April

ஏப்ரல் 7

ஏப்ரல் 7

சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் (ஏசா.30:7).

தேவனை உண்மையாய் அறிவதற்கு அகத்தில் அமர்ந்து இருப்பது அத்தியாவசியமாம். இதை நான் முதன் முதல் கற்றுக்கொண்டது எனக்கு ஞாபகமிருக்கிறது. என் ஜீவியத்தில் ஒரு சமயம் அதி அவசர நிலைமை ஒன்று ஏற்பட்டது. உடனே செயல்பட வேண்டுமென்று என் உடலும் உள்ளமும் துடித்தன. ஆனால் அச்சயம் நான் ஒன்றும் செய்யக்கூடாத சூழ்நிலையில் இருந்தேன். உதவி செய்யக்கூடிய ஆளும் அசைவதாய்க் காணோம்.

என் உள்ளத்தில் பொங்கி எழுந்த புயலால், நான் சின்னா பின்னமாக ஆகிவிடுவேன்போல் தோன்றிற்று. அப்பொழுது என் ஆத்துமத்தின் ஆழத்திலிருந்து நீ அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்துகொள் என்று ஒரு மெல்லிய சத்தம் கேட்டது. அவ்வார்த்தைகள் வல்லமையுடையவனாக இருந்தன. நான் அவற்றிற்குச் செவி கொடுத்தேன். என் உடலின் துடிப்பை முற்றிலும் அமர்த்திக் கலங்கி நின்ற என் ஆவியை அடக்கி மேல் நோக்கிக் காத்திருந்தேன். அப்போது நான் அவரே தேவன் என்று அறிந்தேன். என் அவசரத்திலும், ஆத்திரத்திலும், செயலற்ற நிலைமையிலும், அவரே தேவன் என்று அறிந்தேன். நான் இந்த அனுபவத்தை உலக முழுவதும் தந்தாலும் இழக்கச் சம்மதியேன். அதுவுமன்றி எனக்கு எதிர்பாராத சூழ்நிலைக்கும் பலம் உண்டாயிற்று. அதனால் அமர்ந்திருப்பதே பலம் என்று நன்றாய் கற்றுக் கொண்டேன்.

சோம்பலல்லாத அமர்ந்திருத்தலும் உண்டு. அது நம்பிக்கையில் பிறந்த ஜீவனுள்ள காத்திருத்தலாகும். வெளிக்கு அமைதியாயிருந்தும் உள்ளே கலங்கிச் சந்தேகப்படுவது நம்பிக்கை அல்ல. அது அடக்கி வைக்கப்பட்ட ஆத்திரமே.

பெரும் புயலின் இரைச்சலிலுமல்ல,
பூமியதிர்ச்சியிலும் எரிகிற நெருப்பிலுமல்ல
எல்லாப் பயத்தையும் மாற்றும் அமைதியிலேயே
மெதுவான சிறிய சப்தம் தீர்க்கதரிசிகளுக்கு கேட்டது.

உன்னைச் சுற்றிலும் தேவைகளும் கவலைகளும்
கடல்போல் பெருகி நின்றாலும் என் ஆத்துமாவே,
நீ கர்த்தரது பர்வதத்தின் மேல் அமர்ந்திரு.
உனது விருப்பங்களையும் வேண்டுதல்களையும்
விட்டுவிட்டு அமைதியாயிருந்து,
தேவன் உனக்கு என்ன சொல்கிறார் என்பதை கவனி.

எல்லாவித கலக்கத்துக்குரிய நிகழ்ச்சிகளிலும்
இடையில் ஓய்வு நேரமும் உண்டு.
அவ்வேளையிலேயே புதிய ஆற்றல் உண்டாகிறது.
ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் இன்பமயமான
துதி கீதமும் சிறிது நேரம் அமர்ந்திருக்கும்.
ஆத்துமாவே, அமைதியிலேயே தங்கியிரு.
சற்று பேச்சு ஜெபம், துதி இவற்றை விட்டுவிடு
முழுவதுமாக அவர் அதிகாரத்தின் கீழ் அமர்ந்திருந்து
அவரது சொற்களுக்கும் புன்னகைக்கும்
பொருள் அறிந்துகொள்.

போட்டியில் வெற்றி பெறுவதற்காகச்
சிலம்பம் வீசும் பந்தயக்காரனைப்போல்
உன் சித்தத்தின் வன்மையால்
பரலோகத்தைக் கைப்பற்றிக்கொள்ளலாம்
என எண்ணாதே.

உன் பரமபிதாவின் அருகில்
பிள்ளைபோல உட்கார்ந்து அவர்,
அமர்ந்திரு என்று சொல்வதைக் கேட்டு
அதனால் உனக்கு வரும் இன்பத்தை அறிந்துகொள்.