January

ஐனவரி 29

தேவன் அதன் நடுவில் இருக்கிறார். அது அசையாது. அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார் (சங்.46:5).

அது அசையாது என்பது எவ்வளவு உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. இவ்வுலக காரியங்கள் நம்மை வெகு எளிதில் அசைக்கும்போது ஒன்றும் நம்மை அசைக்காத, ஒன்றும் நம் அமைதலைக் கலைக்காத ஓர் இடத்தை நாம் அடையமுடியுமா? ஆம், அது கூடும். பவுல் அப்போஸ்தலன் அதை அறிந்தார். தமக்கு கட்டுகளும், கஷ்டங்களும் வரும் என்று எதிர்பார்த்து எருசலேமுக்குப் போகும் வழியில் இவைகளில் ஒன்றும் என்னை அசைக்காது என்று வீரதீரமாய்ச் சொல்லக் கூடியவராயிருந்தார். பவுலின் அனுபவத்திலும், ஜீவியத்திலும், அசைக்கக்படக்கூடியதெல்லாம் அசைக்கப்பட்டாயிற்று. தன் ஜீவனையும், தன் ஜீவனுக்குரிய எதையும் அவர் தனக்கு அருமையானதாக எண்ணவில்லை. கர்த்தர் சித்தத்தின்படி நம்மை நடத்தும்படி விட்டுவிடுவோமானால் நாமும் அப்பேர்ப்பட்ட ஒரு நிலைமையை அடைவோம். கர்த்தரைச் சார்ந்திருக்கப் படித்தவர்களுக்குண்டாகும் அறிவக்கெட்டாத சமாதானம் நமக்கும் உண்டாகும். அப்போது நமது வாழ்க்கையில் சிறிய கவலைகளோ பெரிய சோதனைகளோ ஒன்றும் நம்மை அசைக்கமாட்டாது.

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ, அவனைக் கர்த்தரர் ஆலயத்தில் தூணாக்குவேன். அதினின்று அவன் ஒருக்காலும் விலகுவதில்லை. (வெளி 3:12). கர்த்தரின் வீட்டிலிருக்கும் தூணைப்போல் அசையாமலிருக்கும் நிலையையடைய எத்தனை கஷ்டங்களையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளலாம்.

கர்த்தர் ஓர் இராஜ்யம் அல்லது ஒரு பட்டணத்தின் மத்தியில் இருக்கும்பொழுது, பெயர்க்கப்படாத சீயோன் மலையைப்போல் அதை உறுதியாக்குவார். அவர் ஓர் ஆத்துமாவின் மத்தியில் இருக்கும்போது, அதைச் சுற்றிலும் எல்லாப் பக்கத்திலும், கவலைகள் நெருங்கி கடலைலைகளைப்போல் கொந்தளித்தாலும் அந்த ஆத்துமத்தில் உலகம் தரக்கூடாததும் எடுத்துக் கொள்ளக் கூடாததுமான சமாதானம் ஏற்படுகிறது. மனிதருடைய ஆத்துமத்தில் தேவனை வைக்காமல் அதற்குப் பதில் உலகத்தை வைப்பதால், அது அவர்களைத் துன்பமாகிய புயல் வீசுகையில் இலைகள் அசைவதுபோல பயந்து நடுங்கச் செய்கிறது.

கர்த்தரை நம்புகிறவர்கள் அசைக்கப்படாது என்றென்றுமுள்ள சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். நம்முடைய இருதயத்தில் இரும்புபோன்ற உறுதியை அளிக்கக் கூடிய ஸ்காட்லாந்து கவி ஒன்று உண்டு.

கர்த்தரை முழுவதுமாய் நம்பி ஒட்டிக்கொள்ளுவோன்
சீயோன் பர்வதத்தைப்போல் தன் நீதியில்
சற்றேனும் அசையாது, ஆடாது
எஃகைப்போல் உறுதியாய் நிற்பான்.