January

ஐனவரி 30

நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன் (ஓசி.14:5).

பனி பூமியைச் செழிப்பாக்க மூலகாரணமாயுள்ளது. இது பூமியின் செழிப்பைப் புதுப்பிக்க இயற்கையின் வழி. இது இரவில் பெய்கிறது. இது பெய்யாவிட்டால் தாவரங்கள் மடிந்துபோம். பனியின் இந்த ஒப்பற்ற பயனே வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ஆவிக்குரிய புது ஜீவனின் அடையாளமாக இருக்கிறது. இயற்கை பனியால் மூடப்படுவது போல் கர்த்தர் தமது ஜனத்தைப் புதுப்பிக்கிறார். தீத்து 3:5ல் பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல் என்று கண்டுள்ளதால், ஆவிக்குரிய புதிதாக்குதல் பரிசுத்த ஆவியின் வேலையாக இருக்கிறது.

அநேக கிறிஸ்தவர்கள் உன்னத பனி தங்கள் ஜீவியத்திற்கு அவசியம் என்பதை உணர்வதில்லை. அதனால் புதிதாக்குதலும், புதுப்பலமும் அற்றவர்களாயிருக்கிறார்கள். அவர்களின் ஆவி, பனி இன்மையால் தொய்ந்து போகிறது.

என் பிரிய உடன் ஊழியனே, சாப்பிடாமல் ஒரு நாளின் வேலையை செய்ய ஆரம்பிப்பவனின் மதியீனத்தை நீ அறிவாயல்லவா? அதேபோல் உன்னதத்திலிருந்து வரும் மன்னாவை உட்கொள்ளாமல் ஊழியம் செய்யப்போகும் கர்த்தருடைய ஊழியக்காரனின் மதியீனத்தை உணருகிறாயா? ஆவிக்குரிய போஜனம் எப்போதாவது ஒரு தடவை கிட்டினால் போதாது. ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவரின் புதிதாக்குதலை நீ பெறவேண்டும். புதுப்பலம் உனக்குள் பாயும்பொழுது அது உனக்குத் தெரியும். அமர்ந்திருந்து உட்கொள்ளும்பொழுது பனி கிடைக்கும். இரவில் இலைகள் அசையாதிருக்கும்பொழுது தாவரங்களின் துவாரங்கள், புத்துயிரும் புதுப்பெலனும் அளிக்கும் ஸ்நானத்தைப் பெற காத்து நிற்கின்றன. அதுபோலவே கர்த்தருடைய சந்நிதானத்தில் அமர்ந்து காத்திருந்தால் ஆவிக்குரிய பனி கிடைக்கும். அவர்முன் அசையாதிரு. ஆத்திரப்பட்டால் நீ அப்பனியை அடையமாட்டாய். அவருடைய பிரசன்னத்தால் நீ திருப்தி அடையும்வரை கர்த்தர்முன் காத்திரு. பின்பு உன்னில் புதுப்பெலன், புத்துயிர் உண்டானதை உணர்ந்து உன்னுடைய அடுத்த கடமைகளைச் செய்ய செல்.

காற்றாவது உஷ்ணமாவது இருக்கையில் ஒருபோதும் பனித்துளிகள் அண்டா. உஷ்ணநிலை குறைந்து காற்று நிற்கவேண்டும். ஆகாயம் குளிர்ந்து அசையாதிருக்கும் நிலையை அடையவேண்டும். அப்போதுதான் ஆகாயத்தின் கீழேயுள்ள பூண்டுகளுக்கும், புஷ்பங்களுக்கும் கண்ணுக்குத் தோன்றாத ஈரப்பசையுள்ள திவலை கிடைக்கும். அதுபோலவே ஆத்துமா முற்றிலும் அமர்ந்திருந்த நிலைமையில்தான் கர்த்தருடைய கிருபை கிடைக்கும்.

இறைவனே, எங்கள் வீண் முயற்சிகளெல்லாம் அடங்கும்படி
அமைதியாகிப் பனித்துளியை எங்கள்மேல் அனுப்பும்
எங்கள் வாழ்விலுள்ள கவலைகள்
சச்சரவுகள் யாவற்றையும் நீக்கி
உள் அமைதியின் அழகை பிரதிபலிக்கச் செய்யும்.
வீண் ஆசைகளினால் அலையும் எங்கள் உள்ளம் அடங்கும்படி
அதைக் குளிர்மை பெறச் செய்யும் மருந்தைக் கொடும்
எங்கள் புலன்கள் அனைத்தும் அடங்கியிருக்கட்டும்.
எங்க் வாழ்வின புயல்களுக்கு மத்தியில்
உமது அமைதியான மென்மையான குரல் கேட்கட்டும்.