April

ஏப்ரல் 13

ஏப்ரல் 13

அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது. அவர் நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார் (எசேக்.3:22).

கிறிஸ்துவுக்கென உபயோகிக்கப்பட்டவர்களில் யாராகிலும் விசேஷித்த தரித்திருத்தலின் காலம் இல்லாமலும், தங்களது திட்டங்கள் யாவும் முற்றிலும் மாற்றப்படாமலும் இருந்ததுண்டென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இரட்சிக்கப்பட்டேன் என்ற நற்செய்தியால் பரிசுத்தப் பவுலின் உள்ளம் பொங்கிக் கொண்டிருந்த காலத்தில், அரேபிய வனாந்தரங்களுக்கு அவர் அனுப்பப்பட்ட அந்த நாளிலிருந்து இந்நாள்வரைக்கும் அது அவ்வாறே நடந்து வந்திருக்கிறது.

கிறிஸ்துவை நம்புவதைக் குறித்து சீரியாவிலே சாட்சி கூற நீ காத்துக் கொண்டிருக்கிறாய். இப்பொழுது அவர் சீரியாவிற்குப் போவதற்கு முன்னாலேயே என்னை நம்புவது என்றால் என்ன என்பதை நீ காட்டவேண்டும். இதையே நான் விரும்புகிறேன் என்று சொல்லுகிறார்.

எனக்கு எற்பட்ட கஷ்டம் அதைவிடக் குறைவானதே. ஆனால் கருத்தில் இதுபோன்றதே. எழுத்து வேலையை ஆவலுடன் செய்ய கதவு திறவுண்டிருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில், அதற்கு எதிர்ப்பு வந்தது. வைத்தியர் வந்து, ஒருபோதும் எழுதக்கூடாது. எழுதுவதா அல்லது ஜீவனோடிருப்பதா? இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீ இரண்டும் செய்யமுடியாது என்றார்.

இது 1860ம் ஆண்டில் நடந்தது. பின்பு நான் 1869ல் அவ்வாறு ஏற்பட்ட அடைப்பிலிருந்து, சேவை செய்யும் கீதம் என்ற நூலோடு வெளி வந்தேன். மறைவில் ஒன்பது வருடம் காத்திருந்ததின் ஞானத்தை அறிந்தேன். தேவனின் அன்பு மாறாதாகையால், அவருடைய அன்பை நாம் காணாமலும், உணராமலும், இருக்கும்போது அது ஒரே சீராக இருக்கிறது. அதுவுமன்றி அவருடைய அன்பும், ஆளுகையும், சமமாகவும், சர்வலோகமும், வியாபித்திருக்கிறவைகளாகவும் இருக்கின்றன. அவர் சந்தோஷத்தையும், நாம் அறியக்கூடியதாயிருக்கும் வெற்றியையையும் வரவிடாதிருக்கிறார். ஏனென்றால் அவர் நம்மில் தமது வேலை பூரணப்படவும், முன்னேறவும் செய்வது யாது என்று நன்கறிவார் என்று பிரான்சிஸ் ரிட்லி கவர்கல் சொல்லுகிறார்.

என் வேலையை அமைதியாய்
கீழ்வைத்து – எனக்கு
அனுப்பப்பட்ட ஓய்வு
வேளையை நான் எடுத்துக்கொண்டேன்,
எஜமானின் சப்தம் என்னைக் கூப்பிட்டு,
தனியே இளைப்பாறச் சொல்லிற்று.
இயேசுவோடு நான் தனித்திருப்பேன் என்று
என் ஆத்துமா எதிரொலி கொடுத்தது.

ஓய்வையும், அமைதியையும்,
அவர் கரத்திலிருந்து பெற்று,
தற்போதைய நோயை அவரே,
திட்டமிட்டார் என்றுணர்ந்தேன்.
அவர் ஓய்ந்திரு என்று சொல்லுகையில்,
நாம் வேலையை நாடுகிறோம்.
நம் வழி கோணலும், மந்தமுமாயுள்ளது
அவர் காட்டும் பாதையே சிறந்தது.

அவா கொடுத்த வேலையை
அவரே முடித்துத் தருவார்
களைப்புற்ற பாதங்களுக்கு – வேறு
பணி வைத்திருப்பார்,
களைப்புற்ற கரங்களுக்கு – வேறு
கடமைகள் வைத்திருப்பார்
தற்போது நாம் அவர்
கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
அமர்ந்து படுத்திருப்பதில் – ஒரு
பாக்கியமான ஓய்வு உண்டு.
அவர் மனப்படி நம்மை ஒப்புக்கொடுப்போம்
அவர் வேலை முடியுமட்டும்
அவரே மேலான வேலையாள்,
இதை நீ மறவாதே.

வேலை செய்வது மாத்திரமல்ல
நாம் பயிற்சி பெறவும் வேண்டும்.
பாடுகளினாலே இயேசுவும்,
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
நமக்கு அவர் நுகம் எளிதாயும்
அவர் சுமை இலகுவாயிமிருக்கும்.
அவர் சிட்சை வெகு அவசியம்
எல்லாம் சரிவர உண்டு.

நம் உதவி பணியாளர்களே,
அவர்கள் பயன்படுத்தும்
ஆயுதம் இவை, இவை என்று,
அவர்களே தெரிந்தெடுப்பதில்லையே
வேலையிலும், காத்திருப்பதிலும்
எஜமானின் சித்தத்தையே,
நிறைவேற்றுவோமாக,
நம் சித்தத்தையல்ல.

கர்த்தர் வேலைசெய்யும் இடங்களைக் கொடுப்பதுபோல ஓய்வெடுக்கும் இடங்களையும் கொடுக்கிறார். ஆகையால் களைப்போடிருக்கும் உன்னைப் பாதையருகிலுள்ள ஒரு நீரூற்றண்டை கொண்டு வரும்போது நீ ஒய்வெடுத்துக் கொண்டு நன்றியாயிரு.