April

ஏப்ரல் 10

ஏப்ரல் 10

நீர் என்னிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர்கள். அதை எனக்குத் தெரியப்படுத்தும் (யோபு 10:2).

களைப்படைந்த ஆத்துமாவே, கர்த்தர் உன் நற்குணங்களை வளரச் செய்வதற்கு ஒருவேளை இதைச் செய்யலாம். சோதனைகளாலன்றி நம்மிலுள்ள சில நற்குணங்கள் ஒருபோதும் வெளி வந்திரா, உன் விசுவாசம் வெயில் காலத்திலிருந்ததைவிட, கடும் குளிர்காலத்தில் அதிகமாய் ஒளிவிடும் என்று நீ அறியாயோ. அன்பு சுற்றிலும் இருள் சூழ்ந்தாலன்றி ஒளிவிடாத மின்மினிப் பூச்சிபோல் இருக்கிறது. நம்பிக்கை என்பது வாழ்வாகிய சூரியஒளியில் காணப்படாமல், தாழ்வென்னும் இரவிலே காணப்படும் நட்சத்திரம்போலிருக்கிறது. துன்பம் என்பது தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய ஆபரணங்களைத் தெளிவாயிலங்கத் தக்கதாய் பதிக்கும் கறுப்புத்துணிபோலிருக்கிறது.

சற்று நேரத்திற்கு முன்பு, நீ முழங்காலில் நின்று, தேவனே எனக்கு விசுவாசமில்லை என்று நான் நினைக்கிறேன். எனக்கு விசுவாசம் உண்டு என்று நான் அறியச் செய்யும் என்று சொல்லிக்கொண்டிருந்தாய்.

நீ அறியாவிடினினும், இது உண்மையில் சோதனைக்காக நீ ஜெபிப்பதுபோல் இல்லையா? நீ உன் விசுவாசத்தைப் பயன்படுத்தினாலன்றி, உனக்கு விசுவாசம் உண்டென்று நீ எவ்வாறு அறிவாய்? இந்தக் காரியத்தை நீ நிச்சயமாய் நம்பு. நம் அழகிய குணங்கள் வெளிப்படவும், அவைகள் நம்மிலிருப்பதாய் நாம் உணரவும், கர்த்தர் நமக்குச் சோதனையை அனுப்புகிறார். இது வெறும் வெளிப்படுத்தல் அல்ல. பரிசுத்தமாக்கப்பட்ட சோதனைகளின் பிரதிபலன், கிருபையின் வளருதலே.

கர்த்தர் தமது போர்வீரரை சௌகரியமான, சௌபாக்கியங்கள் உள்ள கூடாரங்களில் பயிற்சிகொடுக்கமாட்டார், ஆனால் அவர்களை வெளியே கொண்டு போய், கட்டாய நடைக்கும் கடின உழைப்பிற்கும் உள்ளாக்குகிறார். அவர்களை ஓடைகளை கால்நடையாய்க் கடக்கவும், ஆறுகளின் வழியாய் நீந்தச் செல்லவும், மலைகளில் ஏறவும், தங்கள் முதுகின்மேல் பாரமான சுமைகளோடு அநேக மைல் தூரம் நடக்கவும் செய்கிறார். நல்லது, கிறிஸ்தவனே! இது நீ அடையும் வருத்தங்களுக்குப் போதிய ஈடு செய்யவில்லையா? அவர் உன்னோடு வழக்காடுவதற்கு இது ஒரு காரணம் அல்லவா?

சாத்தானால் சேதமுறாமல் விட்டுவிடப்படுவது ஆசீர்வாதத்திற்கு அடையாளம் அல்ல.