May

மே 12

மே 12

எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (மத்.24:46).

இயேசு கிறிஸ்து தம் போதனைகள் யாவற்றிலும், தான் இவ்வுலகத்தை விட்டுப்போன்பின்பு மீண்டும் இரண்டாம் முறை வரப்போவதைக் குறித்து அடிக்கடி போதித்திருக்கிறார். மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்.16:27). தமது ஊழியத்தின் கடைசி நாட்களில் சிலுவைப்பாடுகள் சமீபித்து வருகையில் அவர் தமக்கு நம்மை ஊழியம் செய்யும்படி அடிக்கடி கூறியுள்ளதைக் காணலாம். உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கு எற்படும் மகிழ்ச்சியையும், எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

நமக்கு என்ன பலன் கிடைக்கும்? இதை நாம் 1.கொரிந்தியர் 3:10-15ல் காண்கிறோம். அவனவன் தான் அதன்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியாலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதன்மேல் ஒருவன் கட்டினது வெந்துபோனால் அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.