January

ஐனவரி 16

அப்பொழுது பலத்த சுழல் காற்று உண்டாகி….. (மாற்.4:37).

ஜீவியத்தில் சுழல் காற்றுகள் சில திடீரென வருகின்றன. ஒரு பெரிய துக்கம், மிகுந்த ஏமாற்றம், கீழே அமிழ்த்தும் தோல்வி. இவைபோன்றவை மெதுவாக வருகின்றன. தொடக்கத்தில் ஒரு மனிதனின் கையளவு மட்டுமே எனத்தோன்றுகிற அற்பமான துன்பம் ஆகாயத்தை மூடுமளவு பரவி நம்மை நிலைகுலையச் செய்யும்.

ஆயினும் இந்தச் சுழல் காற்றில்தான் தேவன் நம்மைத் தம் சேவைக்கு ஆயத்தப்படுத்துகிறார். தேவனுக்கு ஒரு தேக்கு மரம் தேவையாயிருக்கும்போது, அதை சுழல் காற்று வீசி, மழை மோதியடிக்கும் தரிசு நிலத்தில் நாட்டுகிறார். அதனாலேயே அம்மரம் பல சூழ்நிலைகளையும் எதிர்த்து நின்று போராடிப் பலத்த நார்களைப் பெற்றுக் காட்டு இராஜாவாக விளங்குகிறது.

கர்த்தர் தம் சேவைக்குகந்த ஆளை ஆயத்தப்படுத்தச் சுழல் காற்றினிடையே அவனை அனுப்புகிறார். பூரண புருஷனாக விளங்குவது எளிதல்ல. புயலை எதிர்த்து நின்று, இறைவனே என்னை ஏற்றுக்கொள். கஷ்டங்களின் மூலமாய் என்னைச் சீர்திருத்து என ஜெபம் செய்து, அந்த ஜெபத்தின் பயனை அடையும் வரையில் ஒரு மனிதன் மனிதனாவதில்லை.

ஒரு பிரெஞ்சு சித்திரக்காரன் சர்வலோக கலைஞர் என்னும் பெயர் கொண்ட ஒரு காட்சியைச் சித்தரித்தான். அதில் வாக்கு வல்லவர்களும், தத்துவஞானிகளும், இரத்தச் சாட்சிகளும், உலகில் ஏதாவது ஒரு காரியத்தில் மேன்மை பெற்றவர்களும் இடம் பெற்றார்கள். அப்படத்தின் சுவிசேஷம் யாதெனில் அதில் சித்தரிக்கப்பட்ட ஒவ்வொருவரும் முற்காலத்தில் பாடனுபவிப்பதில் முதன்மையிடம் பெற்றவர்கள். முன்னால் நிற்பவர் வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் காணமாட்டாய் என்ற தண்டனை பெற்ற மோசே. அவருக்குப் பக்கத்தில் நிற்கிறார் தன் வழியைத் தடவிப் பார்த்து அறிந்துகொள்ளும் குருடரான கோமர். குருடனும் துக்கம் நிறைந்தவருமான மில்டனும் நிற்கிறார். இவர்களுக்கெல்லாம் மேலாக ஒருவர் நிற்கிறார். அவருடைய குணாதிசயமென்ன? அவருடைய முகம் மற்ற முகங்களைவிட அதிகம் சிதைந்து உள்ளதாகக் காட்டுகிறது. அந்தச் சித்திரக்காரன் அந்த சித்திரத்திற்குப் புயல் என்று பெயரிட்டிருக்கலாம்.

இயற்கையின் அழகு புயலுக்குப்பின்தான் உண்டாகிறது. கரடு முரடான மலையின் அழகு புயலினால் உண்டாகிறது. வாழ்க்கையில் வீரர்களாயிருப்பவர்கள் புயலில் அடிப்பட்டு யுத்தத்தில் காயமடைந்தவர்களே.

நீயும் புயல்களையும், பெருங் காற்றுகளையும் அனுபவித்திருக்கிறாய். அவைகளின் விளை பலன் யாது? துன்பங்கள் உன்னை மனங்குன்றியவனாக்கித் தோல்வியடையச்செய்து பள்ளத்தாக்கில் விட்டுவிட்டனவா? அல்லது நிலையானதும், அறிவு நிறைந்ததும், நற்குறி உள்ளதுமான பெண்மையையோ அல்லது அண்மையையோ அளித்து சூரிய ஒளி நிறைந்த மலையுச்சியை அடையச் செய்தனவா? அவை உன்னைத் துக்கத்துக்குரியவனாக, புயலில் அடிபட்டவனான போரில் காயமடைந்தவனாக மாற்றிவிட்டனவா?

கர்த்தர் வைத்த மரங்களைக்
காற்று ஒருக்காலும் அழிக்காது.
காற்று கிழக்கு மேற்குமாக அடிக்கிறது.
மரங்களின் இலைகளுக்கு ஓய்வு இல்லை.
ஆனால் கர்த்தர் வைத்த நாற்றுகளுக்கு
எந்தக் காற்றும் நல்லதே.
அவைகள் ஆழமாய் வேர் வைத்து வளர்ந்து,
அகலக் கிளைகள் விட்டு நிற்கும்,
கர்த்தர் அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.

கர்த்தர் அறிந்த மரத்தை
எந்தப் புயலும் முறிக்காது.
அதிரும்படியும், பலத்த மழையும்,
எரிக்கும் மின்னலும், பெருங்காற்றும்,
முடிந்த பின்னும் அது நிற்கும்
கர்த்தர் அறிந்த மரம்
எல்லாப் புயலையும் தாங்கும்
தொடக்க முதல் முடிவுவரை
அழகு பெற்று வளரும்.