January

ஐனவரி 8

நான்….. ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன். ஆசீர்வாதமான மழைகள் பெய்யும் (எசேக்.34:26).

இன்று காலை உன் பருவநிலை என்ன? வறட்சியான காலமோ? அப்படியானால் மழை பெய்யவேண்டிய காலம் அதுவே. அதிக பாரமான கரியமேகங்கள் சூழ்ந்த காலமா? அவ்வாறாயின் அதுவே மழைக்காலம். உன் நாளுக்குத்தக்கதாக உன் பலனும் இருக்கும். நான் ஆசீர்வாதமான மழைகளைக் கொடுப்பேன். மழைகள் என்று பன்மையிலே கூறப்பட்டது சகலவிதமான ஆசீர்வாதங்களையும் தேவன் நமக்கு அருளுவார் என்பதைக் குறிக்கிறது. தேவனின் ஆசீர்வாதங்கள் யாவும் தங்க ஆபரணத்திலுள்ள சங்கிலிகள்போல் தொடர்ச்சியாயிருக்கும். மனந்திரும்பும் கிருபையோடே மன ஆறுதலடையும் கிருபையையும் அளிப்பார். ஆசீர்வாதமான மழைகளை அருளுவார். தண்ணீரற்ற வறண்ட செடியே, உன் பூக்களையும், இலைகளையும் மோட்சத்தின் தண்ணீருக்காகத் திறந்துவை.

உன் இருதயம் தாழ்ந்த பள்ளத்தாக்காகட்டும். வழிந்தோடும் வரை தேவன் அதை மழையால் நிரப்புவார்.

ஆண்டவரே நீரே என் முள்ளை மலராக்கக் கூடியவர். என் முள் மலராக வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். யோபு துன்பத்திற்குப் பின் இன்பம் அடைந்தான். மழைக்குப் பின் கதிரவன் ஒளி கண்டான். ஆனால் அவன் துன்பமெல்லாம் வீணாயிற்றா? இந்த மழைக்கும் ஒளிக்கும் என்ன தொடர்பு என்பதை அறியவே யோபு விரும்பினான். நானும் அதையே அறிய விரும்புகிறேன்.

நீர் அதைக் கூறக்கூடும் – உம்
சிலுவை அதைக் கூறக்கூடும் – உம்
துன்பத்திற்கு நீர் முடி சூட்டினீர்
கர்த்தாவே இது என் பொன் முடியாகட்டும்
மழையின் நடுவிலும் ஒளியைக் கண்டபின்னரே
நான் உம்மில் வெற்றி பெறுவேன்.

கனி நிறைந்த வாழ்க்கை கதிரவனொளியை மட்டுமன்று, மழையையும் தேடும்.

நிலம் முழுவதும், சூரிய வெப்பத்தினால் காயந்து கருகியிருக்கும்பொழுது, அதற்குப் புத்துயிரளிக்க மேகங்களே வேண்டும். பனித்துளி மரங்களையும் மலர்களையும், இலைகளையும் நனைக்கலாம். ஆனால் மேகங்கள் பொழியும் மழை நீரே நிலம் முழுவதையும் பசுமை பெறச் செய்யும்.

நமது வாழ்க்கையாகிய நிலமும் இதுபோலவே இருக்கிறது. பனித்துளி போன்ற சிறிய துன்பங்கள் வாழ்க்கையில் அதிக மாறுதல்களைச் செய்வதில்லை. சிறிய தூபத்தை நெருப்பிலிட்டால் அதன் நறுமணமும் சிறிது நேரம் காற்றில் கலந்திருந்து பின்பு மறைந்துவிடும். அதுபோலவே சிறிய துன்பங்களினால் வரும் பலனும் நாளடைவில் மறைந்துவிடும். ஆனால் பெருந்துன்பங்கள் தாங்கமுடியாத பாரங்களாகத் தோன்றினாலும் அவை நிலத்தைக் குளிர்விக்;கும் மழை போன்றவை. செழிப்பு மிகுந்த நிலமாக்குவதுபோல், நமது வாழ்வைச் சீர்திருத்தக் கூடியவை.

ஆகையால் நாம் துன்பமாகிய மேகங்களைக் காணும் பொழுது அவைகளை நமக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்கும் என அறியவேண்டும். பரிசுத்த பவுல் சொன்னபடி எல்லாம் நமக்கு நன்மையாகவே முடியும். நாம் அஞ்சவேண்டியதில்லை, அனால் நம்பவேண்டும்.