April

ஏப்ரல் 14

ஏப்ரல் 14

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்களின்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (1.தெச.4:16-17)

அதிகாலையில் இருட்டாயிருக்கையில் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். திறந்து இருந்த அவர் கல்லறையை, சூரியனல்ல, விடிவெள்ளியே கண்டது. இருள் இன்னும் நீங்கவில்லை, எருசலேம் நகர்வாசிகள் எழவில்லை. அவர் எழுந்த வேளை இன்னும் தூக்கமும் இருளும் நிறைந்ததாகவேயிருந்தது. அவரின் உயிர்த்தெழுதல் அந்நகரின் உறக்கத்தைப் போக்கவில்லை. அதுபோல கிறிஸ்துவின் சரீரமாகிய சபை உயிர்த்தெழும்போது அதிகாலை இருட்டோடே நடக்கும். அப்பொழுது விடிவெள்ளி மாத்திரமே பிரகாசிக்கும். இயேசுவைப்போல் அவரின் பக்தர்களும், இருளின் பிள்ளைகள் இன்னும் சாவுக்குரிய நித்திரை தரித்திருக்கையில் விழித்துக்கொள்வார்கள். அவர்கள் எழும்புகையில், ஒருவருக்கும் தொந்தரவு கொடார்கள். அவர்களை அழைக்கும் சப்தத்தை இவ்வுலகத்தார் கேளார்கள். பிள்ளைகள் தாயின் கரத்தில் தூங்கி விழிப்பதுபோல், அவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் கல்லறைகளில் ஓய்ந்திருந்கச் செய்த பிரகாரமே அவர் வரும்போது அமைதலாய் ஆதரவாய் அவர்களை எழுப்புவார். மண்ணில் தங்கியிருக்கிறவர்களே, விழித்து கெம்பீரியுங்கள் (ஏசா.26:19) என்ற உயிர்ப்பிக்கும் வார்த்தைகள் அவர்களுக்கே உண்டாகும். மகிமையின் கிரணங்கள் அவர்களுடைய கல்லறையினுள் வீசும், கிழக்கு வெளுத்து சூரியன் கிழக்கில் உதிக்கையில் அவர்கள் காலை ஒளியைப் பருகுவார்கள். புலரொளியின் திவ்ய மணமும், சாந்தியை உண்டுபண்ணும் அமைதியும், மனதை உற்சாகப்படுத்தும் புத்துணர்ச்சியும், அதன் இனிமையான தனிமையும், அமைதலும், பரிசுத்தமுமான சகல பாக்கியங்களும் அவர்களுடையவை.

அவர்கள் கடந்துவந்த, இருள் நிறைந்த இரவிற்கும், இந்தத் திவ்ய காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைச் சிந்தித்துப் பாருங்கள். இவர்களிருக்கும் இடத்திற்கும் அவர்கள் விட்டு எழுந்த கல்லறைக்கும் உள்ள வித்தியாசம்தான் என்னே! அவர்களை மூடியிருக்கும் புல்லை விலக்கி, சாவுக்கினமானதை உதறித் தள்ளிவிட்டு, மகிமையான சரீரத்தோடும், ஆகாயத்தில் தங்கள் ஆண்டவரைச் சந்திக்க எழும்புகையில், பெத்லகேமின் நட்சத்திரம் போன்ற விடிவெள்ளியின் கதிர்கள், அவர்கள் பாதைக்கு வழியாக அவர்களுக்கு வழிகாட்டிச் செல்கிறது. சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (சங்.30:5).

வானத்திலிருந்து இறங்கின சேனைகள்
மகிமையடைந்து பக்தர்களோடும், தூதர்களோடும்,
ஓசன்னா பாடுகையில்
மகிமையின் பிரகாசம் போல் கிருபை
அவர்கள் சிரத்தைச் சூழ
இயேசு தமக்குச் சொந்தமானவர்களை ஏற்றுக்கொள்வார்.
ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்.

ஒரு போர்வீரன், நான் மரிக்கும்போது என் கல்லறையருகில் சாவுக்கொட்டு கொட்டாமல் அதிகாலை எழுந்திருக்க ஒலிக்கும் எக்காள தொனி முழங்கவேண்டும் என்றான்.