January

ஐனவரி 23

கர்த்தாவே ஏன் தூரத்தில் நிற்கிறீர் (சங்.10:1).

தேவன் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையானவர். ஆனாலும் நம்முடைய பிரயாசத்தின் இறுதியை அடைந்து அருளின் நன்மையை அறிந்து துன்பத்தின்மூலம் உண்டாகும் அளவிடக்கூடாத ஆதாயத்தை அடையும்படி அவர் கவனியாதவர்போல் உபத்திரவங்கள் நம்மைத் தொடரவிடுகிறார். துன்பங்களை வரவிட்டு அவற்றில் நம்மோடு இருக்கிறார் என்பது நிச்சயமே. ஒருவேளை துன்பங்கள் நம்மை விட்டு விலகும்போது மாத்திரமே நாம் அவரைப் பார்க்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவர் நமக்குச் சோதனை நேரிடும்போது அருகிலிருக்கிறார் என்று நிச்சயமாய் நம்பவேண்டும். நம்முடைய கண்கள் இருளாகி, நம்முடைய ஆத்துமா நேசிக்கும் நண்பரைக் காணக்கூடாதிருக்கலாம். கண்கள் கட்டப்பட்டு இருளடைந்திருக்கலாம். ஆனால் நம்முடைய பிரதான ஆசாரியனைக் காண முடிவதில்லை. ஆனால் நமக்காக மனதுருகிறவராய் அவர் அங்கேயிருக்கிறார். நம் உணர்ச்சிகள் மேலல்ல, அவருடைய மாறாத அன்பிலே நம்பிக்கை வைப்போமாக. அவரைக் காணாவிட்டாலும் அவரிடம் சம்பாஷிப்போமாக. அவர் நம்முன் நிச்சயம் இருப்பதுபோல நாம் பேச ஆரம்பித்தால் அவருடைய சமுகம் மறைந்திருந்தாலும், உடனே பதில் சொல்லும் அவரது குரல் கேட்கும். இது அவர் மறைவிலிருந்து தமக்குரியவர்களாகிய நம்மைக் கவனிக்கிறார் என்று காட்டுகிறது. திறந்த வெளியில் செல்லுகையில் உன்னோடிருப்பதுபோலவே, உன் பரமபிதா, நீ இருண்ட குகை வழியாய்ப்போகும்போதும் உன்னோடிருக்கிறார்.

பாதை அறியாததாயிருந்தாலென்ன?
வழி கஷ்டமானாலென்ன?
அவர் காலடி ஓசை சமீபத்தில் இருக்கையில்
இருண்ட இடத்தில் நான் தனிமையாயிருக்கவில்லை.