January

ஐனவரி 13

இவை யாவற்றிலும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் (ரோ.8:37).

இதுவே வெற்றியைக் காட்டிலும் பெரிது. நாம் தோல்வியினின்றும், சேதத்தினின்றும் தப்பித்துக் கொண்டது மாத்திரமல்ல, நம் சத்துருக்களை அழித்து உச்சிதமான கொள்ளைப் பொருள்களைப் பெற்று, இந்தப் போராட்டம் வந்ததற்காகக் கர்த்தரைத் துதிக்கக்கூடியவர்களாயிருக்கிறோம். எப்படி நாம் வெற்றி வீரருக்கு மேலாவோம்? இந்தப் போராட்டத்தினால் ஆவிக்குரிய சிட்சை பெறுகிறோம். அது நமது விசுவாசத்தைப் பெலப்படுத்தி ஆவிக்குரிய நற்குணங்களை நிலைநாட்டுகிறது. நம்மை ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒருமுகப்படுத்தி நிலைநாட்டச் சோதனைகள் அவசியம். அவை மண்பாண்டங்களில் பூசப்பட்ட வர்ணங்களைத் திடமாக அமைக்கும் நெருப்பைப்போலவும், மலைமீதிலுள்ள கேதுரு மரங்களைப் பலமாய் வேரூன்றச் செய்யும் பெருங்காற்றைப் போலவுமிருக்கின்றன. ஆவிக்குரிய போராட்டம் நமக்கு மிக ஆசீர்வாதமானதாகும். நமது பெரிய சத்துருவே இறுதியில் நாம் அவனை மேற்கொள்ள நம்மைப் பயிற்றுவிக்கிறான்.

ஆதிகாலத்து பிரியர்களுக்குள் ஒரு மரபுவழிக்கதை இருந்தது. ஒரு வீரன் தன் சத்துரு ஒருவனை மேற்கொள்ளும்போதெல்லாம், மேற்கொள்ளப்பட்டவனின் சரீர பலத்தைப் பெற்று தன் பலத்தையும், தைரியத்தையும் அதிகப்படுத்திக்கொள்கிறான் என்று சொல்லப்பட்டது. ஜெயிக்கப்பட்ட சோதனையும் நம்முடைய ஆவிக்குரிய பலத்தையும், சத்துவத்தையும் இரட்டிப்பாக்குகிறது. நம்முடைய சத்துருவை மேற்கொள்வது மாத்திரமல்ல, அவனைச் சிறைப்பிடித்து நம் சார்பில் போரிடப்பண்ணவும் கூடும். ஏசாயா தீர்க்கதரிசி (ஏசா.11:14) இஸ்ரவேலர் பெலிஸ்தியரின் தோள்களின்மேல் ஏறிச்செல்வார்கள் என்று சொல்லுகிறான். பெலிஸ்தியர் இஸ்ரவேலருடைய கடும் பகைஞர். ஆனால் ஏசாயா இஸ்ரவேலர் பெலிஸ்தியரைத் தோற்கடிப்பது மாத்திரம் அல்ல, அவர்களை ஜெயமடைந்தோர் இன்னும் ஜெயமடையத் தங்கள் தோள்கள்மேல் தூக்கிச் செல்லவும் செய்வார்கள் என்றான். எப்படி புத்தியுள்ள ஒரு மாலுமி தனக்கு எதிரான காற்றைச் சாதகமாக்கிகொள்கிறானோ அதுபோல் நமக்கு ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜெயமளித்த கர்த்தரின் கிருபையால் நமக்கு பாதகமாக தோன்றுகிற காரியங்களையே சாதகமாக்கிக் கொள்ளலாம். எனக்கு விரோதமாக நடந்த காரியங்களெல்லாம் சுவிசேஷம் அதிகம் பரவ ஏதுவாயிற்று என்று சொல்லலாம்.

முன்காலத்தில் கப்பற் பிரயாணிகள் பவளத்தீவைக் கட்டும் சிறுபிராணிகள் தங்களுடைய பாதுகாப்புக்காக அதைக் கட்டுகின்றன என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது விஞ்ஞான சாஸ்திரி ஒருவர் அது அவ்வாறன்று, திறந்த சமுத்திரத்திலே அலைகளுக்கும், நுரைகளுக்குமிடையே வாழ்வதினாலேயே அப்பிராணிகள் தக்க வளர்ச்சியடைய முடியுமென்று கண்டுபிடித்திருக்கிறார். பாதுகாக்கப்பட்ட ஜீவியமே வளர்ச்சிக்கு ஏற்றது என மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அந்த வல்லமை நிறைந்த உன்னத ஜீவியம் செய்பவர்களின் வாழ்க்கையை நோக்கினால் துன்பங்களைச் சகிப்பதே அவர்கள் உன்னத ஜீவியம் செய்ய வழியாயிற்று என்று அறிகிறோம். அதுவே மனிதனுடைய சாதாரண ஜீவியத்தை வேறுபடுத்துகிறது. தன்பங்கள் நற்குணத்தை உண்டாக்கும்.
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2.கொரி.2:14).