April

ஏப்ரல் 2

ஏப்ரல் 2

அவர்கள்…. திரும்பிப் பார்த்தார்கள்…. அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்தில் காணப்பட்டது (யாத்.6:10).

மேகத்தில் காணப்படும் வெள்ளிபோன்ற பிரகாசமான ஒரத்தைப் பார்க்கும் வழக்கத்தை உண்டுபண்ணிக்கொள். நடுவிலிருக்கும் கார்மேகத்தைவிட அந்த ஒளியையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிரு!

எவ்வளவாக நெருக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் மனம் தளர்ந்துபோக இடம் கொடாதே. மனம் தளர்ந்தவன் செயலற்றுப் போவான். சத்துருவின் அம்புகளை எதிர்க்க அவனாலாகாது. இந்த நிலைமையில் மற்றவர்களுக்காக ஜெபிக்கவும் முடியாது.

இந்தச் சத்துரு உன்னை நெருங்குவதாகக் காணும் ஒவ்வொரு அடையாளம் தோன்றும்போது விரியன்பாம்பைக் கண்டு விலகி ஓடுவதுபோல் ஓடு. முற்றிலும் தோல்வியுற்று மண்ணைக் கவ்வ நீ விரும்பினாலன்றி அதற்கு முகம் கொடாமலிருக்கத் தாமதியாதே.

கர்த்தரின் ஒவ்வொரு வாக்குத்தத்தையும் குறித்து, இந்த வாக்கு எனக்கே சொந்தம் என்று சத்தமாய்ச் சொல். பின்னும் உனக்குச் சந்தேகமும் மனத்தளர்ச்சியும் உண்டானால் தேவனுக்கு முன்பாக உன் இருயத்தை ஊற்றி, உன்னை அத்தனையாய் இரக்கமின்றி உபாதிக்கும் எதிரியை அதட்டும்படி அவரை வேண்டிக்கொள்.

அவநம்பிக்கை, மனத்தளர்ச்சி என்பவற்றின் அறிகுறிகளிலிருந்து மனமார நீ முகத்தைத் திருப்பிக்கொண்ட அந்த நிமிடமே, பரிசுத்த ஆவியானவர் உன் விசுவாசத்தை உயிர்ப்பித்து, தெய்வீக சத்துவத்தை உனக்கு அளிப்பார்.

முதலில் நீ அதை உணராதிருக்கலாம். பின்னும் நீ உன்னைச் சூழ்ந்துவரும் சந்தேகம், மனத்தாங்கல் இவைகளைத் தீர்மானமாய்விட்டு விலகினால் இருள் உன்னைவிட்டுப் பின்வாங்குவதை உணர்வாய்.

நாம் ஒவ்வொரு முறையும் இருட்டின் சேனைகளுக்கு முகம் கொடாமல், தேவன் பக்கம் திரும்பி, பின் நிற்கும் திடமான சத்துவத்தைக் காணக்கூடுமானால், தந்திரமான சத்துருவாகிய மனக்கலக்கம், மனச்சோர்வு, மனத்தளர்ச்சி இவைகளைக் குறித்துச் சிறிதளவும் கவனிக்கமாட்டோம்.

இயேசு கிறிஸ்துவின் பேரால் அவர்மேல் வைத்த நம்பிக்கையால் தேவனுக்குத் தன்னை ஒப்புவித்து, தனக்குத் துணைக்கும், உதவிக்கும் அவரையே நம்புகிற எந்தப் பலவீன விசுவாசிக்கும் கர்த்தருடைய ஆச்சரியமான உதவியும், வழி நடத்துதலும் கிடைக்கும்.

ஓர் இலையுதிர் காலத்தில், பள்ளத்தாக்கிலுள்ள ஒரு கழுகு, துப்பாக்கியால் சுடப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் கண்டேன். அதனுடைய கண் ஒரு ஒளிவட்டம்போல் இன்னும் பிரகாசமாயிருந்தது. பின்பு அது மெதுவாய் தன் தலையைத் திருப்பி, வானத்தை நோக்கி, ஏதோ தேடும் பாவனையாய்ப் பார்த்தது. அது தன்னுடைய பலமான இறக்கைகளால் அங்கெல்லாம் பறந்ததுண்டு. அழகிய வானமே அதனுடைய மனதுக்குகந்த வீடு. அது கழுகின் இராச்சியம். அங்கே தன்னுடைய உயர்ந்த பலத்தை அது அநேகமாயிருந் தடவை சோதித்துக் களித்திருக்கும். அந்த உயரங்களில், அது மின்னல்களோடு விளையாடி இருக்கும். காற்றோடு தன் வேகத்தைப் போட்டியிட்டிருக்கும். இப்போது அவ்விடத்தைவிட்டு, அதிகத் தூரத்தில் மரண காயமடைந்து கிடந்தது, ஏனென்றால் தன் ஜீவியத்தில், ஒரே முறை மறந்து, தாழ்வாகப் பறந்தது. நம் ஆத்துமாவும் அந்தக் கழுகு போன்றது. இவ்வுலகம் அதன் வீடல்ல. அது மேலே நோக்குவதை விட்டுவிடக்கூடாது.  கிறி ஸ்துவை விடக்கூடாது. நாம் தைரியமாயிருக்கக்கூடாவிட்டால், போர்க்களத்தை விட்டு விலகுவதே மேல், ஓய்வெடுக்க இது காலமில்லை. என் ஆத்துமாவே மேல் நோக்கும் பார்வையை விட்டுவிடாதே.

தொடர்ந்து மேலே நோக்கிப் பார்
நீ மேல் நோக்கிப் பார்க்குங்கால்,
யேகோவாயீரே வெற்றிபெற செய்வார்
தொடர்ந்து மேலே நோக்கிப் பார்
நீ மேல் நோக்கிப் பார்ங்குங்கால்,
உள்ளத்தை இருள் மூடுவதுபோல் தோன்றும்
ஆயினும் ஆத்துமாவைப் பரம ஒளி நிரப்பும்,
தொடர்ந்து மேலே நோக்கிப் பார்
நீ போரில் தவித்து ஓய்கையில்,
நீ மேலே நோக்கும்போது,
உன் தலைவர் ஜெயிக்கும் வன்மையை ஈவார்.

நாம் மேற்றிசையை நோக்கினால், சூரியன் உதயமாவதைக் காணவே மாட்டோம்.