மகிமையின் கிரீடம்

ஏசா.28:1-29

1.  பெருமையின் கிரீடம்: பாவத்தின் விளைவாக வந்த எந்த அலங்காரமும் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும்.  எப்பிராயீமரைப் போன்று மதுபான வெறியில் நான் ஈடுபடவில்லையென்றாலும் அதுபோன்று பண ஆசை.  ஜாதி வெறி, பதவி வெறி, பொருளாசை, பொறாமை, தரித்திருக்கிறேனா என்று ஆராய்ந்து, அது என்னை விழத்தள்ளுமுன் ஆண்டவருடைய மன்னிப்பையும், அருளையும் பெற்றுக் கொள்.  2.  மகிமையின் கிரீடம்: பாவம் மன்னிக்கப்பட்டு இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு புதுசிருஷ்டியாக மாறும் போது நாம் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும் அவரது கரத்தில் ராஜமுடியுமாயிருப்போம்.  (ஏசா 62:3) 3.  கற்பனையும் பிரமாணமும்: தேவனுடைய கற்பனைகளையும் பிரமாணங்களையும் கைக் கொள்வது உனக்கு பெரிய பாரமாகத் தோன்றுகிறதா? அப்படியானால் பால் மறந்த குழந்தைக்கு ஒத்த இருதயத்தை தாரும் என்று கேள்.  சிறு பிள்ளையைப் போல் மாறுகிறவனுக்குத் தான் தேவனுடைய இராஜ்யம் கிட்டும்.  ஆவிக்குரிய வரங்களால் நிரப்புவார்.  4.  மூலைக்கல்: மூலைக்குத் தலைக்கல்லாகிய கிறிஸ்து என்னும் கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடும் போது உன் விசுவாசம் உறுதியாக இருக்கும்.  விசுவாசிக்கிறவன் பதற மாட்டான்.  அவரே நீ நடக்க வேண்டிய வழியைக் காண்பித்து உனக்கு போதிப்பார்.

உவமைகளினால் இயேசு பேசுவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: சங்கீதம் 78:2

Jesus

என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். 

நிறைவேறுதல்: மத்தேயு 13:10-11,13

அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

மத்தேயு 13:34-35

இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன். உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மேசியா உவமைகளின்மூலம் மறைபொருள்களை வெளிப்படுத்துவார் என்ற சங்கீதக்காரனின் தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் வந்த ஜனங்களிடத்தில் உவமைகளின்மூலம் சுவிசேஷத்தை அறிவித்ததினால் 1000 வருடங்களுக்குப் பின் நிறைவேறியது. 50 க்கும் மேற்பட்ட உவமைகள் இயேசு கிறிஸ்து கூறியதாக சுவிசேஷங்களில் காணலாம்.

நீதிமொழிகளில் 12 விதமான மனுஷர்கள்

(1) ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் (நீதி.3:13)

(2) விவேகமுள்ள மனுஷன் (நீதி.12:23)

(3) நல்ல மனிதன் (நீதி.14:14)

(4) உண்மையான மனிதன் (நீதி.20:6)

(5) தயையுள்ள மனுஷன் (நீதி.11:17)

(6) புத்தியும் அறிவுமுள்ள மனுஷன் (நீதி.28:2)

(7) ஒரு கன்னிகையை நாடிய மனுஷன் (நீதி.30:19)

(8) பேலியாளின் மனுஷன் (நீதி.6:12)

(9) துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷன் (நீதி.12:2)

(10) மதியற்ற மனுஷன் (நீதி.15:20)

(11) உக்கிரமுள்ள மனுஷன் (நீதி.22:24)

(12) பொல்லாத மனுஷன் (நீதி.24:1)

எத்தகைய மனிதன்

மத்தேயு 8:18-34

சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு.  மனித குமாரன் – மனிதரோடு ஒன்றுபட்டத்தன்மை (எபி. 2:6,7) வல்லமையோடும், மகிமையோடும் வரும் நியாயாதிபதி (தானி 7:13,14), ஏற்கனவே சீடனான ஒருவன் முழுமையாகப் பின்பற்ற, தன் தகப்பன் இறக்கும்வரைக் காத்திருக்கிறான்.  இயேசு குடும்பப் பிணைப்பை அறுக்கவில்லை.  இராஜ்யத்தின் பணி அதிதீவிரமாய் முக்கியமாய் செய்யப்படவேண்டும்.  ஆவியில் உயிரற்றோர் உலகக் காரியங்களைக் கவனிக்கலாமே! சீறும் புயல்: பலமுறை நாமும் வாழ்க்கைப் புயலில் இயேசுவண்டை ஓடுகிறோமே ஒழிய, அஞ்சாது அமைதியாக விசுவாசிக்க அறியோம்.  எத்தகையவரோ என்று வியக்கும் நம் விசுவாசம், அவர் அலைக்கும், அலைமோதும் காற்றுக்கும் ஆண்டவர் என்று நம்பி அமர்ந்திருக்கிறதா? சீர்பெறும் வாழ்வு: தீய சக்திகளை வென்று விரட்டவே வந்தார் இயேசு.  ஆகவே பேயை விரட்டிப் பன்றி செத்தாலும் பரமன் படைத்த மக்கள் மீட்கப்பட அவர் தயங்கவில்லை.  ஆனால் அறிஞர் ஒருவர் கூறுவதுபோல, எப்பொழுதுமே உலகம் பன்றியைப் பாராட்டி, பரமனை விரட்டுகிறது.

இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தன்மையைப்பற்றிய முன்னறிவிப்பு

முன்னுரைப்பு: ஏசாயா 61:1-3

Jesus

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார். அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். 

நிறைவேறுதல்: லூக்கா 4:16-21

தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.  அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:  கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்.  தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்.  இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,  வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

மேசியாவாக வருபவர் (1) தரித்திரருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், (2) பாவ பாரத்தினால் இருதயம் நொறுங்குண்டவர்களுக்குப் பாவ விமோசனம் அளிக்கவும் (3) பாவத்தினால் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைலயளிக்கவும், (4) பிணியாளிகளைச் சுகப்படுத்தவும் (5) கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து எச்சரிக்கவும் வருவார் என்று ஏசாயாவின் மூலம் முன்னறிவிக்கப்பட்டபடி 700 வருடங்களுக்குப்பின் இத்தீர்க்கதரிசனம் தம்மில் நிறைவேறுகிறது என்று இயேசு கூறினார்.

யூதாஸ் காரியோத்து

(இயேசுவின் சீஷன் – அப்போஸ்தலன்)

மத்.10:1-25,  அப்.1:16,17,20

Judas

(1) பணப்பையை வைத்திருந்தவன் (யோ.12:4-6)

(2) திருடன் (யோ.12:6)

(3) துரோகி (லூக்.6:16)

(4) சாத்தான் அவனுக்குள் புகுந்தான் (லூக்.22:3)

(5) 30 வெள்ளிக்காசுக்கு இயேசுவை விற்றான் (மத்.26:15,  27:9)

(6) இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுத்தான் (மத்.26:49,  26:16,17,46,  27:4,  மாற்.3:19,  14:10,11,21,44,  லூக்.22:4,48)

(7) நான்றுகொண்டு செத்தான். தலைகீழூக விழுந்து குடல் சரிந்தது (மத்..27:4-5,  அப்.1:18-19)

ஏழையை ஆதரிக்கும் ஆண்டவர்

ஏசாயா 14:12-32

நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம்.  கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய் இருந்தது.  கடவுளின் இரக்கத்தை மறந்து பாபிலோனிய மன்னன் தனது கடந்த கால வெற்றி பற்றி பெருமை கொள்ளுகிறான்.  சாத்தான் ஆதாமைச் சோதித்த போது நீங்கள் தேவனைப் போலாவீர்கள்| எனக்கூறியதை நினைக்கிறோம்.  பெருமையுள்ள பாபிலோனிய மன்னன் வீழ்ந்தான்.  கடவுளின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்தியதால் அவருக்கு எந்த நினைவுச் சின்னமும் எழுப்பப்பட மாட்டாது.  அவனது சரீரம் நல்லடக்கம் செய்யப்படுவதில்லை.  பாபிலோனியப் பண்பாடும் பழக்கமும் இறைவனின் நல்லாட்சிக்கு விரோதமாயிருப்பதால் அது அழிக்கப்படும் கடவுள் நீதியுள்ள நியாயாதிபதி.  தனக்கென்றே வாழ்ந்து தன்னைத்தான் உயர்த்த விரும்பும் எந்தத் தலைவனும் அழிந்து போவான்.  தரித்திரர் தழைப்பார்கள் தீர்க்கன் அசீரியா, பெலிஸ்தியர் ஆகியோரின் ராஜ்யங்களின் அழிவை முன்னறிவிக்கிறார்.  சீயோன் கர்த்தரால் ஸ்தாபிக்கப்படும் எளியவர்களும், தரித்திரரும் அதில் அடைக்கலம் பெறுவர்.  ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது| கடவுள் தரித்திரரைத் தாங்குகிறார்.

செபுலோன், நப்தலி நாடுகளில் இயேசுவின் ஊழியத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் கலிலேயாவில் ஆரம்பமாகும்

முன்னுரைப்பு: ஏசாயா 9:1-2

Jesus

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

யோவான் 4:12

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,  

நிறைவேறுதல்: மத்தேயு 4:13-16

நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,  இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

இயேசு கிறிஸ்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்ற தீர்க்கதரிசனப்படி பெத்லகேமிலே பிறந்தார். ஆனால் அவருடைய ஊழியம் செபுலோன், நப்தலி கோத்திரங்களின் பிரதேசத்திலும் கடற்கரை பிரதேசத்திலும் நடைபெறும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் அப்பிரதேசம் கலிலேயா நாடு என்று அழைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து கலிலேயா நாட்டிலும், கலிலேயா கடற்கரைப் பிரதேசத்திலும் தமது ஊழியத்தைத் துவக்கி இத்தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.

கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள்

(1) யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைத் தேடி வந்தார்கள். (மத்.2:1-2)

(2) நட்சத்திரத்தினால் வழி நடத்தப்பட்டார்கள். (மத்.2:2,9,  வெளி 1:16,20)

(3) சாஷ்டங்கமாய் விழுந்து இயேசுவைப் பணிந்து கொண்டார்கள்.  (மத்.2:11)

(4) தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும் வெள்ளைப் போளத்தையும் அவருக்கு காணிக்கையாக வைத்தார்கள் (மத்.2:11)

(5) மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். (மத்.2:10,  எண்.24:17,  வெளி 22:16)

(6) ஏரோதினிடத்திற்குப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். (மத்.2:12,  ஆதி.31:24,  மத்.1:19-25)

(7) இயேசுவைத் தரிசித்து வணங்கினபின், வேறு வழியாய் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். (மத்.21:12,   அப்.9:11,  ஆதி.24:48,  எண்.20:17,  சங்.125:5)

எக்காளம் ஊதப்படும்

ஏசாயா 27:1-13

அப்போகிலிப்ஸ் எனக்கூறப்படும் இப்பகுதியில் உலகின் சக்திகளைக் குறிப்பிட தீர்க்கன் ஏசாயா சில பழங்கால கதைகளில் வரும் ஊரும் பிராணிகளை உபயோகிக்கிறார்.  லிவியாதான் அசீரியப் பேரரசையும், பாபிலோனியப் பேரரசையும் குறிக்கும் வலுசர்ப்பம்.  எகிப்தைக் குறிக்கும் இந்த வசனங்கள் எல்லாப் பேரரசுகளின் மேலும் கர்த்தருக்குக் கிட்டும் இறுதி வெற்றியைக் குறிக்கிறது.  ஏசாயா தீர்க்கன் இஸ்ரவேலின் இக்கட்டான சூழ்நிலையை நினைவுபடுத்துகிறார்.  ஒரு குறிப்பிட்ட காலம் சிறையிருப்பின் இன்னலை அனுபவிக்க ஆண்டவர் இஸ்ரவேலை ஒப்புக் கொடுத்தார்.  அவர் இஸ்ரவேலை அழிக்கவில்லை.  அவர்களது எதிர்கால அழைப்பிற்கும் ஊழியத்திற்கும் சிறப்புக் கொடுக்கவே விக்ரக வணக்கத்தை விட்டு தம்மிடம் திரும்பினால் கர்த்தர் அவர்களை மன்னிப்பார்.  தண்டனையில் சிறந்த மீட்பின் நோக்கம் காணப்படுகிறது.  கவலையினால் அழுத்தப்படுகிறாயா? இயேசு கிறிஸ்துவிடம் ஜெபி.  பெரிய எக்காளம் ஊதப்படும்.  சிதறிய இஸ்ரவேலர் ஒன்று சேர்க்கப்படுவதைக் குறித்த நிச்சயத்தைப் பார்க்கிறோம்.  சீயோனுக்கு வெளியே இருக்கும் மக்கள் எருசலேமில் வந்து கர்த்தரை வழிபட அழைப்பதற்காக கடைசி நாளில் தொனிக்கும் எக்காளத்திற்கும் இது முன்னோடியாக அமைகிறது.

இயேசு கிறிஸ்துவுக்கு வந்த சோதனைகளைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள்

இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று யோர்தானை விட்டு வெளியேறியவுடன் ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டார். 40 நாள் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்.  அப்பொழுது பிசாசானவன் அவரைச் சோதிக்கத் தொடங்கினான்.

versuchung

முதலாம் சோதனை:

முன்னுரைப்பு: உபாகமம் 8:3

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

நிறைவேறுதல்: லூக்.4:3-4

அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.  

இரண்டாம் சோதனை:

முன்னுரைப்பு: உபாகமம் 6:13

உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.

நிறைவேறுதல்: லூக்.4:5-8

பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது.  எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மூன்றாம் சோதனை:

முன்னுரைப்பு: சங்கீதம் 91:11-12

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில்  இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

நிறைவேறுதல்: லூக்.4:9-11

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

முன்னுரைப்பு: உபாகமம் 6:16

நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.

நிறைவேறுதல்: லூக்.4:12

அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

இவ்வண்ணமாகக் கிறிஸ்துவுக்கும் சோதனைகள் வரும், அவைகளை அவர் வேதவாக்கியங்கள் மூலமாகவே ஜெயிப்பார் என்பது ஆதியிலேயே முன்னுரைக்கப்பட்டு நிறைவேறின.

சிந்தை ! சிந்தை !

(1) கிறிஸ்துவின் சிந்தை – (1.கொரி.2:16,  பிலி.2:5-11,  1.பேது.4:1-5)

(2) ஆவியின் சிந்தை – (ரோ.8:6,  9:27-28)

(3) புதிய சிந்தை – (ரோ.12:2,  எபேசி.4:23-24,  எபி.8:10)

(4) களங்கமற்ற சிந்தை – (2.கொரி.11:3,  எபேசி.6:5)

(5) ஏகசிந்தை – (2.கொரி.13:11,  ரோ.15:6)

(6) முழு சிந்தை – (லூக்.10:27)

(7) மாம்ச சிந்தை – (ரோ.8:6-8,  கொலோ.2:19-23)

(8) வீணான சிந்தை – (எபேசி.4:17-20,  ரோ.1:21)

(9) கேடான சிந்தை – (ரோ.1:28-32,  1.தீமோ.6:3-6)

(10) அக்கிரம சிந்தை  – (சங்.66:18)

(11) வேறு சிந்தை – (அப்.28:6)

((12) பூமிக்கடுத்த சிந்தை – (பிலி.3:19)

(13) மேட்டிமையான சிந்தை – (ரோ..12:16)

(14) தகாத சிந்தை  – (ரோ.12:16)

(15) பொல்லாத சிந்தை – (மத்.15:19,  மாற்.7:21)

எனக்காக செயல்படும் தேவன்

சங்.57

விண்ணப்பமும் நம்பிக்கையும்: ஆயக்காரனைப் போல் ‘எனக்கு இரங்கும்” என ஜெபிக்கும் தாவீது, தனக்கு நேரிட்ட துன்பங்கள் காலம் வரும் பொழுது நிச்சயம் கடந்திடும் என்பதையும், அதுவரைக்கும் கர்த்தரின் காக்கும் செட்டைகளுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொள்வேன்.  என்றும் கூறுகின்றார்.  அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறியுங்கள் என்றுக் கூறியவரே தனக்காய் செயல்படும் தேவன் என்று தாவீது எதிர்ப்பார்க்கின்றார்.  தனக்கு உதவி எப்பக்கமிருந்தும் வராத நேரத்திலும், ஒத்தாசை செய்யும் பர்வதமாகிய தேவனிடமே நம்பிக்கை கொள்கிறார்.  தேவனை நம்பியோர் ஒருநாளும் கைவிடப்படுவதில்லை.  தன் எதிரிகளின் செயல்களைக் குறித்து தேவனிடமே தெரிவிக்கின்றார்.  தன் துன்பநிலையிலும் தானல்ல தேவனே மகிமைபட வேண்டுமென விண்ணப்பிக்கின்றார்.  துதிக்கும் முறை: (1).  தன்னை ஆயத்தம் செய்தல் (2).  தூக்க மயக்கத்துடன் அல்ல விழிப்புணர்ச்சியுடன் துதித்தல் (3).  தனக்குத் தேவன் எவ்வளவு நல்லவர் என மற்றவர் அறிய வேண்டும் என்ற தீர்மானம் (4).  துதித்தலுக்கான கருத்துகள்  (5).  தேவனிடம் தன் பெயரை மகிமைபடுத்திக்கொள்ள தேவனிடம் விட்டுக் கொடுத்தல்.

பரிசுத்தாவியானவரின் அபிஷேகம்

முன்னுரைப்பு: ஏசாயா 11:2

Jesus

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். 

ஏசாயா 61:1

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். …….

நிறைவேறுதல்: மத்தேயு 3:16-17

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது.  தேவ ஆவி புறாவைப்போல  இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

இயேசு கிறிஸ்து யோவானால் திருமுழுக்குப் பெற்று யோர்தான் நதியிலிருந்து கரையேறினவுடன் பரிசுத்தாவி புறாவைப்போல் அவர்மேல் இறங்கினதுமல்லாமல், வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற ஒரு சத்தமுண்டாகி, ஏசாயாவின் மூலமாய் முன்னுரைக்கப்பட்ட வேதவாக்கியம் 700 வருடங்களுக்குப் பின் இயேசுவில் நிறைவேறியது.

என்னுடைய தேவன்

சங்.63:1-13

ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது.  பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர சங்கீதங்கள் சிறப்பானவை.  ஜனங்களோடே களிப்பும் துதியுமான சத்தத்துடன் தேவாலயம் சென்று வந்த தாவீது (சங் 42:4).  எருசலேமிலிருந்து துரத்துண்ட பொழுது தேவ சமூகம் நாடி வாஞ்சிக்கின்றார்.  வனாந்திரத்தின் வறட்சியும், ஆகாரமின்மையும் தாவீதின் ஆத்மீக தாகத்தையும் பசியையும் தூண்டிவிடுகின்றது.  பாலும் தேனும் ஓடிய கானாவிலும் வனாந்திரம் காணப்பட்டது போல் பரிசுத்தவான்களின் வாழ்விலும் வறட்சி காணப்படலாம்.  என்னுடைய தேவன்: தேவனை தமக்கே சொந்தமாய் ஆக்கிக் கொள்ளும் போதே இவ்வாறு கூற இயலும்.  அத்தகையோர் நேரமும், இடமும் சாதகமாக இல்லை எனினும் தேவ பிரசன்னம் தேடி மிகுந்த வேட்கைகொள்வர்.  தேவன் தனக்கு என்ன செய்தாhர் என்பதைவிட அவர் தேவனாக இருப்பதற்காகவே துதிக்கின்றது.  நன்றியுள்ள உணர்வுமாத்திரமல்ல: தேவன் தனக்களித்த வாயையும் உதடுகளையும் கையையும் பயன்படுத்தி துதிக்கின்றனர்.  திருப்பதி அடைந்த ஆத்துமா தொடர்ந்து தேவனையே  பற்றிக் கொள்கிறது எதிர்ப்புகள் நீங்கிவிட, தேவ மனிதன் கர்த்தருக்குள் மகிழ்ந்து தேவனை துதிப்பர்.

என் சித்தமல்ல

மத்தேயு 26:31-46

துயருற்றும் தாழ்த்தியவர்: இயேசு தம் சீடரை எச்சரிக்கிறார்.  வ. 31- சகரியா 13:7 காணவும்.  சீடர் சிதறுவது சிறிதுகாலமே.  கடவுளே இந்நிகழ்ச்சிகளின் காரணகர்த்தா (மேய்ப்பனை வெட்டுவேன் என்பதைக் கவனிக்கவும்) பேதுருவைப் போன்று பலமுறை நாமும் உறுதி மொழி கூறுவதில் அவசரப்படுகிறோம்! இறுதிப்போரில் வெற்றிபெற இயேசு அமைதியை நாடுகிறார்.  வ. 38-ல் அவர் தம்துயரை முச்சீடருடன் பகிர்வதில் பயனில்லை.  தனியே தம் தியாகப் பாதை செல்கிறார்.  மனுக்குலத்தின் பாவம் அனைத்தும் அவரை அழுத்துகின்றது.  கீழ்படிந்த வாழ்க்கையின் உச்சநிலையை அவர் வேண்டுதல் வெளிப்படுத்துகிறது.  வ. 41-ஜெபமின்றி மனித ஆவி சோதனையில் வெற்றிபெற இயலாது.  மாம்சத்திற்கு இடங்கொடுத்து விடும். இயேசு இரண்டாம், மூன்றாம் முறை வெற்றியோடு ஜெபித்தார்.  வெற்றிக்கொண்ட அவர் பகைவனாம் பிசாசை மேற்கொள்ள செல்லுகிறார்.  கடவுள் தீயோன் மீது வெற்றிகொள்ளும் வேளை வந்தது.

இயேசு கிறிஸ்துவின் முன்னோடியைப் பற்றிய தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: ஏசாயா 40:3-5

John

 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
John

மல்கியா 3:1

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்.  இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

மல்கியா 4:5

 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

நிறைவேறுதல்: மத்.3:1-3

அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

(லூக்.3:3-6 மற்றும் யோவான் 1:6-34 வசனங்களையும் பார்க்கவும்)

மேசியாவுக்கு வழியை ஆயத்தம்பண்ண ஒருவன் வருவான் என்று ஏசாயா, மல்கியா தீர்க்கதரிசிகள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டது யோவான்ஸ்நானன் யோர்தானுக்கடுத்த வனாந்தரத்திலே தங்கி, போதகம்பண்ணி, பாவ மன்னிப்புக்கென்று யோர்தான் நதியிலே ஞானஸ்நானம் கொடுத்து வந்ததின்மூலம் நிறைவேறியது.

என் முழுமையும் உனக்கே

உபா. 6:1-25

மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே.  இது எத்தனை அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இஸ்ரவேலே கேள் (வ. 4). கேள் என்ற வார்த்தையின எபிரேய பதம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.  உபா. 6:4-9, 13-21, எண.  15:37-41 ஆகிய மூன்று பகுதிகளும் இந்த பதத்தைக் கொண்டே அழைக்கப்படுகிறது.  யூத ஜெப ஆலயங்களில் ஆராதனைகள் இவ்வார்தையினைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. மேற்கண்ட மூன்று பகுதிகளையும் கொண்ட சிறியதோல் பெட்டிகளை ஒரு பக்தியுள்ள யூதன் தன் நெற்றியிலும் மணிகட்டிலும் அணிந்து கொள்வான் (வ. 8), வீட்டின் நிலைகளிலும் இப்பகுதிகள் வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு எழுதி வைப்பதோடு நின்று விடாது நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறவர்களாக நாம் மாற வேண்டும். பிள்ளைகளுக்குப் போதிப்பாய்: (வ. 20-25) நமது வீடுகளில் அதிகமாகப் பேசப்படுகிற காரியம் எது? பிள்ளைகள் நமது வாயினின்று எப்படிபட்டவைகளைக் கேட்கிறார்கள்? தேவன் செய்த நன்மைகளை எண்ணிப் பார்த்து அவருக்கு நன்றி செலுத்துகிறோமா?

ஏழு புத்திமதிகள்

1. தினசரி உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார் என்ற உணர்வோடே ஜெபி.

2. தினசரி கர்த்தர் உன்னோடு பேசுகிறார் என்ற சிந்தையோடு பரிசுத்த வேதாகமத்தைக் கவனமாக, கருத்தாக வாசி.

3. இயேசுவுக்காக ஏதாவது ஒவ்வொரு நாளும் செய்.

4. ஒவ்வொரு காரியத்தையும் குறித்து, இதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று கர்த்தருக்கு முன்பாக யோசித்து உன் ஜீவியத்தை நடத்து..

5. கர்த்தரைத் தவிர வேறு யாரையும் உனக்கு மாதிரியாக வைத்துப் பாராதே.

6. உன் சுயபுத்தியோ மற்றவர்களது ஆலோசனைகளோ தேவவசனத்திற்கு வித்தியாசமானது, மாறுபட்டது என்று தோன்றினால் அதை உடனே விட்டுவிடு..

7. தேவைன மனமகிழ்ச்சியோடு ஆராதனை செய்து மகிமைப்படுத்த எப்பொழுதும் ஜாக்கிரதையாயிரு.

பழுதற்றவராயிருந்தார்

முன்னுரைப்பு: யாத்.12:5

Jesus

அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.

எண்.19:2

கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.

பஸ்காவில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டி பழுதற்றதாய் இருக்கவேண்டும் என்று யாத்திராகமத்தில் ஆண்டவர் கூறியுள்ளார்.

நம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும்படியாக அடிக்கப்பட்ட பஸ்காவின் ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து பழுதற்றவராக இருந்தார் என்று பேதுரு சாட்சி கொடுக்கிறார்.

நிறைவேறுதல்: 1.பேது.1:19

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

எபி.9:14

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

இயேசுவோடு நெருங்கிப் பழகிய அவருடைய சீடர்கள் அவா மாசற்றவராக, பழுதற்றவராக நம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும் பலி ஆனார் என்று கூறியிருக்கின்றனர்.