January

ஐனவரி 20

நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம். முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும் (பிர.7:3).

கர்த்தரின் கிருபையினால் துக்கம் வரும்பொழுது அது நமது ஜீவியத்திற்கு ஏராளமான நன்மையைத் தருகிறது. துக்கம் இருதயத்தின் ஆழத்தைத் தெரியப்படுத்தி, இதுவரை மறைந்திருந்த ஊழியம் செய்யும் தன்மையை வெளிக்கொண்டுவருகிறது. அற்ப சந்தோஷத்தை விரும்புகிவர்களிடம் ஆழமில்லை. அவர்களுடைய இயற்கையிலுள்ள அற்பத்தனத்தை அவர்கள் அறிவார்கள். நமக்குண்டாகும் துக்கங்கள் இருதயத்திலிருந்து நற்கனியுண்டாக்க அதன் அடி மண்ணைக் கிளப்பி உழும் தேவனுடைய கரத்திலுள்ள ஏர்களாகும். நாம் ஒருபோதும் பாவம் செய்யாதவர்களாக உன்னத நிலையில் இருந்திருந்தால் தெய்வீக சந்தோஷம் நீரோட்டத்தைப்போல நமது உள்ளத்தில் பாய்ந்து நமது ஆத்தும சக்திகளை வெளிப்படுத்தும். ஆனால் பாவத்தில் விழுந்துபோன இந்த உலகத்தில், துக்கம் நமக்கு நன்மையைத் தரும் சக்தியாகும். எனவே துக்கம் நம்மை ஆழ்ந்து யோசிக்கச் செய்து அமைதியுள்ளவர்களாக்குகிறது.

துக்கம் நம்முடைய நோக்கங்களையும், நிலைமையையும் ஆராய்ந்து நம்மை மெதுவாய் ஜாக்கிரதையாய் போகச் செய்கிறது. துக்கமே நம்மைப் பரலோக ஜீவியம் செய்யும் வன்மையை உடையவர்களாக்குகிறது. துக்கமே நமது சக்தியை உபயோகித்து நமது தேவனுக்கும், நம் அயலகத்தாருக்கும் கடல் போன்ற எல்லையற்ற அளவில் ஊழியம் செய்ய நம்மை மனமுள்ளவர்களாக்குகிறது.

ஒரு மலைத்தொடரின் அடிவாரத்தில் சுகஜீவியத்தையே விரும்பும் ஒரு வகுப்பார் வசிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் அம்மலைத் தொடரில் உள்ள பள்ளத்தாக்குகளையும், வெடிப்புகளையும் கண்டுபிடிக்க முன்வரவில்லை. ஒருநாள் புயலும் இடியும் உண்டாகும்போது அம்மலையின் பள்ளத்தாக்ககளில் எதிரொலி எழுகிறது. அவ்வொலி மலைகளினிடையே பெரும் பள்ளங்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறது. மலைக்குச் சமீபத்தில் வசித்து வந்தும் மலை அடிவாரத்தில் உள்ளவர்கள் இதுவரையில் அம்மலையில் தாங்கள் கண்டுபிடியாத பள்ளத்தாக்குகள் உள்ளன என்றும் அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள்.

தங்களுடைய தன்மையின் வெளி ஓரங்களை மட்டும் அறிந்து, அவற்றிலேயே ஜீவித்து வரும் அநேக ஆத்துமாக்கள் உண்டு. இடியும், புயலும் போன்ற துக்கங்கள் இருதயத்தில் ஆழந்து மறைந்துள்ள சக்திகளை வெளிப்படுத்தும்வரை அவற்றை அவர்கள் உணராதிருக்கிறார்கள்.

கர்த்தர் ஒருவனை மிகுதியாய்ப் பயன்படுத்துமுன் அவனைச் சுக்குநூறாக உடைத்துச் சின்னாபின்னமாக்குகிறார். யோசேப்புக்குத் தன் சகோதரரைப் பார்க்கிலும் அதிக துன்பமுண்டாயிற்று. அது அவனைப் எல்லா ஜாதிகளையும் போஷிக்கும் ஊழியத்திற்கு வழி நடத்திற்று. இக் காரணத்திற்காகவே பரிசுத்த ஆவியானவர் அவனைக் குறித்து யோசேப்பு கனிதரும் செடி, அவன் நீரூற்றண்டையிலுள்ள கனிதரும் செடி. அதன் கொடிகள் சுவரின்மேல் படரும் என்று கூறுகிறார் (ஆதி.49:22). துக்கம் ஆத்துமாவை விரிவாக்கும்.

கறுப்பு மண் தரை ஏரால்
உழப்பட்டு மிருதுவாகும் – இதனால்
நான் ஒரு பாடம் படித்தேன்
என் ஜீவியம் வானத்தின் கீழ்
கனிதரவேண்டிய கர்த்தரின் வயல்போன்றதே
தங்கக் கதிர் மணி எங்குண்டு?
விசுவாசம் அனுதாபம் எங்குண்டு?
உழப்பட்ட உள்ளத்திலேயே.

துன்பம் என்னும் கர்த்தரின் பள்ளியில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு ஜாதியும் கற்றுக்கொள்ளவேண்டும். இரவு பாக்கியமான வேளை. ஏனென்றால் விண்மீன்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன என்று நாம் சொல்லக்கூடும். அதுபோல் துன்பங்கள் பாக்கியமானவை. ஏனென்றால் அவை கர்த்தரின் ஆறுதலைக் காண செய்கின்றன என்று சொல்லலாம்.

வெள்ளம் வந்து ஓர் ஏழை மனிதனுடைய வீடு, ஆலை முதலிய அவனுக்குரிய யாவற்றையும் வாரிச் சென்றது. வெள்ளம் வடிந்தபின், அவன் தைரியம் இழந்து மனச்சோர்வுடன், தான் இழந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் தண்ணீர் அடித்து வெறுமையாக்கிச் சென்ற தரையில் ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டான். அது தங்கம் போலிருக்கிறது என்று அவன் சொன்னான். அது தங்கமாகவே இருந்தது. அவனைப் பிச்சைக்காரனாக்கிய அதே வெள்ளம் அவனை ஐசுவரியவானாக்கியது. உன் ஜீவியத்திலும் இப்படி அநேக முறை நடக்கிறது.