January

ஐனவரி 15

அன்று ராத்திரியில் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி…. (ஆதி.26:24)

ஈசாக்கு பெயர்செபாவுக்குப்போன அன்றிரவே தேவன் அவனுக்குத் தரிசனமானார். அத்தரிசனம் தற்செயலாகக் கிடைத்ததென்று நீ எண்ணுகிறாயா? அது வேறு எந்த இரவிலும் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறாயா? அப்படியானால் நீ எண்ணவது தவறு. ஈசாக்கு பெயர்செபாவுக்குச் சென்ற அன்று இரவில் அவர் வெளிப்படுவானேன்? ஏனென்றால் அன்றிரவுதான் அவன் துன்பப்பட்டான். அற்பக் கிணறுகளின் உரிமையைக் குறித்து அடுத்தடுத்துப் பன்முறை சின்னஞ்சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. சிறு கவலைகள் அடிக்கடி ஏற்படும்பொழுது அது அதிகக் கவலையைப் பிறப்பிக்கும். ஈசாக்கு அதை உணர்ந்தான். சண்டை ஓய்ந்த பின்னும் அதைக் குறித்த மனத்தாங்கல் இருக்கும். ஆகையால் அவன் அந்த இடத்தைவிட்டுச் செல்லத் தீர்மானித்தான். முன்பு சண்டை ஏற்பட்ட இடத்திற்கு அப்பால் சென்று தன் கூடாரத்தை அடித்தான். அந்த இரவே அவனுக்குத் தரிசனம் கிடைத்தது. உள்ளத்தில் கலக்கம் இல்லாதபோது கர்த்தர் பேசினார். அவன் மனம் குழம்பியிருக்கும்போது அவர் பேசமுடியவில்லை. அவர் சத்தத்தைக் கேட்க ஆத்துமத்தில் அமைதி வேண்டும். ஆவி அமைதியாய் இருக்கையில் ஈசாக்கு கர்த்தரின் வஸ்திர சப்தத்தைக் கேட்டான். அவன் அமைதலாயிருந்த இரவே அவனுக்கு ஒளி நிறைந்து இரவாயிற்று.

நீங்கள் அமர்ந்திருந்து…. அறிந்துகொள்ளுங்கள் (சங்.46:10). இவ்வாhர்த்தைகளை நீ ஆராய்ந்ததுண்டா? குழப்பம் நிறைந்த வேளையில் ஜெபத்திற்கான பதிலை நம் காதுகளால் கேட்க முடியாது. அநேக தடவைகளில் ஜெபத்திற்குப் பதில் பிந்திவருவதுபோல் தோன்றுகிறது. இருதயம் அங்கலாய்த்து, அது பலவிதமாகக் கலக்கமுறும்பொழுது அதற்குப் பதில் கிடையாது. அமைதலாகும்பொழுது, அங்கலாய்ப்பும் அமரும்போதும், மற்றவர்கள் மேலுள்ள பட்சபாதம், உன் அங்கலாய்ப்பை மாற்றும்பொழுதும், நீண்ட காலமாய்த் தாமதித்த பதில் கிடைக்கும்.

என் ஆத்துமாவே! உன் ஆசை நிறைவேற அமர்ந்திருக்க வேண்டும். உன்னைக் குறித்த கவலை என்னும் நாடித் துடிப்பை தன்னிலைப்படுத்து. மற்றவர்களின் தன்பத்தை எண்ணி, உன்னை மாத்திரம் பாதிக்கும் வருத்தங்களை மறந்துவிடு. அன்று இரவு கர்த்தர் உனக்குத் தரிசனமாவார். வடிகின்ற வெள்ளத்தின்மேல்தான் வானவில் தோன்றும். உன் அமைதியில் பேரின்ப கீதம் கேட்கும்.

உன் பாதையில் தனியே நடந்து
அமர்ந்து தைரியத்தோடிரு – அப்போது
முன்பு ஒருவரும் உனக்குச் சொல்லியிராத
புதுமையான சத்தியங்களைக் கேட்பாய்.
ஒசை நிறைந்த ஒரு சில மக்கள்
வீணான சிற்றின்பத்தைப் பற்றுகையில்
நீ இனிமையான தெய்வீக சங்கீதம் கேட்கும்
புது உலகம் உருவாகக் காண்பாய்
தூசி நிறைந்த பாதையை பிறருக்கு விட்டுவிடு
சூரியன் மறையும் பொழுதில்
கடலில் தோன்றும் எழிலைப்போல உன் இதயத்திலே
பரிசுத்த ஒளியும் வீசட்டும்