January

ஐனவரி 17

தானியேலே! ஜீவனுள்ள தேவனுடைய தாசனே! நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா (தானி.6:20).

ஜீவனுள்ள தேவன் என்ற வார்த்தைகளை வேத புத்தகத்தில் எத்தனைமுறை வாசிக்கிறோம்? ஆனால் அதைத்தான் நாம் அடிக்கடி மறந்துபோகிறோம். ஜீவனுள்ள தேவன் என்று எழுதியிருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால் நம்முடைய அன்றாடக வாழ்க்கையில் அதை மறந்துவிடுவதுபோல் வேறெதையும் மறப்பதில்லை. மூவாயிரம் அல்லது நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் அவர் எப்படியிருந்தாரோ, அப்படியே இப்பொழுதும் மாறாமல் இராஜரீகம் செய்கிறார். அவரை நேசித்துத் தொண்டு புரிபவர்களை அவர் நேசிக்கிறார். ஆகையால் நாம் அவரிடம் எவ்வளவு நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்முடைய இக்கட்டுகளினிடையே அவர் இருக்கிறார். ஜீவனுள்ள தேவனாகவே இருக்கிறார் என்ற எண்ணத்தை நாம் மறக்கக்கூடாது. கடந்த காலத்தில் பிறருக்கு உதவிசெய்தபடியே உங்களுக்கும் செய்வார்.

அவரோடு நடந்து அவரையே உன் ஆதரவாகக்கொண்டு அவரிடமிருந்து உதவியை எதிர்பார்த்தால், அவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை மறந்துவிடாதே. நாற்பது வருடகாலமாய்க் கர்த்தரை அறிந்துள்ள ஒரு மூத்த சகோதரன் நம்மைத் திடப்படுத்துமாறு, கர்த்தர் தன்னை ஒருபோதும் கைவிட்டதில்லை என்கிறார். பின்னும் அவர், என்னுடைய பெரிய கஷ்டங்களிலும், மிகுந்த சோதனைகளிலும், தரித்திரத்திலும், தேவையிலும், என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. நான் அவருடைய சுத்த கிருபையால் அவரை நம்பக்கூடியவனாயிருந்தமையால் எப்போதும் எனக்கு உதவிசெய்கிறார். அவர் நாமத்தைக் குறித்துப் புகழ்பாட என் ஆத்துமா ஆனந்தம் கொள்ளுகிறது என்கிறார் ஜார்ஜ் முல்லர்.

ஒரு தடவை லூத்தருக்கு பயமும் திகிலும் ஏற்பட்டது. கலக்கமும் திகிலும் நிறைந்த அவ்வேளையில், காணப்படாத இறைவனின் சக்தியே பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டியிருக்கும்பொழுது, அவர் தன்னையறியாது மேஜையில் ஜீவனோடிருக்கிறார். அவர் ஜீவனோடிருக்கிறார் என எழுதிக்கொண்டிருந்தார். நமக்கும் மானிட வர்க்கத்திற்கும் நம்பிக்கை இது ஒன்றே. மனிதர் தோன்றி மறைகிறார்கள். தலைவர்களும், குருக்களும், ஞானிகளும், சிலகாலம் உழைத்துப் பின்பு சக்தியற்று ஓய்ந்துவிடுகிறார்கள். ஜீவனுள்ள தேவன் நிலைத்திருக்கிறார். அவர்கள் ஏற்றப்பட்ட விளக்குகளே. ஆகையால் எப்போதாவது ஒரு நேரம் அணைந்துபோவார்கள். அவரே மெய்யான ஒளி. அவரிடமிருந்தே ஏனையோர் பிரகாசம் பெற்றுக்கொள்கின்றனர். ஆகையால் அவர் சதாகாலமும் பிரகாசிக்கிறார்.

ஜான் டக்ளஸ் ஆதாம் என்பவரைக் குறித்துப் பின்வரும் குறிப்புகளை ட்ரம்புல் என்பவர் எழுதியுள்ளார். ஜான் டக்லஸ் என்பவர் எனக்கு அறிமுகமானார். இயேசுவின் பிரசன்னம் தன்னோடு இருப்பதாக உணர்ந்த அந்த மாறாத உணர்ச்சியே அவருக்கு ஆவிக்குரிய ஆதாரமாயிருந்தது என்பதை நான் அறிந்தேன். இயேசுவின் பிரசன்னம் சதா தன்னோடு இருக்கிறது என்ற அறிவே அவருக்கு ஊக்கமளித்தது. இயேசுவின் பிரசன்னம் தனது உணர்ச்சியையும், தகுதியையும் எண்ணங்களையும் பொறுத்தல்ல. இவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதை அவர் அறிந்திருந்தார்.

அதுவுமன்றி அவர் கிறிஸ்துவே தன் உறைவிடம் என்றார். தன் மனது இதர காரியங்களிலிருந்து எப்பொழுது விடுபடுகிறதோ அப்பொழுதெல்லாம் கிறிஸ்துவினிடம் திரும்பும் என்கிறார். தன் மானிட நண்பனோடே பேசுவதுபோல் வீதியில் தனியாய்ச் செல்லும்போது, எளிதாய், சுலபமாய் கிறிஸ்துவோடு பேசிக்கொண்டு செல்லுவார். இயேசுவின் பிரசன்னம் அவருக்கு அவ்வளவு உண்மையாய் இருந்தது.