January

ஐனவரி 14

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு…. (யோ.10:4)

இது நமக்கும் அவருக்கும் கசப்பான வேலை. புறப்பட்டுப்போவது நமக்குக் கசப்பு. நமக்கு வேதனை உண்டாகச் செய்வது தேவனுக்கு கசப்பு. ஆனால் வேதனை கொடுக்கப்படவேண்டியது அவசியம். எப்பொழுதும், சந்தோஷமான சௌகரியமான இடத்திலேயே தங்கிவிடுவது நம்முடைய நல்வாழ்விற்கு ஏற்றதல்ல. ஆகையால் அவர் நம்மை வெளியே விடுகிறார். ஆடுகள் தொழுவத்தை விட்டுச்சென்று மலைச்சரிவுகளில் அலைந்து திரிவதாலேயே பலம் பெறுகின்றன. மக்கள் வீட்டைவிட்டு சென்று வயலில் அறுவடை செய்யவில்லையெனில் தானியங்கள் அழிந்துவிடும்.

நாம் செல்லவேண்டுமென்று தேவன் தீர்மானிக்கும்போது பின் தங்கிவிடுவது நன்மை பயக்காது. கர்த்தரின் அன்புள்ள கரம் நம்மை வெளியே விடும்போது, அது நமக்கு நன்மையாகவே இருக்கும். அவருடைய சித்தத்தை நிறைவேற்ற புல்லுள்ள இடத்திற்கும், அமர்ந்த தண்ணீர்களண்டைக்கும் மலை உச்சிக்கும் செல்வோம். அவர் உனக்கு முன்னால் போகிறார். நமக்கு வரக்கூடியதெல்லாம் அவர் முன்னதாகவே அறிந்திருக்கிறார். விசுவாசக்கண்கள், கர்த்தர் எப்பொழுதும் முன்னே இருக்கிறார் என்பதை அறிகின்றன. இதை அறியாதபோது முன்னேறிச் செல்வது அபாயத்திற்கு இடமாகும். இரட்சகர் நம்மை அடையச்செய்யும் சகல அனுபவங்களையும் தாம் கடந்தார் என்ற சத்தியத்தை உன் இருதயத்தின் ஆறுதலெனக்கொள். என் கால்களுக்கு மனமில்லாத பாதை என்றும், உன் பலத்திற்கேற்ற வேலை என்றும் அறிந்தே உன்னை அவற்றில் வழிநடத்துகிறார்.

நமக்கு முன்னே உள்ளவைகளை அறியவேண்டுமென்ற ஆசையும், அடுத்த வினாடியைக் குறித்து கவலையும், நம் வழியைத் தெரிந்தெடுக்க ஆவலும் இல்லாதிருத்தல் வேண்டும். எதிர்காலத்தைக் குறித்த பொறுப்பின் பாரத்தால் அமிழ்த்தப்படாமல், ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு அடியாக மேய்ப்பனின் பின்னால் அமைதியாய்ப் பின்செல்லும் ஜீவியமே பாக்கியமுள்ள ஜீவியம்.

வானம் கறுத்திருக்கிறது. வருங்காலத்தை நான் அறியேன்
இரவு முடியவில்லை பாதை இருட்டே
நான் பாதையின் சிறுபகுதியும் காணாதிருக்கிறேன்.
அவர் என்முன் செல்கிறார் என்பதை அறிவேன்.

அபாயம் நெருங்குகிறது பயம் உள்ளத்தை நடுங்கச் செய்கிறது.
என்ன நேரிடுமோ என்ற திகில் என்னைப் பிடிக்கிறது.
ஆனால் நான் அவருடையவன். என் வழியை அவர் அறிவார்.
அவர் என்முன் செல்கிறார் என்பதை அறிவேன்.

சந்தேகம் என்மேல் நிழலிடுகிறது.
என் ஜீவனின் நன்மை முடிந்தது என்று சந்திக்கிறேன்.
ஆயினும் அவர் வார்த்தை என் பலம், என் இரட்சிப்பு
என் தேவன் என்முன் செல்கிறார் என்பதை அறிவேன்.

அவர் என்முன் செல்கிறார். இதுவே என் ஆறுதல்.
அவர் என்முன் செலகிறார், என்பதே என் தியானம்.
அவர் என்முன் செல்கிறார், ஆதலால் இரட்சிப்பு நிச்சயம்
அவர் என்முன் செல்கிறார், ஆதலால் எல்லாம் நலமே.

கீழைநாட்டு மேய்ப்பன் தன் அடுகளுக்கு முன் செல்வான். மந்தையைத் தாக்குபவன் அவனை முதலில் தாக்கி ஆகவேண்டும். கர்த்தர் முன்னால் நிற்கிறார். வருங்காலத்திலும் நிற்பார். எதிர்காலமோ நம்மைப் பயமுறுத்துகிறது. ஆயினும் நம்முடைய எதிர்கால சம்பவங்கள் அவரைத் தாண்டியே நம்மண்டை வரவேண்டும்.

கர்ததர் வருங்காலத்தில் என்னோடிருப்பார்
ஆகையால் நான் இன்றைக் கென்றே ஜீவிப்பேன்.
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
அவர் பலம் தந்து எனக்கு வழிகாட்டுவார்.
பலவீனமான நேரத்தில் சக்தியைக் கொடுப்பார்.
நோயுற்றிருக்கையில் நம்பிக்கை தருவார்.
துன்ப சமயத்தில் ஆறுதலளிப்பார்
மழைக்குப் பின் வெயில் அனுப்புவார்.