January

ஐனவரி 7

நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன் (பிலி.4:11)

பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் எவ்வித சௌகரியங்களும் அற்ற சிறையிலிருக்கும்போது மேற்கண்ட வார்த்தைகளை எழுதினார். ஒருநாள் அதிகாலையில் ஓர் அரசன் தன் தோட்டத்திற்குச் சென்றபோது அங்குள்ள யாவும் காய்ந்து வாடிப்போயிருந்ததாகக் கண்டான். அவன் வாயிலண்டை நின்ற ஒரு மரத்தை நோக்கி அதன் காரணத்தை வினவினான். அம்மரம்தான் பைன் மரத்தைப்போல உயரமாயும், அழகாயும் இல்லாததால் மனம் குன்றிச் சாகவேண்டுனெ;று தீர்மானித்ததாகச் சொல்லிற்று. பைன் மரம் தான் திராட்சைக் கொடியைப்போல் இனிய பழங்களைக் கொடுக்க முடியாததால் தன் உயிரை மாய்த்துக்கொள்ள ஆசையாயிருந்தது. சாமந்தி மல்லிகையைப்போல் தன்னிடம் வாசம் இல்லையே என்று கவலை கொண்டிருந்தது. இவ்வாறு தோட்டத்தின் செடிகளெல்லாம் அதிருப்தியால் நிலைகுலைந்தன. மகிழம் பூ மாத்திரம் சந்தோஷம் மிளிரும் வதனத்தோடு தோன்றிற்று. அரசன் அதைக் கண்டு, நல்லது மகிழம் பூவே, யாவும் மனச்சோர்வுடன் இருக்கையில் ஒரு சின்ன மலர்ந்த பூவைக் கண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீ மனம் கசந்துபோனதாக எனக்குத் தோன்றவில்லை என்றான். எனக்கு மனக்கசப்பு இல்லை. நான் ஒரு விசேஷித்த பூ அல்ல. ஆனால் நீர் விரும்பினால் என் இடத்தில் எனக்குப் பதிலாக ஒரு பைன், பீச் அல்லது ஓக்கு மரத்தை நட்டிருக்கலாம். நீரோ மகிழம் பூவை விரும்பியே என்னை உண்டாக்கினீர் என்று நினைத்தேன். ஆகையால் உமக்கு ஏற்ற அழகிய சிறு மகிழம் பூவாயிருக்கத் தீர்மானித்தேன் என்றது.

பிறர் பெரிய காரியங்களைச் செய்யலாம்
நீ செய்ய வேண்டிய பொறுப்புமுண்டு
தேவனுடைய வனத்திலே
நீ மட்டும் அதை நன்றாய்ச் செய்ய முடியும்.

முற்றிலுமாய்த் தங்களைக் கர்த்தருக்கு ஒப்படைத்தவர்கள் எந்த நிலைமையிலும் திருப்தியாயிருப்பார்கள். ஏனெனில் தேவனின் சித்தமே அவர்கள் சித்தம். அவர்கள் எதைச் செய்யவேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அதையே அவர்களும் செய்ய விரும்புகிறார்கள். எல்லாவற்றையும் தியாகம் செய்து, தாங்கள் இழந்த அனைத்தும் நூறுமடங்காகத் தங்களுக்குத் திரும்பவும் கிடைப்பதை உணர்கிறார்கள்.