January

ஐனவரி 9

ஆனால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோ.8:18).

ஒரு பட்டுப் பூச்சியின் கூட்டை ஓர் ஆண்டுவரை வைத்திருந்தேன். அதன் அமைப்பு விநோதமாயிருந்தது. அந்தக் கூட்டின் முகப்பில் ஒரு சிறு பிளவு இருந்தது. அதன் வழியாய் அதன் உடல் சிரமத்தோடு வெளிவரும். அது வெளியேறிய பின் அந்தக் கூடு, புழு உள்ளே இருக்கும் கூடுபோன்று ஒரு சேதமுமின்றியிருக்கும். நூல் கிழிந்து சிக்கியிருக்காது. அதன் உள்ளிருந்து வரும் புழுவின் உடம்பையும், வெளியேறும் பிளவின் அளவையும் பார்த்தால் அதன் வழியாய் அந்த உடல் வருவது எவ்வளவு கடினம் என்பது தெளிவாகும். அது அதிக கஷ்டத்தோடுதான் வெளிவரும். இதன் காரணம் யாதென்றால் அதன் உடல் சுருங்கி அதிலுள்ள சத்து இறக்கைகளுக்கு அனுப்பப்பட்டு அவை பூரண வளர்ச்சியடைவது இயற்கையின் வழிவகை.

என்னிடமிருந்த பட்டுப்பூச்சி, கூட்டைவிட்டு வெளியேறும்போது நான் பார்த்தேன். ஒருநாள் முற்பகல் பூராவும் அடிக்கடி அதைக் கவனித்தேன். அது வெளியேற முனைந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. கொஞ்சந் தூரம் வெளிவந்து பின் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. நான் பொறுமையிழந்தேன். இயற்கையின்படி பனிக்காலம் பூராவும் புல்லில் இருந்தால் அதன் கூடு இவ்வளவு காய்ந்து இடை விலகாமலிருக்காது என்று எண்ணினேன். நான் சிருஷடிகரைவிட மிகுந்த இரக்கமும், ஞானமும் உள்ளவன் என்று எண்ணி அதற்கு உதவிபுரிய முற்பட்டேன். கத்திரிக்கோலால் இறுகியிருந்த நூல்கட்டை வெட்டி அதன் வழியை சற்று எளிதாக்கினேன். உடனே பட்டுப்பூச்சி வெகு சுலபமாய் வெளியே வந்தது. அதற்குப் பெருத்த உடம்பும், சுருங்கிய இறக்கைகளுமிருந்தன. அதன் உடலும் இறக்கைகளும் அழகிய நிறங்களும் இயற்கை வடிவம் அடைவதைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன். நிங்களும் கோடுகளும் சிறிதளவு இருந்தன. ஆனால் பூரண அழகு பொலிந்து விளங்கவில்லை. அழகாகப் பறந்து செல்லுமென்றே கூர்ந்து கவனித்தேன். ஆனால் அது தன் இயற்கை வனப்பைப் பெறவில்லை. என் பொய்யான இரக்கம் அதன் வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. அது அரைகுறை பிறவியாகவே இருந்தது. வானவில்போன்ற அழகான இறக்கைகள் பெற்று, சொற்ப ஆயுளை ஆனந்தமாய்க் கழிக்கவேண்டிய அந்தப் பூச்சி தன் ஜீவியம் பூராவும் வேதனையோடு வளர்ந்து திரிந்தது.

துக்கப்பட்டு வேதனையடைந்து, துயரத்தோடிருப்பவர்களைப் பார்த்து, அவர்கள் வேதனையை மாற்ற விரும்பும்போது அடிக்கடி இதை நான் நினைத்துக்கொள்வேன். குறுகிய அறிவுள்ள மானிடனாகிய நான், இந்த வேதனை, துயரம் எல்லாம் அவசியம் என்று எப்படி அறிவேன். பின்வரும் காரியங்களை அறிந்துள்ள பூரண அன்புள்ள சிருஷ்டிகர், சிருஷ்டிகளின் பூரண வளர்ச்சியை நாடுகிறவர், மாறிப்போகும் தற்காலிகமான வருத்தங்களைப் பார்த்து பலவீனமாகப் பின்வாங்கார். நம்முடைய பிதாவின் அன்பு அதிக உண்மையானது. ஆகையால் அதில் பலவீனம் இல்லை. அவர் தம் பிள்ளைகளை நேசிப்பதால் தம்முடைய பரிசுத்தத்திற்குப் பங்குள்ளவர்களாக அவர்களைச் சிட்சிக்கிறார். இந்த மகிமையான நோக்கத்தை முன் வைத்து அவர்கள் கூப்பிடும்போது இரங்காதிருக்கிறார். தேவனின் புத்திரத் துன்பங்களின் வழியாய் நம் மூத்த சகோதரன் இயேசுவைப்போல பூரண சற்குணராகி கீழ்ப்படிதலின் பயிற்சி அடைந்து அநேக பாடுகளின் வழியாய் மகிமைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்.