January

ஐனவரி 21

அவைகளில் ஒன்றையும் குறித்து கவலைப்படேன் (அப்.20:24).

எபிரோனில் தாவீது முடிசூட்டப்பட்டவுடன் பெலிஸ்தர் அனைவரும் தாவீதைத் தேடி வந்தார்கள் என்று சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கிறோம் (2.சாமு.5:17). கர்த்தரிடமிருந்து விசேஷமாக ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது சாத்தான் நம்மைத் தேடிவருகிறான்.

நாம் கர்த்தருக்காக செய்யும் எந்த ஊழியத்தின் ஆரம்பத்திலும், சத்துரு நம்மைச் சந்தித்தால் அது இரட்சிப்புக்கு முன் அடையாளம் என்று எண்ணி, இரட்டிப்பான ஆசீர்வாதம், வல்லமை, வெற்றி, இவைகளைக் கொடுக்கும்படி தேவனை வேண்டுவோமாக. சக்தி எதிர்ப்பினால் உண்டாக்கப்படுகிறது. வெடிக்கும் சக்தி, எதிர்ப்பைத்தாண்டிச் செல்வதால் பீரங்கிக்குண்டு இரண்டு மடங்கு தூரத்திக்குச் செல்கிறது. மின்சார சக்தி செய்கிற உற்பத்தி சாலையில், சுழலும் சக்கரங்கள் உரசுவதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சாத்தானும் நாம் கர்த்தரின் ஆசீர்வாதம் பெற ஏதுகரமானான் என்று ஒருநாள் அறிந்து கொள்வோம்.

வீரனின் ஆகாரம் இனிப்பு பண்டங்களல்ல
அவன் இதயத்தையே உணவாகக் கொள்கிறான்.
மேன் மக்களின் அரண்மனை சிறையே
பெரிய கப்பலும் எதிர் காற்றே உதவியாம்.

வெற்றிக்கு வழி உபத்திரவமே. பள்ளத்தாக்கின் வழி இராஜபாதையில் கொண்டுபோய்ச் சேர்க்கும். எல்லா உன்னதப் பொருள்களிலும், உபத்திரவத்தின் அச்சடையாளம் உண்டு. உளையில்தான் கீரிடம் வார்க்கப்படுகிறது. கர்த்தரின் பாதங்களைச் சுற்றி வளைந்துவரும் நற்குணமென்னும் சங்கிலி உலக நெருப்பில் வார்க்கப்பட்டதே. துக்கமாகிய ஆலையை மிதியாதவன் ஒருவனும் சிறந்த வெற்றி வீரனாக்கப்படான். நெற்றியில் ஆழ்ந்த வேதனையால் சுருக்கங்கள் காணப்படும். துக்கம் நிறைந்த மனிதன் என்னப்பட்ட கிறிஸ்து, இந்த உலகத்தில் உங்களுக்குத் துன்பங்கள் உண்டு என்று சொன்னார். இந்தத் துக்கம் நிறைந்த வார்த்தைகளுக்குப்பின் ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் (யோ.16:33) என்ற வாக்குத்தத்தமான கீதம் உண்டாகிறது. சிம்மாசனத்திற்குப் போகும் பாதையில் இரத்தக் கறைகளுண்டு. தழும்புகளே செங்கோலின் கிரயம், நாம் எதிர்த்துப் போராடும் அரக்கனிடமிருந்து கிரீடங்களைப் பறித்துக்கொள்ளலாம். மேன்மையடைய துக்கம் அவசியம். இது வெளிப்படையான இரகசியம்.

வேதனையைப் பொறுக்கும் தன்மையே,
குணத்தின் மேன்மையை அளவிடும்.
பாடுவோனின் உள்ளத் துயரமே,
இனிய கீதம் உண்டாக்கும்.

உண்மையான புரட்சி வீரனின் வழியெல்லாம் வெகு உபத்திரவம் நிறைந்ததே. புரட்சியாளர்களாகிய பவுல், லூத்தர், சவநரோலா, நாக்ஸ், வெஸ்லி என்பவர்கள் சரிதையே இதற்கு அத்தாட்சி. அவர்களுடைய சிறந்த மேன்மைக்கு காரணம் அவர்களடைந்த துன்பமே.

ஒவ்வொரு சிறந்த புத்தகமும் ஆக்கியோனின் இரத்தத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் மிகுந்த உபத்திரவங்களிலிருந்து வந்தவர்கள் (வெளி 7:14). ஒப்புயர்வற்ற கிரேக்க கவிஞர் யார்? கோமர். ஆனால் அப்பெயர் பெற்ற கவிஞர் குருடராயிருந்தார். ஒருபோதும் மங்காப் புகழமைந்த தரிசனமாகிய மோட்சப்பயணம் என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? இராஜவஸ்திரந்தரித்து, சௌகரியமான படுக்கையில் படுத்தவரா? இல்லை. அந்த மகிமையான காட்சியின் பிரகாசம், பெட்போர்ட் சிறையில் இருண்ட சுவர்களின்மீது காணப்படுகையில், பிரபுத்தன்மை வாய்ந்த கைதியும் மகிமையான கலைஞனுமாகிய ஜான் பனியனே அக்காட்சியைப் பதிவுசெய்தார்.

ஜெபிப்போன் மேலானவனே.
எனினும் படுகாயமடைந்து,
இரத்தம் சிந்திக் களைத்து,
சண்டையிட்டே மடிவோன்
அவனிலும் பெரியோன்.