May

மே 11

மே 11

….. தேவனோ…. அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதி.50:20).

இதே சத்தியத்தை நாம் ரோமர் 8:28ல் காணலாம். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்பது நமக்குப் புதிதான வெளிப்பாடல்ல. இது புதிய ஏற்பாட்டுக் காலத்திற்குரியதல்ல. யோசேப்பின் இந்த அனுபவம் பழைய ஏற்பாட்டிலேயே மிகச் சிறந்தது எனலாம். தன் சகோதரர்களால் அவன் வெறுக்கப்பட்டான். பகைமையின் உச்சக்கட்டத்தில் அவனை அடிமையாக விற்றுப்போட்டனர். அடிமையாக இருந்த யோசேப்பு தொடர்ந்து அடிமையாகவே இராமல் அந்நாட்டின் அரியணைக்குச் செல்லும் அரிய வாய்ப்பினைப் பெற்றான். தன் சகோதரருக்கு உதவும் வாய்ப்புக் கிட்டியமைக்கு மகிழ்ச்சியடைந்தான். தங்கள் தகப்பன் மரணமடைந்த பின்பு யோசேப்பு உதவி செய்யும் தன் பண்பை விட்டு தங்களுக்கு உபத்திரவம் கொடுப்பான் என்று கருதி பயந்தனர். ஆனால் யோசேப்பு அப்படிப்பட்டவனல்ல. அவனுக்குத் தீமையாக அவர்கள் நினைத்தவற்றை தேவன் நன்மையாக முடியப்பண்ணினார் என்று விளக்கி அவர்களைப் பயப்படாதிருக்கும்படி கேட்டுக்கொண்டான்.

ரோமர் 8:28 ஐ பற்றி தியானித்துக்கொண்டிருந்த சில ஊழியர்களின் கூட்டத்தில் வயதில் முதிர்ந்த ஒரு சமையற்காரன் விளக்கம் கொடுத்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் உங்களக்கு கொடுக்கும் இனிய சூடான ரொட்டிகளைப்பற்றி நீங்கள் புகழ்ந்து கூறுகிறிர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ரொட்டி மாவை மட்டும் தனியாகச் சாப்பிட்டால் ருசிப்பதில்லை. பிசைந்த மாவும் ருசிப்பதில்லை. அதில் சேர்க்கப்படும் பிற பொருள்களும் ருசிப்பதில்லை. ஆனால் நான் எல்லாவற்றையும் ஒன்றாக்கிப் பிசைந்து அடுப்பிலிட்டு சரியான பக்குவத்தில் எடுக்கும்போது அது ருசியாயிருக்கிறது. அதே போன்றுதான் தேவன் எல்லாவற்றையும் நன்மைக்கென்றே செய்து முடிக்கிறார் என நான் கருதுகிறேன் எனக் கூறினான்.

நம்முடைய உள்ளம் தேவனிடத்தும், மனிதனிடத்தும் செம்மையாக இருக்குமட்டும் நேற்றைய, இன்றைய சூழ்நிலைகள் யாவும் நமது நன்மைக்கென்றே நடைபெறுகின்றன. ஆகவே எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்துவிடாதே!