April

ஏப்ரல் 22

ஏப்ரல் 22

நான் போகும் வழியை அவர் அறிவார் (யோபு 23:10).

விசுவாசியே! இது எத்தனை மகிமையான நிச்சயம். நீ போகும் வழி கோணலாய், கஷ்டங்கள் நிறைந்ததாய் இருக்கலாம். அதை அவர் அறிவார். சோதனைகள், கண்ணீர் நிறைந்ததாயிருக்கலாம். சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டடிருக்கலாம். கர்த்தரே அதைச் சூடாக்கினார். நம்முடைய வழி மாராவின் தண்ணீரைப்போல் கசப்பாயிருந்தாலும், ஏலீம் போல சந்தோஷமும், உற்சாகமும் உள்ளதாயிருந்தாலும், அதை அறிந்து நமது காலடிகளை நடத்தும் சர்வ வழிகாட்டி ஒருவர் உண்டு.

எகிப்தியருக்கு இருட்டாயிருந்த அதே பாதையில் இஸ்ரவேலருக்கு மேகஸ்தம்பங்களும், அக்கினி   ஸ்தம்பங்களுமிருந்தன. சூளை சூடாயிருக்கிறது. இதைச் சூடுதாக்குகிற கரத்தை நம்புவது மாத்திரமல்ல. அந்த அக்கினி நம்மைச் சுட்டெரிப்பதற்காக அல்ல. நம்மைச் சுத்திகரிப்பதற்கே என்ற நிச்சயமும் நமக்குண்டா? புடமிட்டபின் அவர் தமது ஜனங்களைப் பொன்னாக வெளியே கொண்டு வருவார்.

அவர் அருகிலிருக்கிறார் என்று நம்பக்கூடாத வேளையில் அவர் அதிக சமீபத்திலிருக்கிறார். என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர் (சங்.14:2-3).

காலையில் நமது அறையில் நாம் காண்கிற சூரியினின் மிகச் சிறந்த ஒளியைவிட அதிக ஒளியுள்ள ஒருவரை அறிந்திருக்கிறோமா? அவரது கண்கள் நம் பாதையை அறிந்து அளவற்ற இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் நாள் முழுவதும் நம்மைப் பின் தொடர்ந்து வருகின்றன அல்லவா?

உலகத்தார் உங்களுக்கு கஷ்டமான காலம் வரும்போது கடினமனத்தோடே அது விதி, அது விதியின் விளைவு, விதியின் கொடுமை, என்றெல்லாம் சொல்லுகிறார்கள். விதி என்பது என்ன?

உயிருள்ளவரும், நடத்துகிறவருமாகிய தேவனை, ஏன் அவருக்குரிய நாட்டை ஆளாதபடி, சிம்மாசத்திலிருந்து தள்ளுகிறோம்? செயல்ப்படுகிற, ஒழுங்குபடுத்துகிற, இடைப்படுகிற யேகோவாவிற்குப் பதில், உயிரற்ற ஒன்றை ஏன் புகுத்த வேண்டும். யோபு தனக்கு உபத்திரவங்கள் உண்டாக உலக நம்பிக்கை யாவும் அற்றுப்போகக் கண்டதுபோல், நாமும் காணுவோமென்றால், நமது சோதனைகளிலிருந்து வேதனை எவ்வளவாய்க் குறையக்கூடும். யோபு சபேயர்களின் பட்டயத்திற்குப் பின்னும் – இடிக்குப் பின்னும் – வாரிக்கொண்டுபோன புயலுக்குப் பின்னும் கடவளின் கரத்தையே கண்டான். சிதறடிக்கப்பட்டுப்போன தனது குடும்ப அமைதியிலும் அதையே கண்டான்.

கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். அவருடைய நாமத்துக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான் (யோபு 1:21).

இவ்விதமாய்க் கடவுளைக் காண்பதே ஏற்ற காரியம். ஒருகால் இராஜா போல் விளங்கிய அவன் சாம்பலில் படுத்துக்கொண்டு, அவர் என்னைக் கொன்றாலும், அவரை நம்புவேன் என்று சொல்லக்கூடியவனாயிருந்தபொழுது அவன் விசுவாசம் உன்னத நிலையை அடைந்தது.