January

ஐனவரி 18

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2.கொரி.2:14).

வெளித்தோற்றத்திற்குத் தோல்வியாகக் காணப்படுபவைகளிலிருந்தே கர்த்தர் சிறந்த வெற்றியைப் பெறுகிறார். அநேக முறைகளில் சத்துரு சிறிது காலம் மேற்கொள்ளுகிறான். கர்த்தரே அப்படிப் காணப்படச் செய்கிறார். சத்திய வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி துன்மார்க்கனின் வழிகளைத் தலை கீழாக மாறச் செய்கிறார். இவ்விதமாக நம்மைச் சிறந்த வெற்றியடையச் செய்கிறார். தொடக்கத்தில் சத்துரு பார்வைக்கு ஜெயம் பெறுவதுபோல் இல்லாவிட்டால் நாம் இவ்வளவு சிறந்த வெற்றியை அடையமாட்டோம்.

எபிரெய வாலிபர்கள் மூவர் எரிகிற அக்கினியில் போடப்பட்ட சம்பவம் எல்லாருக்கும் தெரிந்ததே. அது தானியேல் 3ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சத்துரு ஜெயம்கொண்டதுபோல் தோன்றிற்று. ஜீவனுள்ள தேவனின் மக்கள் பெருத்த தோல்வியடைந்ததுபோல் காணப்பட்டது. நம் ஜீவியத்தில் அநேக தடவைகளில் நாம் தோல்வியடைந்து சத்துரு எக்களிப்புக் கொள்வதுபோல் தோன்றியதுண்டு. அவர்கள் நெருப்பில் எறியப்பட்டார்கள். சத்துருக்கள் அவர்கள் பெரிய அக்கினியில் நடந்து களிகூருவதைக் கண்டு வெகுவாய் ஆச்சரியமடைந்தார்கள். நேபுகாத்நேச்சார் அவர்களை நெருப்பிலிருந்து வரும்படி கட்டளையிட்டான். தலையின் ஒரு ரோமமும் கருகவில்லை. அவர்களுடைய வஸ்திரத்தில் அக்கினியின் மணமும் இல்லை. இவ்விதமாய் காப்பாற்றக்கூடிய தெய்வம் வேறொன்றுமில்லையல்லவா?

இந்த வெளியரங்கமான தோல்வி ஆச்சரியமான வெற்றியையளித்தது. மூன்று வாலிபர்களும், தங்கள் தைரியத்தையும் விசுவாசத்தையுமிழந்து, கடவுள் ஏன் எங்களை இந்நெருப்பிலிருந்து காப்பாற்றவில்லை என்று முறுமுறுத்திருப்பார்களானால், அவர்கள் எரிந்து சாம்பலாயிருப்பார்கள். கர்த்தர் மகிமையடைந்திருக்கமாட்டார். இன்று உனக்குப் பெரிய கஷ்டம் ஒன்று ஏற்பட்டால் அதை தோல்வியாக எண்ணாதே. வெற்றியிலும் மேலான பேற்றை உனக்கு அளிக்கும் இறைவனை நம்பி அதை வெற்றியாக நினை. மகிமையான வெற்றி சீக்கிரம் வெளிப்படும். நமக்கு கர்த்தரால் வரும் துன்பங்கள் யாவும் பாக்கியமான பயனையளிக்கவும், அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், நம்முடைய விசுவாசத்தைப் பயன்படச் செய்யவும் ஏற்ற உன்னத சமயங்கள் என்று அறிவோமாக.

ஆத்துமத்தை அலைக்கழித்து அதன் மகிமையை வெளியேற்ற வெற்றியைப்போல தோல்வியும் உதவும்.

பெரிய தேக்கு மரம் காற்றால் அடிபடும்போது
அதன் கிளைகள் புது அழகு பெறும்
அதன் வேர் ஆழமாய்ச் செல்லும்
அதிகம் துக்கம் கண்ட ஆத்துமாவே
ஆழ்ந்த ஆனந்தம் காணக்கூடும்
துக்கம் இருதயத்தை ஆனந்தம் அடையும்படி பெரிதாக்கும்.