உறுதியாயிரு அன்பாயிரு

உபா.24:1-22

சமுதாயத்தில் பெண்கள், ஏழைகள், அயல்நாட்டவர், அநாதைகள், விதவைகள், அடிமைகள் ஆகியவர்களின் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதை மோசே இப்பகுதியில் அறுதியிட்டுக் காட்டுகிறார்.  மோசே இவைகளை முறைப்படுத்தினாலும், அதன் காரணராகிய கடவுளின் தன்மைகளை இப்பகுதி; வெளிப்படுத்துகிறது.  கடவுள் அன்பு நிறைந்தவர் என்பதோடு உறுதியானவரும் கூட.  எனவே அவரது மக்களும் தமது சமுதாய வாழ்வில் இவைகளை வெளிப்படுத்தி நிலைநிறுத்துவது அவசியமாகிறது. மணமுறிவு: (1-4) திருமணமான பெண்களைப் பாதுகாக்கவே இப்பகுதி எழுதப்பட்டுள்ளது.  மண முறிவு பெற்றுக்கொள்ள வகை செய்வது இப்பகுதியின் நோக்கமில்லை.  மண முறிவு தேவவார்த்தைக்கு அப்பாற்பட்டது.  நடைமுறையிலிருந்து சட்டமாக்கப்படவில்லை (காண்க- மத். 19:7)மக்களுக்கு மதிப்பளித்தல்: ஆடையை அடகுவைத்தவன் குளிரில் நடுங்காத வண்ணமே ஒருவன் அடகை ஒத்துக் கொள்ளவேண்டும்.  உண்மை நியதியையும், இரக்க சிந்தையையும் வெளிப்படுத்தும் வண்ணமே எல்லா முறைமைகளும் கூறப்பட்டுள்ளன.  கடவுள் எகிப்தியரிடமிருந்து மீட்டுக்கொண்டு வந்ததை நினைவூட்டும் வண்ணமே முறைப்படுத்தப்பட்டன.  சமுதாயத்தில் முறைமையாய்ச் செயல்படுதலே கடவுளை முறையாய் ஏற்றுக்கொண்டவரின் கடமையாகும்.

காடி கொடுக்கப்பட்ட இயேசு

தேவகுமாரனுக்கு குடிக்க மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது.

1). சிலுவையி்ல் அறைதவற்கு முன் (மாற்கு15:23)

வெள்ளைப்போலம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்க கொடுக்கப்படும் பானம். ஆனால் கிறிஸ்துவோ முழு வேதனையையும் கசிக்கும்படி அதனை ஏற்கவில்லை.

2). சிலுவையில் மத்தியானத்திற்கு முன் (லூக்கா 23:36)

இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளிநகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இவருக்கு கொடுத்தது. யூதரின் ராஜாவானால் இரட்சித்துக்கொள் என பகிடிசெய்தனர்( 23:37) சிலுவையில் இரண்டாவது வார்த்தைக்கு முன்பு இது நிகழ்ந்தது (23:43) அதன் பின்பு பன்னிரண்டு மணிமுதல் மூன்றுமணிவரை அந்தகாரம் (மாற் 15:33).

3). சிலுவையில் மத்தியானத்திற்குப் பின் (யோவான் 19:29-30, மாற்கு 15:36, )

சங்கீதம் 69:21-22, சங்கீதம் 15 போன்ற வேத வசனங்களில் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது பஞ்சில் தோய்த்து ஈசோப்புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து சுவைத்தபின் முடிந்தது என்றார். சிலுவையின் நான்காது வார்த்தைக்குப் பிறகு (மாற்கு 15:34). ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.

கூடாரத் தம்பதிகள்

ஆக்கில்லா பிரிஸ்கில்லா

 Aquila&Priscilla

 (அப் 18, ரோம 16:3-5, 1கொரி 16:19, 2தீமோ 4:19)

இவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைத்தே பேசப்படுகின்றனர். பொந்து தேசத்தைச் சார்ந்த ஆக்கில்லா குடிபெயர்ந்த யூதராக கருதப்படுகிறார். பிரிஸ்கில்லா பெரும்பாலும்  ரோமப் பெண்ணாக இருக்க வேண்டும். கூடாரப் பணி செய்து வாழ்ந்து வந்தார்கள். பவுல் இவர்களை தமது இரண்டாம் மிஷனரிபணி பயணத்தின்போது கொரிந்தில் சந்தித்தார். அப்போது அவர்கள் கிலவுதியு ராயனின் கட்டளையால் ரோமிலிருந்து வெளியேற்றப்புட்டவர்களாக இருந்தனர். தங்கள் கூடார வாழ்வை கூடாரப் பணி செய்து செலவிட்டனர். பவுலுக்கு தங்கள் இல்லத்தைப் பரிவுடன் திறந்தனர். பரிசுத்த வசனத்தால் மறுபடிப்பிறந்தனர். பிற்கால வாழ்வைத் தொண்டுடன் தொடர்ந்தனர். பவுலும் இவர்களுடன் கூடாரப் பணியைச் செய்துகொண்டே வேதத்தின் மகத்துவங்களை விளம்பினார். கற்றவற்றை வாழ்வில் காட்டினர். எபேசுவில் வைத்து, வாக்கு வலிமை மிக்க அப்பொல்லோவின் பிரசங்கப் பொருளில் பூரணமின்மையைப் புரிந்துகொண்டு தேவ குமாரனின் பூரண வெளிப்பாட்டை அவருக்கு விரிவாக எடுத்துக் கூறினர். 

விளைவு – வாக்கு வலிமை மிகுந்த பிரசங்கி ஒருவர் வாழ்கை மாற்றம் பெற்றார்.  பலரை வார்த்தையால் மாற்றப் புறப்பட்டார்.

சென்றவிடமெங்கும் இவர்கள் வாய் மூடியிருக்கவில்லை. சுவிசேஷ இல்லங்களாக அவர்கள் வீடுகள் விளங்கின. கொருந்திலும் எபேசுவிலும் பின்பு ரோம புரியிலும் அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் சபைகள் நடந்திருக்க வேண்டும்.  இருவரும் ஒருமித்து கூடாரப்பணி செய்தனர். தேவனுக்காக சபைக் கூடாரங்களையும் செய்தனர். ஒரு சிறந்த ஆன்மீக குழு இருவரால் நடைபயின்றது எனலாம். விளைவாக பல இடங்கள் சுவிசேஷத்தை அறிந்தன. சபைகள் உருவாயின.

செழிமையான இல்லமும் சிறப்பான சுவிசேஷப்பணியும் அவர்களால் நடைபெற்றன. உழைத்துப் பிழைத்தவர்கள் ஊழியம்  செய்துகொண்டே ஊழியரையும் தாங்கினர். சுவிசேஷத்திற்காக பவுலுடன் கரங்கோர்த்து நின்ற இந்த உடன் வேலையாட்கள் சுவிசேஷத்திற்காக தலைகளைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.

* சிறந்த விசுவாசத் தம்பதிகள் சிறப்பான சுவிசேஷகர்களாக மிளிரமுடியும்.

* தேவஈவாகக் கொடுக்கும் இல்லத்தை தேவஈவான சுவிசேஷ பரப்பக்கருவியாகப் பயன்படுத்தவேண்டும்.

* உலக குடும்பவாழ்க்கை என்பது தற்காலிகக் கூடாரம்,  அதனை உலகில் தேவ சபையாய் கூடாரம் செய்யப்பயன்படுத்தவேண்டும்.

* உழைத்துக்கொண்டே ஊழியம் செய்து ஊழியர்களைத் தாங்க முடியும்.

* கிறிஸ்த குடும்ப வாழ்க்கையென்பது தனிமை, தீவு வாழ்க்கையல்ல, அது தேவ பிள்ளைகளில் ஐக்கியத்தால் நிறைந்தது.

* விருந்தோம்பல் மூலம் சுவிசேஷ விருந்தைப் பங்குவைக்க முடியும்.

*சரியான அடிப்படையுடன் வேதத்தைக் கற்றுக் கொண்டால், பிரசங்கிப்போரை விடவும் அதிக வசன ஞானமுடன் விளங்க முடியும்.

* தேவைப்பட்டால் சுவிசேஷத்திற்காக தலையை விலையாகக் கொடுக்கவும் விசுவாச குடும்பமாக துணிந்து நிற்கவேண்டும்.

 

சிலுவையால் நமக்குக் கிடைத்தவை

1. பாவப்பரிகாரம் கிடைத்தது எபி – 9:26

2. நியாயப்பிரமாணச் சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது கலா – 3:13

3. நியாயப்பிரமாண அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது – கொலோ 2:14

4.  யூதர்-புறஜாதி என்ற வேறுபாடு அகற்றப்பட்டது. அனைவரும் தேவனுக்குப் பிரியமான பரிசுத்த ஜாதியானோம் –  எபே 2:14-16

5. புத்திரத்துவம் கொடுக்கப்பட்டது – கலா 4:3-5

6. தேவனுக்குச் சமீபமானவர்களானோம் – எபே 2:13

7. தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டோம் – ரோம 5:10

8. பாவ மன்னிப்புக் கிடைத்தது – எபே 1:8

9. சுத்திகரிப்புக் கிடைத்தது – 1யோவா 1:7-8

10. நீதிகரிப்புக் கிடைத்தது – ரோம 5:9

11. ஆக்கினைத் தீர்ப்பு அகற்றப்பட்டது – ரோம 8:1-3, 34-35

12. தேவனுக்காக விலைக்கு வாங்கப்பட்டோம் – 1பேது 1:18-19, 1கொரி 6:20

13.  பாவத்திற்கு மரித்தோம் – கலா6:14, ரோம 6:1-3, 6:8

14. உன்னதத்தின் அனைத்து ஆசீர்களுக்கும் உரிமையாளரானோம் – ரோம 8:32, எபே 1:3

15. மரண பயத்திலிருந்து விடுவிக்கப்பட்டோம் – எபி 2:14-15

16. சாத்தானின் மேல் வெற்றிபெற்றோம் – கொலோ 2:14-17

 

எபேசியர் நிருபத்தில் ஏழுவித கிருபைகள்

(1) கிருபையின் ஐசுவரியம் (ரோ.1:7,  2:6)

(2) கிருபையினாலே இரட்சிப்பு (எபேசி.2:8,5)

(3) தேவனால் அளிக்கப்பட்ட வரமாகிய கிருபை (எபேசி.3:7)

(4) சுவிசேஷம் அறிவிக்கிறதற்கான கிருபை (எபேசி.3:8)

(5) அவனவனுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும் கிருபை (எபேசி.3:8)

(6) தேவ இரகசியங்களை வெளிப்படையாகக் காண்பிக்கக் கூடிய கிருபை (எபேசி.3:11)

(7) இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூருகிற யாவரோடுமிருக்கிற கிருபை (எபேசி.6:24)

லாசருவைக் குறித்து ஏழு காரியங்கள்

Lazarus

(1) வியாதியாயிருந்த லாசரு (யோ.11:2)

(2) மரித்த லாசரு (யோ.11:14-15)

(3) பிரேதச் சிலைகளால் (கை, கால், வாய், முகம்) கட்டப்பட்ட லாசரு (யோ.11:44)

(4) கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டு, நாலு நாளாய் நாறிக்கொண்டிருந்த லாசரு (யோ.11:17,39)

(5) இயேசுவின் அழைப்பின் சத்தம் கேட்டு (லாசருவே வெளியே வா)  உயிர்த்தெழுந்த லாசரு (யோ..11:43)

(6) கட்டுகளிலிருந்து விடுதலையடைந்து உயிருள்ள சாட்சியாய் ஜீவித்த லாசரு (யோ.11:45,  12:10-11)

(7) இயேசுவோடு விருந்து சாப்பிட்ட லாசரு (யோ.12:2 ,  வெளி 3:20-21,27)

உன் கடவுளைத் தெரிந்துகொள்

உபா.31:30-32:22

இன்று வழிபாட்டு நாள்.  உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று கடவுளைப் போற்றிப்புகழ்ந்து வழிபடும் நாள். 1.  அவர் உன்னதமானவர் (1-5): அவர் நல்லவர் நியாயமானவர், நேர்மையானவர், நம்பத்தக்கவர்.  |அவரே கன்மலை|.  இது பாடலின் தலைமைக்கருத்து. 2.  அவர் இரக்கம் நிறைந்தவர் (6-14): தங்களைப்பற்றிப் பெருமைகொள்ள இஸ்ரவேலரிடம் ஒன்றுமில்லை.  (நம்மிடம் ஏதாவது உண்டா?) தங்களுடைய முணுமுணுப்புகளினாலும், முரட்டாட்டங்களினாலும் எரிச்சலூட்டினாலும் கடவுள் இரக்கம் நிறைந்தவராகவே விளங்கினார்.  கழுகு தன் குஞ்சுக்குப் பறக்கக் கற்பிப்பது போல தமது மக்களைக் காத்துக் கற்பித்து வந்தார் (3).  அவர் தனித்தன்மையுடையவர் (15-22): கடவுள் தனது புகழில் தனித்தன்மையுடையவர்.  எவருடனும் இத்தன்மையை ஒப்பிட முடியாது.  நியாயம் வழங்குவதில் தனித்தன்மையுடையவர். மக்களின் கேடுகெட்ட தன்மையை வெளிப்படுத்துவதைவிடக் கடவுளின் வல்லமையையும், இரக்கத்தையும் உணர்த்துவதே இப்பாடலின் நோக்கம்.  நம்மைப்பற்றிய அப்பட்டமான உண்மைகளைக் கடவுள் இப்பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார்.  நாம் மனத்திருத்தம் பெற்று கடவுளோடு நமது உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்ள இப்பாடல் உதவுகிறது.

இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 118:22

juden

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

ஏசாயா 8:14

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

நிறைவேறுதல்: 1.பேதுரு 2:7

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று.

ரோமர் 9:33

இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன். அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

மேசியா உலகப் பிரகாரமாகத் தங்களை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரசனாகவோ அல்லது பலமிக்க தலைவனாகவோ வருவார் என்று யூதர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழைக் கன்னியின் வயிற்றில் பிறந்து,  தச்சன் வீட்டில் வளர்ந்து, சாதாரண மீன் பிடிக்கிற எளியவர்களைத் தம் சீஷராகத் தேர்ந்தெடுக்கொண்டு, ஆயக்காரரோடும் பாவிகளோடும் உறவாடி, சமாதானக் கர்த்தாவாக கழுதையின் மேல் ஏறி பவனி வந்து, என்னுடைய இராஜ்யம் இவ்வுலகுக்குரியதல்ல என்று கூறியது ஆசாரியருக்கும் பரிசேயருக்கும்,  வேதபாரகருக்கும் பொதுவாக சாதாரண யூதருக்கும் ஜீரணிக்க முடியாத ஒரு காரியமாயிருந்தது. ஆகையினால் அவரை மேசியா என்று ஏற்றுக்கொள்ளாமல் இகழ்ந்து, உதாசீனப்படுத்தி கடைசியில் சிலுவையிலறைந்து கொன்றார்கள்.

யூதர்க் அகாதென்று தள்ளிய இயேசுவே அவர்களுக்கு இடறுதலின் கல்லாகவும் விசுவாசிகளுக்கு உலக இரட்சகராகவும் பாவிகளை மீட்கும் பரிகாரியாகவும் இருந்து, தாவீது, ஏசாயாவின் முன்னறிவிப்புகளை நிறைவேற்றினார்.

உயரிய கற்பனை

மத்.12:1-8

 ஓய்வுநாளின் ஆண்டவர்: சீடர் கதிர்களைக் கொய்தனரே ஒழிய, அறுவடை செய்வதில்லை.  ஆனால், பரிசேயரோ பசியாக இருந்தோரின் தேவையை மதிக்காது.  குற்றங்காணுவதிலே கருத்துடனிருந்தனர்.  வச. 3-1 சாமுவேல் 21:1-6-ல் கூறப்பட்ட இந்நிகழ்ச்சியை பரிசேயர் அறியாமல் இல்லை அவர்கள் மனிதத்தேவை பிரமாணத்தின் சிறுவிதிகளைக் காட்டிலும் முக்கியம் என்று உணரவில்லை.  மேலும், ஓசியா 6:6-ஐயும் உணரவில்லை.  இரக்கமுள்ள கடவுள் இரக்கத்தை எதிர்பார்க்கிறார்.  மட்டுமல்ல, இரக்கமற்றோர் எவ்வளவு பலியினாலும் புண்ணியம் பெற இயலாது. வ. 5,6-தேவாலயத்தையும் அதன் வழிபாட்டையும் விட மேலான கடவுள், மனிதனாகத் தோன்றிய மேசியா, மனிதரின் அக்கறை என்னும் உயரிய கற்பனையைக் கற்பிக்கிறார்.  கிறிஸ்துவின் ஆட்சியில் உயர்ந்தவை யாவை என்று நான் அறிவேனா?

யார் இதைச் சகிக்க முடியும்?

யோவே.2:1-17

எக்காளத்தின் தொனி, நெருங்கி வரும் சத்துருவின் சேனையின் தொனிப்போல் அபாய அடையாளத்தைக் காண்பிக்கிறது (3-11).  இந்த வசனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின், பயங்கரத்தை ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடுகிறது.  குதிரைகளையும், இரதங்களையும் தடுக்க முடியாது (5).  கர்த்தரின் நாளை, வெட்டுக்கிளிகளின் மூலம் கடவுளின் நியாயத் தீர்ப்பை இணைக்கிறார் (10).  யார் இந்த நாளைச் சகிக்கக்கூடும்?தேவன் தமது ஜனத்தை மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார்.  அவர் இரக்கமும் மனதுருக்கமும் மிகுந்தவர் (வ. 13).  தேவனிடம் திரும்புவதற்கு காலங்கடந்துவிடவில்லை.  மணவாட்டி தன் அறையை விட்டு வெளிவருவது போல் இஸ்ரவேல் மக்கள் தேவனைத் துரிதமாக சந்திப்பதற்கு அழைக்கிறார்.  இஸ்ரவேலரே தேவனின் விசேஷித்த சொத்து உடைமை போன்றவர்கள் (வ. 17, யாத் 19:5).  யூதா, தன் அறியாமைக் குறித்து வாதாடாது தேவனின் மகிமை உலகத்திலே அவமாக்கப்படுவதற்காக வாதாட வேண்டும்.