January

ஐனவரி 1

நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம். அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம். வருடத்தின் துவக்க முதல் வருடத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:11-12).

பிரியமுள்ள சிநேகிதரே, இன்று நாம் அறியாத ஓர் ஆரம்பத்திற்கு வந்திருக்கிறோம். ஒரு புது வருடம் நமக்கு முன்பாக இருக்கிறது. அதை நாம் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறோம். அதில் நாம் என்ன காண்போம் என்று யார் சொல்லக்கூடும்? என்ன புது அனுபவங்கள், என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றனவோ? நமக்கு ஆறுதலளித்து மகிழ்ச்சியுண்டாக்கும் இச்செய்தி நமது பரம பிதாவிடமிருந்து வருகிறது. உன் தேவனாகிய கர்த்தர் அதை விசாரிக்கிறார். வருடத்தின் முடிவுமட்டும் கர்த்தரின் கண்கள் அதன்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

நமக்குத் தேவையான யாவும் பரத்திலிருந்து வரவேண்டும். இங்கே வற்றாத நீரூற்றுகளும், குறைவுபடாத ஊற்றுச்சுனைகளும், நீரோடைகளும் உள்ளன. கவலை கொண்டிருப்பவரே! இதோ, பரமபிதாவின் கிருபை நிறைந்த வாக்குத்தத்தம் இருக்கிறது. நாம் பெறுகிற கிருபைக்கு ஆதாரம் அவரேயாகையால் அத தவறாது. கர்த்தருடைய பட்டணத்தை மகிழ்ச்சியடையச்செய்யும் நீரோடை வெப்பத்தினாலோ மழையின்மையாலோ வற்றுவதில்லை. வெப்பமும் வறட்சியும் வற்றவைக்க முடியாது.

அந்தத் தேசம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த தேசம். அது முழுவதும் இலகுவான சமமான குன்று அன்று. வாழ்க்கை ஒரே சமபூமிபோன்று இருந்தால் நாம் சலித்துப்போவோம். நமக்கு மலைகளும், பள்ளத்தாக்குகளும் தேவை. மக்கள் பலன்தரத்தக்க அநேக பள்ளத்தாக்குகளுக்கு மழைத்தண்ணீரைச் சேகரிக்கின்றன. ஆம், அதுபோலவே நாமும் இருக்கிறோம். மலைபோன்ற கஷ்டங்களே நம்மைக் கிருபாசனத்தண்டைக்கு ஓடச்செய்து மழைபோன்ற ஆசீர்வாதங்களைக் கொண்டுவரச் செய்கின்றன. நாம் வாழ்க்கையில் எந்த மலைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவை வெறுமையானவை, பயனற்றவை என்று எண்ணுகிறோமோ அவைகளே மழையைக் கொண்டுவருகின்றன. மலைப்பாங்கான இடங்களில் வசித்து செழிப்பாய் வாழக்கூடிய எத்தனையோ மக்கள் வனாந்தரத்தில் வாழமுடியாமல் அழிந்து தங்கமயமான மணலால் மூடப்பட்டுப்போகின்றனர். கரடு முரடும், ஏறுவதற்குக் கடினமுமான மலைகள் இல்லாவிட்டால் எத்தனையோ மக்கள் கடும் பனியால் அழிக்கப்பட்டுப் பெருவாரிக் காற்றினால் நிலைகுலைந்து, மரங்களின் கனிகள் அற்றவர்களாய்ப் போயிருப்பார்கள். அதுபோல கர்த்தர் அனுப்பும் மலைகளான கஷ்டங்கள் நம்முடைய எதிரிக்கு முன்பாக நம்மைப் பாதுகாக்கும் அருள் மலைகளாகும்.

நமக்கு வரும் சோதனைகளும், கஷ்டங்களும் நமக்கு என்ன செய்கின்றன என்று சொல்லமுடியாது. நீ நம்பிக்கையோடே மாத்திரம் இரு. இன்று நம்முடைய அழியில் நம்முடைய கரத்தைப் பிடித்து வழிகாட்ட பிதா நம்மண்டையில் வருகிறார். இது நமக்கு நன்மையும் ஆசீர்வாதமுமான புதிய வருடமாயிருக்கும்.

நாம் அறியாத பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார். நம் நடை மெதுவானாலும் மேல் நோக்கி நடத்துகிறார். நாம் வழியில் களைத்துத் தங்குகிறோம். இருட்டும் புயலும் பாதையை மறைக்கின்றன. ஆனாலும் மேகம் நீங்கும்போது கர்த்தரின் நடத்துதலைக் காண்போம். கலக்கம் நிறைந்து இருக்கும் ஆண்டுகளிலும் நம்மை நடத்துகிறார். நம்முடைய நம்பிக்கை, பயம், சந்தேகம் ஆகியவற்றைத் தாண்டி, சேதம், கவலை நிறைந்த இருண்ட நாட்களிலும் நம்மை வழிநடத்துகிறார். அவர் சித்தம் நிறைவேறுகிறது என்று நாம் அறிவோம். அவர் தொடர்ந்து நம்மை நடத்துகிறார்.

Leave a Reply