January

ஐனவரி 19

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் (லூக்.18:1).

எறும்பினிடம் செல். தாமர்லேன் என்பவர் தன் இளவயதில் நடந்த ஒரு விஷயத்தைத் தன் சிநேகிதருக்கு சொல்வது வழக்கம். நான் ஒருமுறை சத்துருவிடமிருந்து தப்ப ஓர் இடிந்த கட்டடத்தில் அடைக்கலம் புகவேண்டியதாயிற்று. நான் அவ்விடத்தில் அநேக மணி நேரம் தனித்து உட்கார்ந்தேன். என் நம்பிக்கையற்ற நிலைமையை எண்ணி வருந்துவதை மாற்றத் தன்னைவிட பெரிய தானியத்தை இழுத்துக்கொண்டு, உயர்ந்த சுவரின்மேல் ஏறின ஓர் எறும்பைக் கவனித்தேன். அது தன் இலக்கு நிறைவேற எத்தனை முறை முயன்றது என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தானியம் அறுபத்தொன்பது முறை கீழே விழுந்தது. எறும்பு விடாமுயற்சியின் பயனாக எழுபதாவது முறை உச்சியை அடைந்தது. அந்தக் காட்சி அந்த வேளையில் எனக்கு ஊக்கமளித்தது. அந்தப் பாடத்தை நான் மறக்கவேயில்லை.

முந்தின ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்ற காரணத்திற்காக ஜெபத்தில் ஊக்கம் குன்றினால் அந்த ஜெபம் விசுவாசமற்ற ஜெபமாகிறது. விசுவாசத்தோடு செய்யும் ஜெபத்திற்கு உடனே பதில் வராவிட்டாலும் அது விரைவிலேயே வரும் என்று நம்பலாம். மறுபடியும் மறுபடியும் ஜெபித்து தினமும் புதிதாக வேண்டுதல் செய்து முந்தின வேண்டுதல்களிலிருந்து பலனடைந்து ஜெபியாவிட்டால் அதனால் பயனில்லை என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்குக் கூறியிருக்கிறார். முன்மாதிரி காட்டியுமிருக்கிறார்.

ரூபன்ஸ்தீன் என்னும் சங்கீத வித்துவான் பின்வருமாறு கூறியுள்ளார். நான் ஒருநாள் பாடல் பயிற்சி செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் குறை நான் உணரத்தக்கதாயிருக்கும். இரண்டு நாள் பயிற்சி செய்யாவிட்டால் என் சிநேகிதர் என் குறைவை அறிந்துகொள்வார்கள். மூன்றுநாள் பயிற்சி செய்யாவிட்டால் பொது ஜனங்களே அறிந்துகொள்வார்கள். பயிற்சியே பூரணப்படுத்தும் என்ற பழமொழியுண்டு. நாம் விசுவாசித்தும், ஜெபித்தும், கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றியும் இருக்கவேண்டும். எந்தக் கலையிலும் ஒழுங்கான பயிற்சி இல்லையெனில் என்ன நேரிடும் என்று நமக்குத் தெரியும். அந்த அறிவை நம் மார்க்கத்திற்கும் உபயோகித்து, நம்முடைய அன்றாட ஜீவியத்தில் பழகிக்கொண்டே வந்தால் பூரணமடைவோம்.

டேவிட் லிவிங்ஸ்டனின் இலட்சிய வாக்கியமாவது: நான் என் இலக்கை அடையும் பரியந்தம் முடிவுவரை தொடர்ந்து செல்வேன் என்று தீர்மானித்துள்ளேன் என்பதே. விசுவாசத்தினாலும், விடாமுயற்சியினாலும் அவர் வெற்றி பெற்றார்.