February

பெப்ரவரி 01

என்னால் இந்தக் காரியம் நடந்தது (1.இராஜா.12:24).

வாழ்க்கையின் ஏமாற்றங்கள் உண்மையின் அன்பினால் அருளப்படுபவையே!

என் அன்பிற்குரிய பிள்ளையே! இன்று உனக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். இதை மெதுவாக உன் காதில் சொல்கிறேன். இச்செய்தி இருண்ட மேகங்களைப் பிரகாசிக்கச் செய்யவும், நீ நடக்க நேரிடும் கரடு முரடான பாதைகளைச் சமமாக்கவும் வல்லது. இது நான்கு வார்த்தைகள்கொண்ட சின்னச் செய்திதான். ஆனால் அதை உன் இருதயத்தின் ஆழத்தில் பொதிந்துவை. அதை நீ களைத்து இருங்குங்கால் உன் தலைக்குத் தலையணையாக உபயோகப்படுத்து. அச்செய்தி இதுவே. இந்தக் காரியம் என்னாலே நடந்தது.

உனக்குரிய காரியங்களெல்லாம் என்னுடையவை என்பதை நீ யோசித்திருக்கிறாயா? ஏனென்றால் உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் (சக.2:8). நீ என் பார்வைக்கு அருமையானவன் (ஏசா.43:4). ஆகையால் உன்னைப் படிப்பிப்பதே என் ஆனந்தம்.

சோதனைகள் உன்னைத் தாக்குகையில், சத்துரு வெள்ளத்தைப்போல் உன்மீது வருகையில், அந்தக் காரியம் என்னாலே நடந்தது. உன் பலவீனத்தில் என் பெலன் தேவை, உனக்காக நான் போரிடுவதால் நீ பத்திரமாயிருப்பாய் என்பதை நீ படிக்க விரும்புகிறேன்.

உன்னை அறிந்துகொள்ளாதவர்கள், உன் விருப்பத்தின்படி செய்யத்தேடாமல் உன்னை அற்பமாக எண்ணுகிறவர்களின் மத்தியில், நீ கடின நிலையிலிருக்கிறாயா? அந்தக் காரியம் என்னாலே நடந்தது. சமய சந்தர்ப்பங்களின் தெய்வம் நான். நீ தற்செயலாய் இவ்விடத்திற்கு வரவில்லை. இயேசு நீ இருக்க வேண்டுமென்று குறித்த இடம் இதுவே.

நீ தாழ்மையிலிருக்க வேண்டுமென்று நீயே கேட்கவில்லையா? அதே பாடம் கற்பிக்கும் பள்ளியில் நீ வைக்கப்படவில்லையா? என்று பார். உன் சுற்றுப்புறமும் உன் கூட்டாளிகளும் என் சித்தத்தின் கிரியைகளே. பணக்கஷ்டம் உனக்குண்டா? வரவுக்குள் செலவு செய்ய முடியவில்லையா? இக்காரியம் என்னாலே நடந்தது. ஏனென்றால் நானே பொக்கிஷதாரி. நீ என்மேல் சார்ந்து என்னிடமிருந்து பெற்றுக்கொள்வதே என் சித்தம். நான் கொடுப்பது நின்றுபோகாது. (பிலி.4:19). என் வாக்குத்தத்தங்கள் உண்மையா என்று சோதித்தறி (உபா.1:33). இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள் என்பது உன்னை; குறித்துச் சொல்லப்படாமல் இருக்கட்டும்.

துக்கமான இரவைக் கழிக்கிறாயா? இந்தக் காரியம் என்னாலே நடந்தது. நான் துக்கமுள்ள மனிதன், வியாகுலத்தை நான் அறிவேன். என்னிடம் திரும்பி நித்திய ஆறுதலபை; பெற்றுக்கொள்ளுவதற்காக உலக மனிதர் உனக்கு ஆறுதல் அளிக்கவராதபடி தடுத்தேன் (2..தெச.2:16-17). நீ எனக்காகப் பெரியதொரு காரியத்தைச் செய்ய எண்ணியிருக்கையில், அதற்குப் பதிலாக வேதனையிலும், பலவீனத்திலும், படுத்த படுக்கையிலும் இருக்கிறாயா? இந்தக் காரியம் என்னாலே நடந்தது. உன்னுடைய துரித வாழ்வில் நான் சொல்வதைக் கவனிக்க செய்யமுடியவில்லை. என்னுடைய நுட்பமான பாடங்களில் சிலவற்றை நீ கற்க வேண்டுமென விரும்புகிறேன். நின்று காத்திருப்பவர்களும் ஊழியம் செய்பவர்களே. வேறு ஊழியத்தில் ஈடுபடமுடியாத நிலையிலிருந்தும் ஜெபம் என்னும் கருவியைக் கையாள பழகியதினால் சிலர் எனக்குச் சிறந்த ஊழியர்கள் ஆகியிருக்கிறார்கள்.

இன்றையதினம் இந்தப் பரிசுத்த எண்ணெய்க் குப்பியை உன் கரத்தில் வைக்கிறேன். என் பிள்ளையே, நீ அதைத் தாராளமாய் உபயோகி. உனக்கு வேதனை கொடுக்கும் ஒவ்வொரு தடங்கலிலும், ஒவ்வொரு பலவீனத்திலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த எண்ணெயை நன்றாய் ஊற்று. எல்லாக் காரியங்களிலும் என்னைக் காண நீ கற்றுக்கொள்வதால் அவைகள் உனக்கு வேதனையை உண்டாக்கமாட்டா.

மீட்பர் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு
இது என்னாலே நடந்தது என்று கூறினார்.
உன்னை நேசிக்கும் ஒருவரே இவ்வாறு செய்துள்ளார்.
நீ என்னை நம்பிப் பொறுமையாயிரு.
இது உனக்கு அவசியம் என்பதை தந்தை அறிவார்.
உனக்கு ஒருவேளை அது தெரியாமல் இருக்கலாம்
ஆகையால் நீ இழந்த பொருளுக்கா வருந்தாமல்
நான் உனக்கு தருவதே சிந்தது என எண்ணியிரு.
நான் கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்து,
தேவனே என்னை மன்னியும் என மன்றாடினேன்.
இந்த வழிகளில் நீர் எனக்கு முன்னால் நடந்திருக்கிறீர்.
ஆகையால் இவை எனக்கு கடினமாக இரா.
இது எனக்கு தெரியவில்லையே. இது என் நன்மைக்கே.
ஒவ்வொரு சோதனையிலும்
அவர் கிருபை எனக்குப்போதும்.
ஆகையால் நான் எப்பொழுதும்
தேவன் என்னை நடத்திச் செல்கிற
வழிகளே சிறந்தவை என்று பாடுவேன்.