January

ஐனவரி 26

உனக்கு ஒப்புக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். சுதந்தரித்துக் கொள் (உபா.2:31).

கர்த்தருக்கு காத்திருத்தலைக் குறித்து, வேதபுத்தகத்தில் அதிகமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் தாமதித்தால் நாம் இலகுவில் பொறுமை இழக்கிறோம். நம் ஜீவியத்தில் பொறுமையிழந்து, பயனை ஆராயாது ஆத்திரப்படுவதால் அநேக கஷ்டங்கள் உண்டாகின்றன. காய் கனியக்காத்திராமல் பச்சைக் காயைப் பிறக்கவேண்டும் என்கிறோம். நான் கேட்கும் காரியம் ஆயத்தமாக அநேக ஆண்டுகள் அவசியமாயிருக்கலாம். ஆனாலும் நாம் அதைக் காரியம் கிடைப்பதற்காக ஜெபித்துக் காத்திருக்க முடியாதவர்களாயிருக்கிறோம். கர்த்தரோடு நடக்கும்படி போதிக்கப்படுகிறோம். ஆனால் அநேக தடவைகளில் அவர் நம்மை வெகு மெதுவாய் நடத்துகிறார். அதில் மற்றொரு படிப்பினையுமுண்டு. அநேகமுறை கர்த்தர் நமக்காகக் காத்திருக்கிறார்.

அநேகமுறை கர்த்தரோட முன்னேறிச் செல்லாததால் அவர் நமக்கென்று வைத்திருக்கும் பாக்கியங்களைப் பெறாதிருக்கிறோம். கர்த்தருக்கென்று காத்திராமல் அநேக பாக்கியங்களை இழப்பது மாத்திரமல்ல, வேண்டியதற்கதிகமாய்க் காத்திருந்தும் இழந்துவிடுகிறோம். சில வேளைகளில் காத்திருப்பதுவே நமக்குப் பெலனாகும். ஆனால் சில வேளைகளில் நாம் தைரியமாய் முன்னேறிச் செல்லவேண்டியவர்களாயிருக்கிறோம்.

நாம் சில காரியங்களைச் செய்தால்த்தான் நமக்கு வேண்டியது கிடைக்கும் என்பதான தெய்வீக வாக்குத்தத்தங்கள் உண்டு. நாம் கீழ்ப்படிய ஆரம்பித்தவுடன் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார். ஆபிரகாமுக்கு அநேக காரியங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கின்றன. அவன் கல்தேயாவில் தரித்திருந்தால் அவைகளில் ஒன்றையாகிலும் பெற்றிருக்கமாட்டான். அவன் தன் வீடு, தேசம், உறவு ஆகியவற்றை விட்டுப் புதிய இடங்களில் சென்று சந்தேகிக்காமல் கீழ்ப்படிந்ததனாலேயே பல வாக்குத்தத்தங்களைப் பெற்றான் (லூக்.17:12-19). ஆசாரியரிடம் காண்பிக்கும்படி இயேசு கட்டளையிட்டார். அவர்கள் போகையில் குணமடைந்தனர். தங்கள் சரீரத்தை சுத்தமாகக் காத்திருந்தார்களானால் குணமடைந்திருக்கமாட்டார்கள். கர்த்தர் அவர்களைச் சொஸ்தமாக்க ஆயத்தமாயிருந்தார். அவர்கள் விசுவாசம் கிரியை செய்ய ஆரம்பித்தவுடன் ஆசீர்வாதம் பெற்றார்கள்.

செங்கடலினருகில் இஸ்ரவேலருடைய சத்துருக்கள் அவர்களை நெருங்குகையில், புறப்படுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளை பிறந்தது. இனிமேல் காத்திராமல் ஜெபத்திலிருந்து எழுந்து விசுவாசத்தினாலுண்டாகும் தைரியத்தோடு முன்னேறிச் செல்வதே அவர்கள் கடமையாயிற்று. மற்றொரு யோர்தான் நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும்போது யோர்தானைக் கடந்து செல்லக் கட்டளை பெற்றார்கள். இவ்விதமாய் அவர்கள் தங்கள் விசுவாசத்தைக் கட்டும்படி கர்த்தர் ஏவினார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டின் வாசலைத் திறக்கும் திறவுகோல் அவர்கள் கையில் இருந்தது. அதை நெருங்கித் திறவாவிடில் அது அசையாமலிருக்கும். அந்தத் திறவுகோல் விசுவாசமே. நாம் ஜெயமடையமுடியாது. சத்துருக்களை மேற்கொள்ளமுடியாது என்று சொல்லுகிறோம். ஆனால் அப் போராட்டத்தில் ஈடுபடும்பொழுது, ஒருவர் வந்து நம் சார்பில் போரிடுகிறார். அவர்மூலம் நாம் சிறந்த வெற்றி வீரராகிறோம். நாம் பயந்து நடுங்கி நம் துணைவர் வரும்வரை போராட்டத்தில் ஈடுபடாமல் காத்திருந்தால் அவர் ஒருபோதும் வரார்.

இது அவிசுவாசத்தால் தேவைக்கு மிஞ்சிக் காத்திருத்தலாகும். ஆண்டவர் உன்மேல் திரண்ட ஆசீர்வாதங்களைப் பொழிய காத்திருக்கிறார். திடநம்பிக்கiயோடு முன்னேறிச் சென்று தன் உரிமையைப் பெற்றுக்கொள். உனக்கு நான் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன், சுதந்தரித்துக்கொள்.