April

ஏப்ரல் 12

ஏப்ரல் 12

இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார் (லூக்.4:1).

இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார் என்றாலும், அவர் சோதிக்கப்பட்டார். ஒரு மனிதன் தேவனன்டை நெருங்கி இருக்கையில்தான் சோதனை தன் முழு பலத்துடன் அவனைத் தாக்குகிறது. சாத்தான் வெகு பெரிய செயல்களைச் சாதிக்கும் எண்ணம் கொண்டவன் என்று கூறியுள்ளார் ஒருவர். அவன் இயேசுவின் சீடர்களில் ஒருவனைக் கிறிஸ்துவை நான் அறியேன் என்று சொல்லக்கூடச் செய்தான்.

மார்ட்டின் லூத்தர் போன்று சாத்தானோடு அவ்வளவு போராடியவர்கள் ஒரு சிலரே. அது ஏன்? எனென்றால் மார்ட்டின் லூத்தர் சாத்தானின் இராச்சியத்தையே அசைக்கப்போகிறவராக இருந்தார். ஜான் பனியனுக்குத்தான் எத்தனை போராட்டங்கள் இருந்தன!

ஒரு மனிதன் தேவனுடைய ஆவியைப் பெற்றிருந்தால், அவனுக்கு சோதனைக்காரனோடு அதிக போராட்டம் இருக்கும். புயல், மரத்திற்கு எவ்வாறு உதவுகிறதோ, அவ்வாறு சோதனைகள் நமக்கு உதவி, நம்மை வேரூன்றச் செய்கின்றன. ஆகையால் தேவன் சோதனைகளை வரவிடுகிறார். சீன மண் பாத்திரங்கள்மேல் வண்ணம் போகாமலிருக்கச் செய்யவது நெருப்பே. அதுபோல சோதனைகள் நம்மைக் கிறிஸ்துவில் வேரூன்றச் செய்கின்றன.

சாத்தான் உன்னை இயேசுவைவிட்டு விலகத் தன் முழுச்சக்தியையும் உபயோகிக்கும்போதுதான் உனக்கு இயேசுவின் மேல் பற்று உண்டென்றும், அவர் உன்னை இறுகப் பிடித்துள்ளார் என்றும் நீ அறிவாய். அப்பொழுது நீ கிறிஸ்துவின் வலக்கரம் உன்னைப் பிடித்திருப்பதை உணருவாய்.

அசாதரணமான துன்பங்கள், அசாதரணமான பாவங்களுக்குத் தண்டனையாக எப்போதும் இருப்பதில்லை. அவைகள் சில வேளைகளில் அசாரணமான வரங்களுக்குச் சோதனையாகும். தேவன் தமது ஆபரணங்களைத் துலக்கமாக்கிட கூர்மையான வெட்டும் ஆயுதங்களையும், முரட்டு அரங்களையும் உபயோகிக்கிறார். அவர் யாரை அதிகமாய் நேசிக்கிறாரோ, அவர்களை வெகு பிரகாசமாக்க அவர்கள்மேல் தமது ஆயுதங்களை அடிக்கடி உபயோகித்திருக்கிறார்.

கர்த்தருடைய தொழிற்சாலையிலுள்ள வேறெந்த அயுதங்களையும்விட நெருப்பும், அரமும், சம்மட்டியுமே எனக்கு வெகு பயனுள்ளதாயிருந்தன என்று நான் மனதார சாட்சி பகருவேன். பிரம்பின் உதவியின்றி நான் ஏதாவது கற்றுக்கொண்டதுண்டா என்று நான் சிற்சில வேளைகளில் கேட்டுக்கொள்வேன். என் பள்ளிக்கூட அறை, இருளடைந்திருக்கும்போதுதான் நான் நன்கு பார்க்கமுடிகிறது.