January

ஐனவரி 25

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் (சங்.23:4).

கிராமத்தில் என் தகப்பனார் வீட்டில் புகைபோக்கி அருகில் ஒரு சிறு மூலை உண்டு. எங்கள் குடும்பத்தில் அநேக தலைமுறைகளாய் உபயோகிக்கப்பட்ட கைத்தடிகளும், பிரம்புகளும் அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. நான் என் பூர்வீக வீட்டிற்குச் செல்லும்பொழுது, என் தகப்பனாரும் நானும் உலாவச் செல்லுகையில், அவவறைக்குச் சென்று அச்சமயங்களுக்கேற்ற தேவையான பிரம்பை எடுத்துச் செல்வோம். இதில் எனக்குக் கர்த்தரின் வார்த்தை தைத்தடி போன்றது என்ற நினைவு வருவதுண்டு.

அபாயம் எந்தச் சமயத்திலும் உண்டாகலாம் என்று மன தைரியம் அற்றிருந்த, துக்கம் நிறைந்திருந்த யுத்த நாள்களில் பின்வரும் வசனமே என் கோலும் என் தடியும்போல் உதவிற்று. துர்ச்செய்தியை கேட்கிறதினால் பயப்படான். அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும் (சங்.112:7).

எங்களுடைய பிள்ளை மரித்துப்போனால் நாங்கள் மனமுடைந்து இருக்கும்பொழுது பின்வரும் வாக்குத்தத்தமே என் கோலாய் உதவிற்று. சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடிற்காலத்தில் களிப்புண்டாகும் (சங்.30:5).

சுகவீனத்தால் ஒரு வருட காலமாக என் சுய நாட்டைவிட்டு அயல்நாடு சென்றேன். அப்பொழுது நான் வீடு திரும்பி என் ஊழியத்தைத் தொடர்ந்து நடத்தக்கூடுமோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. அப்போது பின்வரும் வசனமே என் ஆதரவு கோலாயிற்று. அவர் என்பேரில் நினைக்கிற நினைவுகளை அவர் அறிவார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமி.20:11).

அபாயம் நெருங்கும்பொழுது உள்ளத்தில் சந்தேகம் தோன்றும்பொழுதும் என் அறிவு கலக்கமுறும்பொழுதும் பின்வரும் வசனமே எனக்கு ஊன்றுகோல்போல் உதவிற்று. அமரிக்கையும், நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் (ஏசா.30:15).

மார்ட்டின் லூத்தரின் மனைவியார் பின்வருமாறு கூறியுள்ளார். கர்த்தர் எனக்குச் சில துன்பங்களைக் கொடாதிருந்தால் சங்கீதங்களின் பொருளையும் பரிசுத்த ஆவியானவரின் வரத்தையும், கிறிஸ்தவனுடைய கடமைகள் என்ன என்பதையும் ஒருபோதும் அறிந்திருக்கமாட்டேன். கர்த்தரின் கோல் உபாத்தியாயர் கையிலிருக்கும் சுட்டுக்கோல் போன்றது. உபாத்தியாயர் அக்கோலால் மாணவர் நன்றாய்க் கவனிக்கும்படி எழுத்துக்களைச் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறே கர்த்தரின் கோல் இருக்கிறது. அதனால் நாம் படிக்கக்கூடிய அநேக காரியங்களை அவர் குறித்துக் காட்டுவதால் அறிகிறோம்.

கர்த்தர் தமது கோலோடு தடியையும் அனுப்புகிறார். இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும். உன் நாட்களுக்குத் தக்கதாய் உன் பெலனுமிருக்கும் (உபா.33:25).

கர்த்தர் நம்மைக் கல்லான பாதையில் அனுப்பினால் நமக்கு உறுதியான பாதரட்சையையும் கொடுத்தனுப்புவார் என்று நிச்சயமாய் நம்பலாம். சகல ஆயத்தத்தோடுமன்றி ஓரிடத்திற்கும் நம்மை அவர் அனுப்பமாட்டார்.