January

ஐனவரி 28

உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன் (2.கொரி.11:2).

கைதேர்ந்த சுரமண்டலம் வாசிப்போன் தன் வாத்தியக் கருவியின்மேல் கவனம் செலுத்துகிறான். தன் மடியிலுள்ள குழந்தையைப்போல் அதைக் கொஞ்சிக்குலாவுகிறான். அவன் உயிர் அதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இராகங்களைப் பிறப்பிக்க அவன் அதைச் சீர் செய்வதைக் கவனி. அதை இறுகப்பிடித்து ஒரு நாணைப் பலமாய் அடிக்கிறான். அது வேதனைப்படுவதுபோல் நடுங்கும்போது அதில் உண்டாகும் முதல் சுருதியைக் கவனிக்க அதனருகே சாய்கிறான். அவன் அஞ்சியவாறே அது கடுரமாய்த் தவறாயிருக்கிறது. அந்த நாணை ஒரு சாவியின் உதவியால் திருகி விறைப்பாய் இருக்கச் செய்கிறான். அது விறைப்பாய் அறுந்துபோவதுபோல் தோன்றுகிறது. முன்போல் அடித்து அதன் ஒலியைக் கேட்க அருகில் குனிகிறான். இறுதியில் அதிலிருந்து சரியான சப்தம் கேட்டவுடன் அவன் முகம் மலருகிறது.

இவ்விதமாகவே கர்த்தர் நமக்கும் செய்கிறார். எந்தச் சங்கீதப் பிரியனும் தன் வாத்தியக் கருவியின்மேல் வைத்துள்ள அன்பைக் காட்டிலும் அவர் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார். அவர் நம்மில் கரூர ஒலியை உண்டாக்கும் அநேக குணங்களைக் காண்கிறார். அவர் நமது இருதய நாண்களைத் துன்பங்களின் வேதனைகளால் முறுக்குகிறார். அடித்த பின்பு நம்மிடம் பட்சமாய்ச் சாய்ந்து கவனிக்கிறார். இன்னும் கடுரத்தொனியைக் கேட்டு அவர் உள்ளம் உடைகிறது. என் சித்தத்தின்படியல்ல, உமது சித்தின்படியே ஆகட்டும் என்று சொல்லும் இனிய தொனியைக் கேட்க அவருடைய செவிகள் கவனித்திருக்கின்றன. அவருடைய செவிக்கு அதுவே தூதரின் கீதங்களைப் பார்க்கிலும் இனிமையானதும். சிட்சிக்கப்பட்ட உன் இருதயம் அவரோடு புனிதமான அன்பினால் ஒன்றாகும்வரை அவர் அடித்துக் கொண்டேயிருப்பார்.

வீணையின் நாண்களெல்லாம் ஒன்றாய்
சேர்ந்திசைத்தால் மா இனிமையே
ஒன்று உடைந்தால், நெகிழ்ந்தால், தொலைந்தால்
அதன் ஒலி கர்ண கடுரமே.
அன்பின் ஆனந்தம் அழிவின்
வேதனையோடு இணைந்ததே,
அரச கிரீடம் தூக்கும் கை அநேக சிலுவை சுமக்குமே.
எனினும் போராட்டம் இன்றி வெற்றியில்லையே
உழைப்பாளியே ஓய்வின் இன்பம் அறிபவன்.
மலை அழகும் விந்தைப் பிரகாசமும்
அடிக்கும் புயலினூடே அறிய முடியுமே
சிறந்த வெயில் உள்ள நாள்களில்
அவ்வழகை தூசி மறைக்குமே.
உன்னத ஆனந்தம், மனம் தாங்கா வேதனை
இவ்விரண்டையும் சேர்த்து விரும்புவோர் யார்?
தாங்கா வேதனை அடைவோரே
உன்னத ஆனந்தம் பெறுவார்
துக்கம் அறியா இருதயம் மகிழ்ச்சி அனுபவியாதே.