வழி தாறுமாறானது, அது அவனுடைய வாழ்வினை உடைத்துப் போட்டது. ஆயினும் தன் குற்றத்தை, தன்தோளில் சுமப்பதை விடுத்து, கர்த்தர் முகமாகத் திருப்பி, தன் எரிச்சலைக் கொட்டுகிறான்.

இது பலருடைய வாழ்வில் எத்தனை உண்iமாய் இருக்கிறது! தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கைசெய்யும் பலர், பின்னர் கேவலமான பாலியல் குற்றங்களில் சிக்கிக்கொள்வதைக் காண்கிறோம். இது அவர்கட்கு அவமானத்தையும், அவகீர்த்தியையும், பொருளாதாரக்குறைவையும் ஏற்படுத்துகிறது. என்றாலும் அவர்கள் மனம்திரும்புகிறார்களா? இல்லை. கிறிஸ்துவை எதிர்த்து நிற்கின்றனர். தாங்கள் செய்த விசவாச அறிக்கையை மறுத்துரைக்கின்றனர். நாத்தீக தீவிரவாதிகளாக மாறிவிடுகின்றனர்.

நாம் அறிந்திருப்பதற்கு அதிகமாகவே கிறிஸ்துவை மறுத்துக்கூறும் செய்கையின் வித்து ஒழுக்கக்கேட்டினில் தொடங்குகிறது எனஇபதைக் காணமுடியும். யு. து. போலக் என்பவர் தான் சந்தித்த ஒரு இளைஞனைப்பற்றிக் கூறியதாவது, வேதத்தைப் பற்றிய பலவிதமான ஐயங்களையும் மறுப்புக்கைளயும் கனல்தெறிக்கக் கொட்டினான். அப்பொழுது போலக் அவனை நோக்கி, என்ன விதமான பாவத்தில் நீ ஈடுபட்டிருக்கிறாய்? என்ற வினவினார். இக் கேள்வியைச் செவிமடுத்த இளைஞன், மனமுடைந்தவனாகத் தனது வாழ்கையில் ஏற்பட்ட கேவலானதும் வெட்கக்கேடானதுமான பாவத்தைக் குறித்து அறிக்கைசெய்தான்.

தன்னுடைய பாவங்களில் விளைவாகவே, மனிதன் கர்த்தருக்கு விரோதமாகச் சினங்கொண்டு பொங்கி எழுகிறான். இதனை று. கு. அடேனி என்பார், தேவன் தடைசெய்த செய்கைகளைச் செய்துவிட்டு அதற்குக் காரணம் அவருடைய அருளுப்பாடே என்று குற்றப்படுத்திக் கற்பிப்பது மனிதனின் இராட்சதத்தனமாகும் என்று எழுதியுள்ளார். பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான் என்னும் கூற்று எத்தனை உண்மையாய் இருக்கிறது. இதனை அப்போஸ்தலனாகிய பேதுரு கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, ….. மனதார அறியாமல் இருக்கிறார் என்று கூறி நினைவுபடுத்துகிறார்.

போலக் என்பார் தமது கருத்தை இவ்வாறு விபரிக்கிறார். தேவனுடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குவதும், தவறுவதும், பெரும்பாலும் ஒழுக்கக்கேட்டின் விளைவே என்னும் பேருண்மையை இது வெளிப்படுத்துகிறது. பொதுவாக, மனிதர்கள் தங்களுடைய பாவத்தை விட்டுவிட மறுக்கின்றனர். அதனோடு தொடர்ந்து செல்வதிலேயே நாட்டங்கொண்டிருக்கின்றனர். மேலும், அவர்களுடைய மாம்சீகம் இயற்கையாகவே தேவனிடத்தில் வெறுப்புக்கொண்டிருக்கிறது. ஒளி ஆராய்ந்து பார்க்கும். வேதம் பாவத்தைத் தடைசெய்யும். ஆயின், இவற்றை மனிதன் விரும்புவதில்லை, எதிர்த்து நிற்கின்றான். இதயத்தைப்போல, தலை அவ்வளவு கேடு நிறைந்தது அன்று.

நீதியை நிறைவேற்றும் நியாயாதிபதி

பெப்ரவரி 18

சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ? (ஆதி.18:25)

ஆழ்ந்த சிந்திப்பினும் அறிய இயலா அரிய மர்மங்கள் பல உள்ளன. என்றாலும் சர்வலோகத்திற்கும் நியாயாதிபதியாக வீற்றிருப்பவர் தேவனே என்றும், அவர் அளவிடுவதற்கு இயலாவண்ணம் நீதியால் நிறைந்திருக்கிறார் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். இப்பேருண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது.

தத்தம் செயலுக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்ய வயதை எட்டாது, நித்தியத்திற்குள் மறைகிற குழந்தைகளின் நிலை என்ன என்று நாம் அறிவதில்லை. “தேவனுடைய இராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்னும் கூற்று நம்மில் பலருக்கு மனநிறைவை அளிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் திருஇரத்தத்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு என்று நம்புகிறோம். இதில் மனநிறைவு பெறாதவர்கள், மேலே சொல்லப்பட்டுள்ள வசனத்தில் மனநிறைவு அடைவார்கள் என்று கருதுகிறோம். எது சரியோ அதனையே தேவன் செய்கிறவராக இருக்கிறார் என்று நாம் அறியக்கடவோம்.

தெரிந்துகொள்ளுதலைக் குறித்தும், முன்குறித்தலைக் குறித்தும் நீண்ட காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இரட்சிக்கப்படுவதற்கென்று சிலரையும், அதே நேரத்தில் நித்திய அழிவிற்கென்று சிலரையும் தேவன் தெரிந்துகொண்டிருக்கிறாரோ? கால்வின் கூட்டத்தாரும், அர்மீனியரும் இதைப்பற்றி பலவாறு கூறுவர். ஆயின், தேவனிடத்தில் நீதியற்ற தன்மை ஒன்றம் இல்லையென்று முழுநம்பிக்கை கொள்வோம்.

தீயோர் செழித்தலும், நல்லோர் தீமையை அடைவதுமாய்க் காணப்படுதல் அநீதியல்லவா? ஒருபோதும் நற்செய்தியைக் கேட்டிரா புறஇனத்தவரின் முடிவு என்ன என்னும் வினா மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. பாவத்தை ஏன் அனுமதித்தார் என்னும் கேள்வி மனிதனைக் குழப்பமடையச் செய்துள்ளது. சோக நிகழ்ச்சிகள், வறுமைகள், பட்டினிகள், உடலில் ஊனம், மனத்தினில் பாதிப்பு இவையாவும் நம்மை வாயடைத்து நிற்கச் செய்கின்றன. “எல்லாம் தேவனுடைய ஆளுகைக்குள் இருக்குமாயின், இவை யாவற்றையும் அவர் ஏன் அனுமதித்துள்ளார்? என்னும் சந்தேகம் குமுறிக் கொண்டே இருக்கிறது.

கடைசிக் காட்சி எழுதப்படும்வரை காத்திருங்கள். இதுகாறும் தேவன் தவறேதும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நாம் தெளிவாகக் காணும் வேளையில், “சர்வலோக நியாயாதிபதி நீதியாய்ச் செய்தார் என்று அறிவோம்” என்று விசுவாசம் விடைபகரும்.

“தேவனின் எழுத்துக்கள் மகத்தானவை. ஆயினும் தமது குறுகிய பார்வையில் அதனை விளக்கமாக அறிவது அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் எழுத்துக்களைக் கூட்டி அனைத்து மர்மங்களையும் அறியவேண்டுமென்று தவிக்கிறோம். உதிர்ந்த நம்பிக்கைகள், மரணம், வாழ்வு, முடிவில்லா யுத்தம், தேவையற்ற சச்சரவு எதுவும் புரிவதில்லை. என்றாலும் ஒருநாளில் எல்லாம் தெளிவுறத் தெரியும். ஒன்றை அறிவோம். அவர் வழி யாவும் நீதியே”

இடுக்கத்தின் வழியாய் விசாலம்

பெப்ரவரி 17

நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். (சங்.4:1)

“அமைதியான கடல், நல்லதொரு மாலுமியை உருவாக்குவதில்லை” என்னும் கூற்று உண்மையே. பெருந்தொல்லைகளுக்கு உட்படுவதினாலேயே நாம் பொறுமையைக் கற்றுக்கொள்கிறோம். நெருக்கத்தின் வழியாகச் சென்று விசாலத்தைப் பெறுகிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் இடர்ப்பாடுகள் நமக்குப் புத்தி புகட்டும் பாடங்களாக அமைந்துள்ளன. அதன் காரணமாக நாம் பெருந்தன்மை பெற்றவராய் மாறுகிறோம். இதனை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உணர்கிறான். சார்ல்ஸ் கெட்டரிங் என்பவர், „ முன்னேற்றத்திற்கான விலை தொல்லைகளில் உள்ளன. தொல்லையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் கொண்டுவரவேண்டாம். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

பாடுகளே நன்மையைப் பிறப்பிக்கும் ஊற்றாக விளங்குகின்றன என்னும் உண்மைக்குக் கிறிஸ்தவ உலகமே சான்று பகரும்.

“பாடுகள் பறந்து போகும். அதன் பலனோ பரலோகம் தொடரும்” என்னும் அடிகள் இதனை விளக்குகின்றன.

“விண்ணகம் ஏகிடும் வெளிச்சத்தின் பிள்ளைகள்
பன்னரும் இசையினைப் பாங்காய் எழுப்புவர்
மண்ணகம் வாழ்ந்த வேளையில் தோன்றிய
காரிருள் சூழலில் கற்றதாய்ச் சொல்லுவார்.
சோகத்தின் ஆழத்தில் எழுந்த நற்பாடல்கள்
சோதனைக் கூடத்தில் ஒத்திகை கண்டபின்
நேசத்தின் கீதமாய் இனிதுடன் ஒலித்திடும்
தந்தையின் வீட்டினைத் தகைவாய் நிரப்பிடும்”.

என்று ஒரு கவிஞர் இக்கருத்தினை வலியுறுத்துகிறார்.

ஸ்பர்ஜன் இதனை நிகரற்ற முறையில் எழுதியுள்ளார்: “என்னுடைய வசதியான நிலையினாலும், இன்பமான காலத்தினாலும், மகிழ்ச்சியான நேரத்தினாலும் நான் பெற்ற கிருபை ஒரு சல்லிக் காசுக்கும் ஈடாகாது என்று அஞ்சுகிறேன். துன்பத்திலும், வேதனையிலும், இடுக்கண்களிலும் நான் பெற்ற நன்மைகள் ஏராளம். எண்ணிலடங்கா, என்மேல் விழுந்த சுத்தியலுக்கும், என்னைப் பதம்பார்த்த அரத்திற்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன். இடுக்கண் என் இல்லத்தில் காணும் மிகச் சிறந்த கருவியாகும்.

எனினும், ஏன் நாம் வியப்படைகிறோம்? ஏபிரெய எழுத்தாளர் நமக்கு எழுதிக்கொடுத்துள்ள அருஞ்சொற்களைக் காணுங்கள். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாக சமாதான பலனைத் தரும்” (எபி.12:11).

குறைவுடைய மனிதன்

பெப்ரவரி 16

நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு. (நீதி.14:13)

இப்புவி வாழ்வினில் நிலைபேறானது என்று எதைக்குறித்தும் கூற இயலாது. எல்லா நகைப்பிலும் துக்கம் கலந்திருக்கின்றது. ஓவ்வொரு வைரத்திலும் ஒரு குறை உண்டு. ஒவ்வொரு மனிதனும் தன் குணங்களில் ஏதேனும் ஒன்றில் குறை உடையவனாக இருக்கிறான். அஃது சுவைமிக்க மாங்கனியில் இருக்கும் வண்டுபோலக் காணப்படுகிறது.

எந்தக் குறையும் இல்லாதபடி நாம் காணப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பது நன்று. நாம் முழுநிறைவை அடையவேண்டும் என்ற வாஞ்சையை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆயினும், சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு வாழ்வது நன்று. முழுநிறைவை நாம் கதிரவனுக்குக் கீழாகக் காண இயலாது.

தங்களுடைய இல்லத்தில் மட்டுமே சச்சரவு காணப்படுகின்றது என்று இளைஞர்கள் எண்ணுவது இயற்கையே. தங்களுடைய பெற்றோர் மட்டுமே, தொலைக்காட்சியில் காணும் கிறிஸ்தவத் தலைவர்களின் உன்னத குணங்களை உடையவர்களாக இருப்பதில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

தெருவின் எதிர்ப்புறம் கூடுகின்ற கிறிஸ்தவ ஆலயம் சிறப்பாகச் செயல்ப்படுவதாக எண்ணுகிற நமக்கு, நம்முடைய சபை ஐக்கியம் ஏமாற்றம் அளிப்பதாகக் காணப்படுவது இயற்கையே.

முழுநிறைவாக குணங்கள் உடைய நண்பர்களைப் பெறவேண்டும் என்னும் நோக்குடன் தேடி அலைவது எளிது. மேலும், எவ்விதத்திலும் முழுநிறைவான நற்குணங்களை வெளிப்படுத்தும் வாழ்க்கையை நாம் வாழாதிருப்பினும், அவ்வித நிறைவை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது இயற்கையே.

உண்மை யாதெனில், ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட சில குறைகளை உடையவனாக இருக்கிறான். ஒரு சிலர் மற்றவர்களைக் காட்டிலும் தங்களுடைய குறைகளைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றனர். மேலும் எவ்வளவு உயர்வாக ஒருவர் கருதப்படுகின்றாரோ, அவ்வளவு தெளிவாக அவரது குறைகள் வெளிப்படும். ஆகலின், பிற விசுவாசிகளிடம் காணும் குறைகளைக் கண்டு ஏமாற்றம் அடைவதைத் தவிர்த்து, அவர்களிடம் காணும் நற்குணங்களைப் பற்றி வலியுறுத்திப் பேசுதல் நன்று. ஒவ்வொருவரிடத்திலும் ஒருசில நற்குணங்கள் காணப்படும். ஆனால், ஒரே ஒருவரிடம் மட்டுமே அனைத்து நற்குணங்களும் நிறைவாகக் காணப்படும். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

இப்புவி வாழ்வில் முழுநிறைவை நாம் பெறவேண்டும் என்னும் விருப்பம் நிறைவேறுவதில்லை. முழுநிறைவை அடையாத நம்மை தேவன் விட்டுவைத்திருப்பதற்கு ஒரு நோக்கம் உண்டு என்றே நான் கருதுகிறேன். அஃதாவது, அந்நிலையில் இருப்பதினாலேயே குற்றமற்றவரும் மாசில்லாதவருமாகிய கர்த்தரை நோக்கிப் பார்ப்பவர்களாக நாம் வாழ்வோம். நற்சீர்மிக்க நற்பண்புகளின் முழுத் தொகையாகக் கர்த்தர் திகழ்கிறார். ஒழுக்கத்தின் அழகினை நிறைவாய் உடைய அவரிடம் எவ்வித ஏமாற்றத்தையும் நாம் அடையமாட்டோம்.

பிரயாசத்தின் பலன்

பெப்ரவரி 15

உன் ஆகாரத்தைத் தண்ணீர்களின்மேல் போடு.  அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலைனக் காண்பாய் (பிர.11:1).

இங்கு ஆகாரம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதைச் செய்வதற்காகப் பயன்பட்ட தானியத்தையே குறிக்கிறது. எகிப்து நாட்டில் நீர் நிறைந்திருக்கும் இடங்களில் விதை தூவப்படும். நீர் வற்றியபிறகே பயிர் துளிர்க்கும். அது வளர்ந்து கனிதர பல நாட்கள் ஆகும். எல்லாம் உடனடியாக நடந்துவிடுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் எல்லாம் உடனடியாகச் செயல்படவேண்டும் என்றும், அவற்றின் பலன் உடனடியாகக் கிடைக்கப்படவேண்டும் என்றும், அவற்றின் பலன் உடனடியாகக் கிடைக்கவேண்டும் என்றும் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். உடனடியாகப் பருகும் பானங்கள், உடனடியாக உண்ணும் சிற்றூண்டிகள் இவைகளுக்குக் குறைவில்லை. வங்கியிலும் உடனடியாகக் கடன் தருகின்றனர். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் சில பகுதிகளை உடனடியாகத் திரும்பக் காட்டுகின்றனர்.

கிறிஸ்தவ வாழ்விலும், ஊழியத்திலும் அவ்வாறு காண இயலாது. நாம் இரக்கம் பாராட்டுகிறோம். அதன் பலனை உடனடியாகப் பெறுவதில்லை. நமது மன்றாட்டுகள் அனைத்திற்கும் உடனடியாகப் பதில் அளிக்கப்படுவதில்லை. நமது ஊழியங்களும் உடனடியாகக் கனிகளை உருவாக்குவதில்லை.

கிறிஸ்தவப்பணியினை விளக்கும் பொருட்டு, உழவுத்தொழிலின் பருவச் சூழற்சியைப்பற்றி ஆங்காங்கு திருமறையில் சொல்லப்பட்டுள்ளதைக் காண்க. “விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்” “நான் நட்டேன் அப்பொல்லோ நீர் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்” “ முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும்” என்னும் வசனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் வளர்ச்சியைக் குறிக்கின்றன. திராட்சை, மாமரத்தைக் காட்டிலும் விரைவாக வளரும். எனினும் அதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு.

ஆகவே, பிரதிபலன் கருதாது செய்கின்ற நன்மைகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மன்றாட்டுகளுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கும் என்று எதிhபார்ப்பது நமது வளர்ச்சியற்ற தன்மையை எடுத்துரைக்கும். நற்செய்தியை ஒருவரிடம் முதன்முதலாகப் பகிர்ந்தவுடனேயே அவரிடமிருந்து முடிவை எதிர்பார்ப்பது மதியீனமே. கொடுப்பது, மன்றாடுவது, தொடர்ந்து நீண்டதொரு காலத்திற்கு இளைப்படையாது உழைப்பது என்னும் தத்துவமே தகும். ஆகவே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாகப்போவதில்லை என்னும் நம்பிக்கையுடன் செயல்ப்படுவீர்களாக. நீங்கள் ஆற்றிய செயலின் விளைவாக பலனை நீங்கள் காணும்போது, உங்களது பெருமை தலைதூக்கவேண்டாம். அந்தப் பலன், நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு ஊக்கம் ஊட்டுவதாக அமையட்டும். முடிவான பலனைப் பரலோகம் சேரும்வரை அறியமாட்டோம். நமது உழைப்பின் பலனைக் காண்பதற்கு அதுவே சிறந்ததும் பாதுகாப்புமான இடமாகும்.

சூழ்நிலையை முறியடித்தல்

பெப்ரவரி 14

இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் (அப்.4:29-30).

பெருந்தொல்லைகளுக்குட்பட்ட தொடக்ககலாக் கிறிஸ்தவர்கள் சூழ்நிலைகள் மாறவேண்டுமென்று காத்திருக்கவில்லை. மாறாக, அச்சூழ்நிலைகளில் தேவனை மகிமைப்படுத்தினர்.

அவ்வப்போது இம்மாதிரியைப் பின்பற்ற நாம் தவறிவிடுகிறோம். நாம் செயலாற்றுவதற்கு எற்ற சூழ்நிலை உருவாகுமட்டும் காலதாமதம் செய்கிறோம். தடைக்கற்களை இடையூறுகள் என்றே கருதுகிறோம். அவற்றை முன்னேற்றப்படிகள் என்று நினைப்பதில்லை. சூழ்நிலைகளைக் காரணம் காட்டி நாம் ஊழியப் பணிக்குச் செல்வதில்லை.

மாணவன் தனது படிப்பைத் தொடரும்வரை ஊழியத்தில் பங்கு கொள்வதில்லை. தொடர்ந்து வேலைதேடுதல், அலுவலகத்தில் வேலைப்பளு, திருமண ஏற்பாடுகள் ஆகியவை அவனை ஆட்கொள்கின்றன. பின்னர் குடும்பப் பொறுப்புகள், இன்னும் பல அலுவல்கள், ஆகையால், கிறிஸ்தவப் பணியில் ஈடுபடநேரமில்லை. ஆகா, ஓய்வுபெற்ற பின்னர் ஊழியம்செய்யலாம் என்ற எண்ணம் மேலிடுகிறது. ஆனால், ஒய்வு பெற்ற பிறகோ என்ன நடக்கிறது? உடலில் பெலன் குன்றிவிடுகிறது. அவனுடைய நோக்கமும் மாறிவிடுகிறது. இளைப்பாறுதல் அவனுடைய வாழ்வின் நோக்கமாகி அதற்கு அடிபணிகிறான்.

சில வேளைகளில் உள்ளுர் சபையை வழிநடத்துபவர்கள் எண்ணங்களுக்கு உட்பட்டு செயல்புரிய வேண்டியவர்களாக இருப்போம். உண்மையுள்ளவர்களாகவும், கடினமாக உழைக்கிறவர்களாகவும், அவர்கள் இருந்தாலும் மற்றவர்களுடைய ஊழியத்தைப் பாராட்டாது எதிர்த்து நிற்பார்கள். அச்சூழ்நிலைகளில் நாம் என்ன செய்கிறோம்? ஒதுங்கிக்கொள்கிறோம். அவர்களுடைய காலம் முடியட்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் வியத்தகு வகையில் நீண்டகாலம் வாழ்கிறார்கள்! எனவே இவ்வாறு காத்திருப்பதில் பயனேதுமில்லை. யோசேப்பு சிறைவாசம் முடியட்டும் என்று காத்திருக்கவில்லை. சிறையிலேயே தேவனுடைய ஊழியத்தைச் செய்தான். பாபிலோனிய அடிமைத்தனத்திலும் தானியேல் தேவனுடைய வல்லவனாக உயர்ந்தான். பவுல் சிறையிலிருந்து நான்கு நிருபங்களை எழுதினார். சூழ்நிலை மாறவேண்டுமென்று அவர் காத்திருக்கவில்லை.

சூழ்நிலைகள் ஏற்றவையாக ஒருபோதும் இவ்வாழ்வில் காணப்படா. ஒரு கிறிஸ்தவனுக்கு சூழ்நிலை மேம்படும் என்ற வாக்குறுதி தரப்படவில்லை. இரட்சிப்பைப் போன்றே, ஊழியம் செய்வதற்கும் இதுவே அநுக்கிரகக் காலம்.

தன்னுடைய ஊழியத்தைச் செய்ய முழுவதும் சாதகமான காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க விரும்பும் ஒருவன், அதனைக் கண்டடைய மாட்டான் என்று லூத்தர் கூறியுள்ளார். “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்” என்று சாலோமோன் எச்சரிக்கிறதைக் கண்டுணர்க (பிர.11:4).

தகுதியான கடன்

பெப்ரவரி 13

ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோ.13:8).

நாம் கடன்பெறத் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது இக்கூற்றின் பொருளன்று. தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், நீர் வரி அகிய கடன்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளமுடியாது. சில சூழ்நிலைகளில் கடன்பெற்று வீடுவாங்குவது நல்ல சீடனுக்குத் தகுதியாக இருக்கும். வீட்டிற்கு வாடகை தருவதைக் காட்டிலும், அதே அளவு தொகையைக் கடன் தவணையாகச் செலுத்துவது மேல். ஒரு தொழிலை மேற்கொள்ளும்போது வங்கியில் கடன்பெறாமல் அதனை நடத்துவது இந்நாட்களில் முடியாததாக இருக்கிறது.

ஆனாலும் இவ்வசனம் சில பழக்கங்களைத் தடைசெய்கிறது. கடனைத் திருப்பிக் கொடுக்க எவ்வித வழியுமில்லை என்பதை அறிந்தும் கடன் பெறுவதை இது தடுக்கிறது. ஒரு பொருள் அதன் பயன்பாட்டினால் விலை குறையக்கூடியதாக இருக்குமாயின், அப்பொருளை வாங்குவதற்குக் கடன்பெறக்கூடாது. மேலும், திரும்பச் செலுத்தாமல் கடன் நிலுவைத் தொகை பெருகுவதை இவ்வசனம் எதிர்க்கிறது. தேவையற்ற பொருளை வாங்குவதற்காக நாம் கடன்படக்கூடாது. கடன் அட்டைகள் தாராளமாய்ப் புழங்குகின்ற இந்நாட்களில், எப்பொருளைக் கண்டாலும் அதை வாங்குவதற்கு நாம் ஏவப்படுகிறோம். இவ்விதமான தூண்டுதலினால் தலைக்கு மேலாகக் கடன்பெருகுவதை நாம் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். திரும்பச் செலுத்தாத தொகைக்கு அந்நிறுவனங்கள் அதிகமாக வட்டி வசூலிக்கின்றன. இப்படிப்பட்ட கண்ணியில் சிக்குண்டு கர்த்தருடைய பணத்தை வீணடிக்கக்கூடாது.

கடன் கொடுத்தோரின் தொல்லைகளினின்று நம்மைக் காத்துக்கொள்ளவதற்கான அறிவுரையாக இது இருக்கிறது. செலவின் மிகுதியால் கடன் தொல்லை பெருகி, திருமண உறவு முறிந்துபோகிறது. கடனைத் திரும்பச் செலுத்த இயலாதவர் என்ற பெயரையும் நீதிமன்றம் சூட்டுகிறது. இவையாவும் கிறிஸ்தவனின் நற்சான்றினை அழித்துப்போடுபவையாகும்.

நமது வாழ்க்கை முறையைப் பொதுவாக, வருவாய்க்குத் தகுந்த வண்ணம் சீராக நடத்தவேண்டும். பொருளாதாரப் பொறுப்புடையோராய்த் திகழுதல் கிறிஸ்தவர்களுக்கு அழகு. “கடன் வாங்கியவன், கடன் கொடுத்தவனுக்கு அடிமை” என்பதை எப்போதும் நாம் நினைவிற்கொள்ளவேண்டும் (நீதி.22:7).

ஒருவரில் ஒருவர் அன்புகூருதல் என்னும் கடன் கிறிஸ்தவனுடைய தகுதியாக எப்பொழுதும் காணப்படுகிறது. இரட்சிக்கப்படாதவர்களிடம் அன்பு பாராட்டி அவர்கட்கு நற்செய்தியை வழங்க நாம் கடன்பட்டுள்ளோம் (ரோ.1:14). நமது சகோதரரிடத்தில் அன்புகூர்ந்து, அவர்களுக்காக நமது வாழ்வைக் கொடுக்க நாம் கடனாளிகளாயிருக்கிறோம் (1.யோ.3:16). இவ்வகையான கடனால் நாம் சட்டத்தின்பிடியில் அகப்பட்டுக்கொள்வதில்லை. மாறாக, பவுல் கூறுவதுபோல இது அன்பின் சட்டத்தை நிறைவேற்றுகிறதாயிருக்கிறது.

சபைக் கூட்டங்களின் நாயகன்

பெப்ரவரி 12


இந்த மலையிலும் அல்ல, எருசலேமிலும் அல்ல. (யோ.4:21)

யூதர்கள் தொழுதுகொள்வதற்கென்று தேவன் தமது பெயரை எருசலேமில் நிலைநாட்டி இருந்தார். சமாரியக் குடிமக்கள் கெர்சீம் மலையில் தொழுகொண்டனர். ஆனால், தொழுதுகொள்வதற்கான புதிய ஒழுங்கினை சமாரியப் பெண்ணுக்கு, இயேசு கிறிஸ்து கற்பித்தார். “உண்மையாய்த் தொழுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும்,  அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார் (யோ.4:23).

அதுமுதல், தேவனைத் தொழுதுகொள்வதற்குக் குறிப்பிட்ட ஓரிடத்தை தேவன் குறிக்கவில்லை. நமது காலகட்டத்தில் கர்த்தராகிய பரிசுத்தரே பரிசுத்த ஸ்தலமாக இருக்கிறார். விசுவாசிகளின் சபையாக ஒன்று கூடுவதற்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நாயகராக இருக்கிறார். “ஐனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்” என்னும் யாக்கோபின் சொற்கள் நிறைவேறுகிறவைகளாக இருக்கின்றன (ஆதி.49:10).

நாம் இயேசு கிறிஸ்துவினிடத்தில் கூடி வருகிறோம். புனிதமாக்கப்பட்ட ஆலயங்களிடத்திலோ, அலங்கரிக்கப்பட்ட பலகணிகளிடத்திலோ, இசைக் கருவிகளிடத்திலோ அல்லது வரம் பெற்று, சொல்லாற்றல் மிக்க ஒரு மனிதனிடத்திற்கோ கூடி வருவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நம்மைத் தம்மிடத்தில் ஈர்க்கும் தெய்வீகக் காந்தமாக இருக்கிறார்.

இப் புவியில் நாம் ஒன்றாகக் கூடுகின்ற இடத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை. பெரியதொரு மாளிகையிலோ, வயலிலோ, குகையிலோ நாம் எங்கு வேண்டுமாயினும் கூடலாம். உண்மையான தொழுகையின்போது நாம் பரலோகப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைகிறோம். பிதாவாகிய தேவன் அங்கு இருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அங்கு இருக்கிறார்.

இவ்வகை வியத்தகு தெய்வீகக் கூட்டத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம், நமது இதயத்தை ஊற்றி, நாம் தேவனை ஆராதிக்கத்தக்க சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆகவே, நமது சரீரம் இப்புவியில் இருக்கும்போதே, இளைப்பாறுதல் இல்லாமல் போராடுகிற இவ்வுலகைவிட்டு வெகு தொலைவிற்கு நமது ஆவி கடந்து செல்கிறது.

“இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்னும் இரட்சகரின் வார்த்தைகளுக்கு மேற்கூறியவை எதிர்மறையாக உள்ளனவோ? இல்லை, இதுவும் உண்மையே. அவருடைய மக்கள் கூடுகிற இடத்திற்குச் சிறப்பான முறையில் நமதாண்டவர் வருகைபுரிகிறார். அவருடைய திருப்பெயரால் ஏறெடுக்கும் புகழ்ச்சியையும், மன்றாட்டையும் தமது தந்தையினிடத்தில் படைக்கின்றார். நமது நடுவில் சபாபதியாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் கொண்டிருப்பது நாம் பெற்ற நற்பேறு.

மனிதனுடைய மூக்கூறுகள்

பெப்ரவரி 11

ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாயிருக்கிறது (எபி.4:12).

மனிதனுடைய முக்கூறுகளைக் குறித்துத் திருமறை பேசுகின்றபோதெல்லாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் வரிசையிலேயே பேசுகிறது. ஆனால், மனிதன் இச்சொற்களை சரீரம், ஆத்துமா, ஆவி என்ற வரிசையிலேயே பயன்படுத்துகிறான். இறைவன் ஏற்படுத்திய ஒழுங்கை பாவம் தலைகீழாக மாற்றிவிட்டது. ஆகவே சரீரத்திற்கு முதலிடத்தையும், ஆத்துமாவிற்கு அடுத்த இடத்தையும் ஆவிக்குக் கடைசி இடத்தையும் மனிதன் தந்துள்ளான்.

மனிதனுடைய முக்கூறுகளில் ஆவி, ஆத்துமா ஆகிய இரண்டிற்கும் உருவம் இல்லை. ஆவி மனிதனை தேவனோடு ஐக்கியம் கொள்ளச் செய்கிறது. அவனுடைய ஆத்துமாவோ, அவனை மனக்கிளர்ச்சியோடும், உணர்ச்சியோடும் தொடர்புபடுத்துகிறது. ஆவியையும், ஆத்துமாவையும் மிகத் துல்லியமாக நம்மால் பிரித்துக் காட்ட இயலாதெனினும், ஆவிக்குரியது எது, ஆத்துமாவுக்கு உரியது எது என்று நாம் பிரித்தறிந்து கற்றிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆவிக்குரியது என்பது யாது? கிறிஸ்துவை உயர்த்திப் பேசுகின்ற பிரசங்கம். ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் ஏறெடுக்கிற மன்றாட்டு. கர்த்தரிடம் பாராட்டுகிற அன்பினால் ஏவப்பட்டதும், ஆவியினால் பலப்படுத்தப்பட்டதுமான ஊழியம். ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் ஆராதனை இவையாவும் ஆவிக்குரியவை. ஆத்துமாவுக்குரியது யாது? சொல்வளம் மிக்கதும், செய்தியை அழகுறத் தரும் திறமையும், நகைச்சுவைப் பேச்சும் மனிதனிடத்தில் மக்களை இழுக்கும், மற்றவர்களுடைய மனதில் பதியத்தக்கதாக ஏறெடுக்கப்படும் உயிரற்ற, இதய ஈடுபாடு அற்ற ஜெபம், தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட ஊழியம், செல்வச் செழிப்பினை நாடிச் செல்லும் பணிகள், காணக்கூடிய வகையில் மாம்சீகத்தினால் செய்யப்படும் ஆராதனை இவையாவும் ஆத்துமாவிற்குரியன.

புனிதமாக்கப்பட்ட கட்டிடங்கள், சித்திரம் தீட்டிய பலகணிகள், ஆணவமிக்க பதவிகள், ஒளிதரும் தீபங்களும், தூபங்களும் கண்ணிகள் இவற்றைக் குறித்து தேவனுடைய சபை என்ன செய்யவேண்டும்? இன்னும் சற்று நெருங்கி வருவோம். ஊழியப்பணி வளர்ப்பு முயற்சிகள், செல்வத்தைச் சேர்க்கும் கூட்டங்கள், இசைப்பெரும் விழாக்கள் இவற்றைக் குறித்துச் சபை செய்யவேண்டியது என்ன?
ஒரு நடுத்தரக் கிறிஸ்தவப் பத்திரிகையில் வெளிவருகின்ற விளம்பரங்களே, நாம் எவ்வளவு ஆத்துமாவுக்கு உரியவர்களாக மாறிவிட்டோம் என்பதைத் தௌ;ளத் தெளிவாகக் காட்டுகின்றன.

ஊழியங்களில் காணும் வேறுபாடுகளை பவுல் பகுத்துக் காட்டுவதைக் கண்டுணர்க. பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் போன்றவை ஆவிக்குரிய ஊழியங்கள். அவை அக்கினியின் சோதனையில் நிலை நிற்கும். மரம், புல், வைக்கோல் போன்ற ஆத்துமாவிற்கேற்ற ஊழியங்கள் ஆகியவை அக்கினியில் எரிந்து சாம்பலாகிப் போய்விடும் (1.கொரி.3:12).

ஆவிக்கேற்ற ஒருநாள் வாழ்க்கை

பெப்ரவரி 10


நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் (கலா.5:16).

சிலர் சிந்திப்பதுபோன்று, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அது நடைமுறைக்கு ஒவ்வாததுமில்லை. ஆவிக்கேற்ற ஒரு நாள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டுமென்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை இங்கு காணலாம்.

முதலாவதாக, அந்நாளை ஜெபத்தில் தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் அறிந்த எல்லாப் பாவங்களையும் கர்த்தரிடம் அறிக்கை செய்யுங்கள். இதன் காரணமாக நீங்கள் தூய பாத்திரமாகக் காணப்பட்டு எஜமானுக்கு உகந்த பாத்திரமாக பயன்படுவீர்கள். தொடர்ந்து அவரைப் புகழ்ந்து தொழுதுகொள்ளுவதால் உங்களது ஆத்துமா தகுதியுடையதாகும். உங்களுடைய வாழ்வின் கட்டுப்பாட்டை அவரிடம் தாருங்கள். அவரை வாழ்ந்து காட்ட இது உங்களை ஆயத்தப்படுத்தும். “தேவையற்ற திட்டங்களை நீங்கள் தீட்டாமல் அவருடைய ஆளுகைக்குக் கீழாக உங்களுடைய வாழ்வினை ஒப்புவிப்பதாக இச்செய்கை அமையும்.

அடுத்தபடியாக, இறைவனின் சித்தத்தை அறிய திருவெழுத்துகளை உட்கொள்ள நேரத்தைச் செலவிடுங்கள். உங்களுடைய வாழ்வின் தற்போதைய சூழ்நிலைக்குக் காரணங்கள் எவை என்பதையும் உணர்வீர்கள்.

ஆமைதியான தியான நேரத்திற்குப்பிறகு, நீங்கள் நாள்தோறும் செய்கின்ற அலுவல்களைச் செய்யுங்கள். உலகீய அலுவல் யாவும் ஆவிக்குரிய வாழ்வின் பகுதியே. அவற்றைக் கருத்தோடும் உண்மையோடும் செய்யுங்கள். நாளின் இடையிடையே குறுக்கிடுகின்ற பாவத்தை அறிக்கைசெய்து விட்டுவிடுங்கள். நீங்கள் பெறுகின்ற நற்பேறுகளுக்கு நன்றி செலுத்துங்கள். நன்மை செய்யத்தோன்றும் எண்ணங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். தீமையாய் தோன்றுகிற சோதனைகளை எதிர்த்து நில்லுங்கள்.

இந்நாளில் நீங்கள் எதிர்கொள்கிற நிகழ்ச்சிகள் யாவற்றையும் அவருடைய சித்தமாகவும், தடைகளை ஊழியம் செய்வதற்கான வாய்ப்புகளாகவும் கருதுங்கள். தோல்விகள் யாவும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளாகவும் கருதுங்கள். கேரால்ட்டு வைஸ்டிஸ் என்பார் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோளைக் காணுங்கள்.

“பாவபாரத்தை விட்டொழித்து இயேசுகிறிஸ்து நிறைவேற்றிய இரட்சிப்பின் செயலைச் சார்ந்து இளைப்பாறுவது போன்றே, உங்களது வாழ்வு மற்றும் ஊழியத்தின் பாரத்தையும் தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புவித்து இளைப்பாறுங்கள்.

“காலைதோறும் தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும், அவருடைய ஆதிக்கத்திற்கும் உங்களுடைய வாழ்வை ஒப்புவியுங்கள். அவருக்கு மகிழ்வுடன் கீழ்ப்படிய, அவரால் வழிநடத்தப்பட, வெளிச்சத்தைக் காண, கடிந்துகொள்ளப்பட, கற்றிட, பயன்பட, அவருடைய சித்தம் உங்களிலும் உங்கள் மூலமாகவும் நிறைவேற அவரிடம் உங்களை ஒப்புவியுங்கள். அவருடைய செயல்ப்பாட்டை உங்கள் கண்கள் காணா, உங்களுடைய மெய் உணராது. தூய அவியானவரே நமது வாழ்வை ஆளுகை செய்பவர். நமது செயல்களை நிறைவேற்ற நாம் பாராப்படுவதை விட்டொழிவோம். இவ்வகை ஒப்புவித்தல் நமது வாழ்வில் ஆவியின் கனியாக வெளிப்படும். தேவனுடைய மகிமையாகத் திகழும்.

ஊழியத்தில் நண்பர்கள்

பெப்பரவரி 9

நமக்கு விரோதியாய் இராதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் (லூக்.9:49-50)

மேலோட்டமாக இதனைப் படிக்குங்கால், இதற்கு முந்தின நாள் சொல்லப்பட்ட வசனத்திற்கு இது முற்றிலும் மாறுபட்ட கருத்துடையதாகத் தோன்றுகிறது. உண்மையில் இரண்டு வசனங்களுக்கும் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அங்கே நமது இரட்சகர் தம்மிடத்தில் பற்றில்லாத பரிசேயர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாய் இருக்கிறான்“. இங்கே இயேசுவின் திருப்பெயரால் ஒரு மனிதன் பிசாசுகளைத் துரத்தியதைச் சீடர்கள் தடைசெய்தனர். அவன் அவர்களைச் சேராததினாலே அவனைத் தடைசெய்தனர். அவ்வேளையில் இயேசு கிறிஸ்து, „அவனைத் தடைசெய்யவேண்டாம். நமக்கு விரோதியாய் இராதவன் நமது பட்சத்தில் இருக்கிறான்“ என்றார்.

இரட்சிப்பில் கிறிஸ்துவை விசுவாசியாதோர் அவருடைய எதிரிகளாகவும், ஊழியத்தில் அவரை எதிர்க்காதவர்கள், அவருடைய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். கர்த்தருக்காக ஊழியம் செய்கிறவனை நாம் எதிர்க்கலாகாது என்பதே இங்கு நாம் பெறும் அறிவுரை. மற்றவர்கள் ஆற்றும் பணியில் தலையிடாமல், நாம் ஊழியம் செய்வதற்கு இவ்வுலகம் பரந்து கிடக்கிறது. „அவர்களைத் தடைசெய்ய வேண்டாம்“ என்று இரட்சகர் உரைத்த சொற்களுக்கு நாம் இதயபூர்வமாக அடிபணிவோம்.

என்றாலும், சீடர்கள் யாவரும் பிசாசுகளை விரட்டிய மனிதனோடு சேர்ந்து கொள்ளும்படியான கட்டளையைக் கர்த்தரிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் ஊழியத்தில் பயன்படுத்துகிற முறைகள் நமக்கு எற்புடையதாயிரா. சிலர் நற்செய்தியில் சில உண்மைகளை மட்டும் வலியறுத்திக்கூறுவர். சிலருக்குக் கூடுதலான வெளிச்சம் கிடைத்திருக்கும். நாம் தவறு என்று கருதுபவைகளை அவர்கள் செய்ய விடுதலை பெற்றிருப்பர். நாம் இருக்கிற வண்ணமாக, அதே அச்சில் அனைவரும் ஊற்றி எடுக்கப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. என்றாலும் நற்செய்தி வெற்றிபெறும் ஒவ்வொரு தருணத்திலும், பவுல் மகிழ்ச்சி அடைந்ததிற்கு ஒப்பாக நாமும் மகிழவேண்டும்.

„சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நன்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையும்கூட்ட நினைத்து, சுத்த மனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினால் அறிவிக்கிறார்கள். சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன். இன்னமும் சந்தோஷப்படுவேன் (பிலி.1:15-18).

இதனை வலியுறுத்தி சாம சூமார்க்கர் எழுப்பியுள்ள கேள்வியைப் பாருங்கள். „நம்முடைய வாழ்நாட் காலத்தில் இருளுக்கு எதிராக ஒளி நடத்தும் மாபெரும் போரில், நாம் விரும்புகிறபடி போர் செய்யாதவர்களாக இருப்பினும், நம் பக்கத்தில் இருந்து போரிடுகிற கூட்டாளிகளை ஆதரிப்பதன் அவசியத்தை எப்பொழுதுதான் கற்கப்போகிறோமோ? அந்திக் கிறிஸ்துவின் புயலுக்கு எதிராகக் கிறிஸ்தவ அணிகள் ஒருங்கிணைந்து போரிடுவதால் வெற்றி பெறுவோம் என்னும் உண்மையை எங்ஙனம் கற்போம்?