January

ஐனவரி 12

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்பொது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக்.1:2-3).

தேவன் தம் ஜனத்தைப் பாதுகாக்க அவர்களைச் சுற்றி ஒரு வேலியை ஏற்படுத்துகிறார். ஆனால் அவர்கள் அதைத் தவறாக அர்த்தப்படுத்தி அவருடைய செயலை அறியாதிருக்கிறார்கள். யோபினுடைய அனுபவமும் இதுவே (யோபு 3:23). ஆனால் சாத்தான் அந்த வேலியின் உபயோகத்தை அறிந்திருந்தான் (யோபு 1:10). துன்பங்களாகிய இலைகள் ஒளியை ஓரளவு மறைத்தாலும் அவற்றினிடையே ஒளிவர வழியுண்டு. முள்ளின்மேல் நீ சாய்ந்தாலன்றி அது உன்னைக் குத்தாது. அவற்றுள் ஒன்றும் இயேசு அறியாமல் உன்னதை; தொடுவதில்லை. உன்னை வேதனைப்படுத்திய வார்த்தை, உனக்கு மனச்சோர்வுண்டாக்கிய கடிதம், உன் சிநேகிதனால் உனக்குண்டான மனப்புண், உனக்குப் பொருளின்மையால் வரும் பற்றாக்குறை எல்லாம் அவருக்குத் தெரியும். மற்றவர்களின் இரக்கத்திற்கு மேலாக அவர் உன்மேல் இரக்கங்கொள்ளுகிறார். இவைகள் எல்லாவற்றிலும் தம்மை முழுவதும் நம்பும் தைரியம் உனக்கு இருக்கிறதா என்று அவர் கவனிக்கிறார்.

நம்மைத் தடுக்கும் முள் வேலி
வெறுமையாய்ப் பயங்கரமாய்த் தோன்றுகிறது.
குளிர்காலத்தில் இலை உதிர்ந்து முள் மாத்திரம் இருக்கும்
அதன் முள்கள் நம்மைக் கிழித்துப்
புண்படுத்தும் போலிருக்கிறது
வசந்த காலம் வரும்போது ஆரோனின் கோல்போல்
ஒவ்வொரு இலையும் துளிர்த்துப் பச்சிலைகளால் நிறையும்
முன்பு முள்மட்டும் இருந்த இடம் இப்பொழுது
பசு மெத்தைப்போல் ஆகும்.
நம்மைக் கவலைக்குள்ளாக்கும் வருத்தங்கள்
அநேக தீமையினின்று நம் ஆன்மாவைக் காக்கும்.
நாம் வழி தவறிச் செல்லாதவாறு
தடுக்கும் அருளின் வடிவங்கள் அவைகளே.
குழியில் விழாதவாறு நம்மைக் காக்க
மெல்லிய மலர்களாகிய வேலிபோதாது.
முள் வேலி போன்ற தடைகளே
நம்மைத் தடுத்து நிறுத்தக்கூடும்.
நாம் இந்த முள் வேலியில் மோதிக்
காயப்பட்டு, நம்முடலினின்று இரத்தம் வடியும்போது,
தேவன் நமக்காக எற்படுத்திய இத் தடைகள்
மிகக் கடினமாகவே தோன்றும்
மறைவாயுள்ள குழிகளில் நாம் விழாதவாறு
கர்த்தரால் பாதுகாப்பமைக்கப்பட்ட
பாதையில் செல்லும்போது
அவருடைய அறிவையும் இரக்கத்தையும் எண்ணி
நாம் அழகிய துதிப்பாடல்கள் பாடுவோம்.