May

மே 17

மே 17

சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள் (ஏசா.33:23).

அவரது கிருபை போதுமானது. பலவீனத்தில் அவர் பலம் பூரணமாய் விளங்கும். பலவீனத்தில் பெருமை பாராட்டலாம். ஏனெனில் பலவீனப்டுத்தும்போது அவர் பலம் அளிக்கிறார். கிறிஸ்துவின் வல்லமை என்னில் இருக்கிறது. இது ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்வின் படிகள். மாம்சத்தில் கொடுக்கப்பட்ட முள்ளை ஜெயித்த மனிதன் துன்பத்தினை வென்று பாடும் வெற்றிப் பாடல் இது.

தேவனுடைய சப்பாணிகளும், குஷ்டரோகிகளும் பிறருக்கென அன்பையும், மகிழ்ச்சியையும் தரமுடியும். அவரது குருடர்கள் மறுமையில் மறைந்த கிடக்கும் மகிமையினை வெளிப்படுத்திக் காட்டமுடியும். சமீபத்தில் என்னைவிட்டு விலகாத அன்பு என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையினைக் கண்டேன். அது என் மனதை உருகிற்று. அதனை எழுதியவர் ஒரு குருடர். குருடராயிருப்பினும் அவர் அற்புதமான தேவனுடைய அன்பைக் கண்டு கொண்டார். பிறரையும் காணும்படி செய்துவிட்டார்!

விசுவாசத்தில் பொங்கி வழியும் இருதயத்தோடு தன்னைப்போன்ற அங்கவீனர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆறுதலாக அவர் இதை எழுதுகிறார். என் ஆத்துமாவே! உன் இயலாத நிலைமையில் நீயும்கூட தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையில் உட்கார்ந்திருந்த அந்தச் சப்பாணியை நினைத்துக்கொள். அவன் உள்ளே சென்று துதித்ததைப்போல இரக்கத்தின் ஆலயத்திற்குள் நீயும் செல்வதற்காகத்தான் இந்த சிலுவையின் அனுபவம் உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுபடுத்திக் கொள்.

பார்வையற்ற வேளையில் பார்வையடைவதும், பாடுகளின் போது பாடல் பாடுவதும், முடமானபோதும் பிறருக்கு உதவுவதும், போதுமான கிருபையில் பலப்படுவதும்தான் சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்வு. இதனால் நம் ஆவி இனிமையடையும், பிறரையும் பலப்படுத்த முடியும்!