January

ஐனவரி 10

அவர்கள்…. ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு…. (அப்.16:6).

ஆரம்ப காலத்து நற்செய்தி பிரசங்கிகள் கர்த்தரால் நடத்தப்பட்ட முறைகளைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது. தவறான வழியில் செல்ல முயன்றபோதெல்லாம் தடைபண்ணப்படுவதே பெரும்பாகமாயுள்ளது. அவர்கள் இடப்புறம் திரும்பி ஆசியா நாட்டிற்குப்போக ஆசைப்பட்டபொழுது பரிசுத்த ஆவியானவர் தடைபண்ணினார். பின்வரும் காலங்களில் அநேக பிரதேசத்தில் பவுல் தன்னுடைய பெரிய வேலைகளைச் செய்யப்போகிறார். ஆனால் அந்தச் சமயத்தில் பரிசுத்த ஆவியானவரால் தடைபண்ணப்பட்டார்கள். தகர்க்க முடியாத சாத்தானின் கோட்டையை எதிர்க்க இன்னும் எற்ற சமயம் வரவில்லை. வழியுண்டாக அப்பொல்லோ வேலை செய்தாக வேண்டும். பவுலும் பர்னபாவும் வேறோரு இடத்திற்கு அவசரமாய்ப்போக வேண்டியிருந்தது. அந்தப் பொறுப்பான வேலைiயை ஏற்றுக் கொள்ளுமுன் அவர்களுக்குக் கொஞ்சம் பயிற்சி தேவையாயிருந்தது.

சிநேகிதனே! உன் வழியைக் குறித்து உனக்குச் சந்தேகம் ஏற்படும்பொழுது, உன் நினைவுகளைக் கர்த்தரின் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்படைத்துவிட்டு, அவரை நோக்கிச் சரியான வழி தவிர மற்ற எல்லா வழிகளையும் அடைக்கும்படி வேண்டிக்கொள்.

பரிசுத்த ஆவியானவரே தேவனுடைய சித்தமில்லாத எந்தப் பாதையையும் எனக்கு முன் அடைத்துவிடும் பொறுப்பை உம்மேல் போட்டுவிடுகிறேன். நான் வலப்புறம் இடப்புறம் திரும்பும்போது, உமது சத்தத்தைக் கேட்க உதவி செய்யும் என்று ஜெபி.

இதற்கிடையில் இதுவரை நடந்துகொண்டிருந்த பாதையில் தொடர்ந்து நட. நீ மற்றொன்றையும் செய்யும்படி திட்டமாய் அழைக்கப்படும்வரை, உன் முந்தின அழைப்பின்படி செய்துகொண்டிரு. பரிசுத்த ஆவியானவர் பவுலை எவ்வாறு நடத்தினாரோ அவ்வாறு உன்னையும் நடத்தச் சித்தமாயிருக்கிறார். அவர் சிறிது தடை செய்தாலும் அதைக் கவனித்துக்கொள். நம்பிக்கையோடு ஜெபம் செய்த பிறகு, விரிவடைந்த இதயத்துடன் முன்னேறிச் செல்லலாம். ஜெபத்துக்கு விடையாகத் தடைகள் தோன்றினாலும் நீ கலங்காதே. வலப்புறமும், இடப்புறமும், வாசல் அடைக்கப்பட்டிருக்குமென்றால், துரோவாவுக்கு நீ செல்லவேண்டிய பாதை ஒன்று திறக்கும். அங்கே லூக்கா காத்திருக்கிறான். பெரிய ஊழியம் செய்யச் சமயமும், நம்பிக்கையான தோழரும் காத்திருக்கிற இடத்திற்குத் தரிசனம் உன்னை வழிநடத்தும்.

உனக்குப் புரியாததொன்று உன் வாழ்வில் உண்டானால்
நீ செல்ல வேண்டிய வழியை அறியாயானால்,
கர்த்தர் அறிவார். விளங்கச் செய்வார்.
அவரிடம் திறவுகோல் உண்டு.
திறந்திருக்கும் என்று எண்ணின பாதை,
பிதாவின் கரத்தால் அடைக்கப்பட்டிருந்தால்
கர்த்தரை நம்பிக் காத்திரு!
ஏனெனில் அவரிடம் திறவுகோல் உண்டு.
உன் ஜெபத்திற்குப் பதில் இல்லாவிட்டால்,
நீ நினைத்தபடி பதில் கிடைக்காவிட்டால்,
பின்னால் தம் நோக்கம் காணச் செய்வார்
பொறுமையுள்ள உன் கர்த்தருக்குக் காத்திரு!
யாவும் அறிந்த ஞானபிதா காரணமின்றித் தாமதியார்,
உன் வருங்காலமாகிய வாசலுக்கு
அவரிடமே திறவுகோல் உண்டு.
அறியாத ஆறுதலும் இனிமையான இளைப்பாறுதலும்
அவரிடம் திறவுகோல் உண்டு என்பதை அறிவதுதான்.
அவர் நமக்கு நல்லதென்று தோன்றும் வேளையில்
அதை நம்மிடம் தருவார்.