April

ஏப்ரல் 19

ஏப்ரல் 19

நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் (யாத்.14:13).

ஒரு விசுவாசி அதிக நெருக்கடியான நிலைமையிலும் பெரும் கஷ்டத்திலிருக்கும்போதும், அவனுக்கு இந்த வார்த்தைகள் தேவனுடைய கட்டளையாயிருக்கின்றன. அவன் பின்வாங்க முடியாது. அவன் முன்னேறிச் செல்லவும் முடியாது. வலது இடது புறங்களிலும் அடைபட்டிருக்கிறான். அப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும்?

நீ நின்றுகொண்டிரு என்பதே எஜமானின் வார்த்தை. அப்படிப்பட்ட நேரங்களில் அவன் தன் எஜமானுடைய வார்த்தைக்கு மட்டும் செவிகொடுத்தால் அது அவனுக்கு நன்மை பயக்கும். ஏனென்றால் வேறு துர்ப்போதனைக்காரார் தங்கள் யோசனைகளைச் சொல்ல வருவார்கள். நம்பிக்கையின்மை உன் செவியில் நீ கீழே விழுந்து மடிந்துபோ, உன் விசுவாசத்தை முற்றிலும் விட்டுவிடு என்று இரகசியமாய்ச் சொல்லும். ஆனால் தேவன் நாம் தைரியத்துடன் உற்சாகமாயிருக்கவேண்டுமென்றும் மிகக் கடினமான சூழ்நிலையிலும், அவருடைய உண்மையிலும், அன்பிலும், களிகூரவேண்டுமென்று விரும்பகிறார். கோழைத்தனம், பின்வாங்கு, உலக மக்களின் வழிக்கே திரும்பிப்போ, நீ கிறிஸ்தவ னாயிருக்க முடியாது. அது மிகக் கஷ்டம், உன் கொள்கைகளை விட்டுவிடு என்று கூறும்.

ஆனால் சாத்தான் தன் வழியைப் பின்பற்றும்படி எவ்வளவாய்த் தூண்டினாலும், நீ தேவனுடைய பிள்ளையானாலும் அதைப் பின்பற்ற உன்னால் முடியாது. நீ நாள்தோறும் பலமடைந்து வரவேண்டும். மரணமானாலும், பாதாளமானாலும் உன்னை உன் வழியைவிட்டு விலகிச் செய்ய முடியாது. கொஞ்சநேரம் நின்றுகொண்டிரு என்று கட்டளை பிறந்தால் என்ன? அதுவும் குறித்த காலத்தில் முன்னேறிச் செல்ல உன் பலனை அதிகப்படுத்தும்.

அவசரம் நீ ஏதாவது செய். உன்னைச் சுறுசுறுப்பாக்கிக் கொள். நின்று கொண்டிருப்பது வீணாய்க் காலம் கழிப்பதாகும் என்று சொல்லுகிறது. எல்லாம் செய்ய வல்லவர் ஆண்டவர். அவரை நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, இப்பொழுதே நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறோம்.

உத்தேசம் சமுத்திரம் உன் முன்னால் இருந்தால், நீ அதனுள் நடந்து சென்று அற்புதம் நடக்கும் என்று எதிர்பார் என்று சொல்லுகிறது. ஆனால் விசுவாசம் பெருமைக்கும் நம்பிக்கையிழத்தலுக்கும், கோழைத்தனத்திற்கும், அவசரத்திற்கும் செவி சாய்ப்பதில்லை. ஆனால் அது தேவன் நின்று கொண்டிரு என்பதைக் கேட்டு அசையாமல் நிற்கிறது.

நின்று கொண்டிரு. நீதியுள்ள மனிதன் நிலையில் எல்லாச் செய்கைகளுக்கும் ஆயத்தமாயிரு. அடுத்துவரும் கட்டளைகளை எதிர்பார்த்திரு. உன்னை வழிநடத்தும் குரலைக் கேட்கப் பொறுமையோடும், சந்தோஷத்தோடும் காத்திரு. மோசே மூலம் இஸ்ரவேலுக்குச் சொன்னதுபோல், அவ்வளவு தெளிவாகக் கொஞ்சக் காலத்திற்குள் முன்னேறிச்செல் என்று தேவன் உனக்குச் சொல்லுவார்.

உன் சிக்கலான வழியைக் குறித்து அமைதியாயிரு
ஏன் ஆத்திரம், அவசரம் கொள்ளுகிறாய்?
தேவன் சகலமும் அறிவார் அவர் வேகம் கொடுக்கிறார்
அவரே தாமதிக்கச் செய்கிறார்
காண்பதல்ல, விசுவாசத்தின்படி நடப்பதே
உனக்கு நன்மையாகும்.
இன்னும் கொஞ்சகாலம் நம்பியிரு
அவருடைய புன்னகையாம் ஒளியில்
சீக்கிரமாக அவர் செய்கையை சரிவர அறிவார்.

சந்தேகம் நிறைந்த காலங்களில் காத்திரு. சந்தேகம் உண்டானால் அப்போதும் காத்திரு. செயல்ப்பட உன்னையே கட்டாயப்படுத்திக்கொள்ளாதே. உன் ஆவியில் உனக்குத் தடை உண்டானால் அது விலகும்வரை காத்திரு. அதற்கு மாறாகச் செல்லாதே.