April

ஏப்ரல் 20

ஏப்ரல் 20

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சக.4:6).

நான் மலையின்மேல் செல்லும் செங்குத்தான ஒரு பாதை வழியே சென்று கொண்டிருந்தேன். மலை அடிவாரத்தில் துவிச்சக்கர வண்டியில் செல்லும் ஒரு சிறுவனைக் கண்டேன். எதிர்காற்று வீசியதால் பையன் வண்டியை ஓட்ட வெகு சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னாலானவரை முயன்று கொண்டிருந்தான். அவ்வழியே மேலே செல்லும் ஒரு பேருந்து வண்டி வந்தது. அந்த வண்டி அதிக வேகமாகச் செல்லாததால் பையன் அதற்குப் பின்னோடி  சென்று, பின்னாலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டான். பின்பு என்ன சம்பவித்திருக்குமென்று எண்ணுகிறீர்கள்? அவன் அம்மலை உச்சியை நோக்கி ஒரு பட்சியைப்போல பறந்து சென்றான். அப்போது என் உள்ளத்தில் மின்னல்போல் பளிச்சென்று சில எண்ணங்கள் உதித்தன.

நான் என் அயர்விலும், பெலவீனத்திலும் அப் பையனைப் போலிருக்கிறேன். அநேக தடைகளுக்கு எதிராக நான் அம்மலையுச்சிக்கும்போக பிரயத்தனம் செய்கிறேன். ஆகையால் அவ்வேளையில் களைத்துப்போயிருக்கிறேன். ஆனால் பக்கத்திலே நான் எடுத்து உபயோகிக்கக்கூடிய இயேசுவின் பலன் உண்டு. அவரோட நான் தொடர்புகொண்டு, விசுவாசச் சம்பந்தம் ஏற்படுத்திக் கொண்டால் கடினமாய்த் தோன்றும் ஆற்றலை என்னுடையதாக்கி, எனக்குக் கடினமாய்த் தோன்றும் ஊழியத்தை எளிதில் நிறைவேற்றக் கூடியவனாக்கும் என்பதே. இந்த எண்ணம் என் களைப்பை நீக்கி, உண்மையை உணரச்செய்தது.

முற்றும் ஒப்புக்கொடுத்தல்
நான் என்னைப் பரிசுத்த ஆவியானவருக்கே
முற்றிலும் கொடுத்துவிட்டேன்.
அவருடைய பூரணத்துவத்தைத் தேடுவேன்.
கரையை விட்டுவிட்டு அவருடைய ஆற்றலின்
ஆழத்திற்குள் செல்லுவேன்.
அவர் பாதுகாக்க வல்லவர்.
பரிசுத்த ஆவியானவருக்கே முற்றிலும்
ஒப்புவித்து விட்டேன்
நான் என்ற எண்ணம் அழியும்வரை தாழ்ந்து சென்றேன்
உடைந்து வெறுமையான பாத்திரம்போல்
அவர் பாதத்தண்டையிலிருந்தேன்
அவர் என்னை நிரப்பிப் பூரணமாக்கும்வரை
காத்திருந்தேன்.
தேவ சித்ததிற்கே என்னை
முழுவதுமாக ஒப்புக்கொடுத்தேன்.
என் அண்டவர் சென்ற வழியைவிட
வேறு வழியை தேடமாட்டேன்.
சுகம் களியாட்டங்களை விட்டு
அவரயே தெரிந்து கொண்டேன்.
அவரது குரலுக்கும் வழிநடத்துதலுக்கும் காத்திருப்பேன்.
முற்றும் ஒப்படைத்தேன், என்னுடைய சித்தம் இல்லை.
அவருடைய சித்தமே இம்மை மறுமையில் நிறைவேறட்டும்
என் திட்டங்கள் நோக்கங்கள் அவர் சித்தப்படியே
ஒன்றுமில்லாதவனாக இருந்தாலும்
அவர்மூலம் யாவும் உடையவனே.
முற்றும் ஒப்புக்கொடுத்தேன்.
இது எவ்வளவு இனிமையானது.
அவர் அன்பில் கண்டிருப்பது சுதந்தரமாக இருக்கிறது.
பாவம், சந்தேகம், பயம், கவலை துக்கம் இவைகள்
யாவற்றினின்றும் விடுதலையடைந்தேன்.
முற்றிலும் ஒப்புக்கொடுத்தேன்.
இளைப்பாறுதல் இனிமையானது
அவரது அசீர்வாதமான பாதத்தருகில் அமர்ந்து
தெய்வீக விருந்தாளியான பரிசுத்தாவிக்குக் காத்திருப்பேன்.
அவர் என் உள்ளத்தை முழுவதுமாகச் சுத்தமாக்குவார்.
இனிமையான பரிசுத்த ஆவியானவர்
வந்து என்னை நிரப்புகிறார்.
அவரில் நான் திருப்பதியடைந்து பூரணமடைகிறேன்.
நான் அவருக்கே என்னை முழுவதும் ஒப்புக்கொடுத்தால்,
என் இருதயத்திலிருக்கும் தெய்வீக ஒளி
ஒருபோதும் மங்காது.