May

மே 3

மே 3

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான் (லூக்.16:10).

மக்கள் நம்மிடம் (வெளிச்சத்தில்) வெளியரங்கத்தில் காணும் யாவற்றையும் நம்மைப்பற்றிக் கொண்டிருக்கும் நல்ல கருத்தையும் கீர்த்தி எனக் கூறலாம். பிற மக்களால் கண்டுகொள்ள இயலாதபடி அந்தரங்கத்தில் (இருளில்) நாம் செய்யும் காரியங்கள்தான் நம்முடைய பண்பை வெளிப்படுத்தும். உண்மையாயிருப்பதைப் பற்றி நமது இரட்சகர் பரிசேயரிடம் போதித்தார். ஏனெனில் அவர்கள், பொருளாசைக்காரராயிருந்தனர் (16:14). இதை இயேசு அவர்களுக்கு மாத்திரம் போதியாமல் நமக்கும் சேர்த்தே கூறியுள்ளார். அழிந்துபோகும் காரியங்களில் சிறிதுகூட உண்மையற்றவர்கள் உயர்ந்த ஆவிக்குரிய காரியங்களில் எவ்வாறு உண்மையாயிருக்க முடியும்?

தேவனிடம் அன்புகூருகிறேன் எனக் கூறும் நாம் அயலாரிடம் அக்கறையின்றி, அவர்களது நலனில் கரிசனையின்றி வாழ முடியாது. (1.யோ.3:17-19). நமது இரட்சகரின் கட்டளைக்கு கீழ்ப்படியாதவன் அவரிடம் அன்புகூருவதாகக் கூறமுடியாது (யோ.14:15,21). அனுதின சிலுவையை எடுத்துச் செல்ல மறுப்பவன் அவரது சீடனாக முடியாது (மாற்.8:34-35).

வாழ்வின் ஒவ்வொரு படியிலும், எவ்வளவு சிறிய காரியமாயினும் நமது பெருந்தன்மையினையும், உண்மையுள்ள தன்மையினையும் வெளிப்படுத்தவேண்டும். அந்நியரை உபசரித்தல், சிறுவர்களிடம் அன்புகூருதல், முதியோருக்கு உதவுதல், மக்களின் பாராட்டை எதிர்பாராது உதவி செய்தல், முறுமுறுப்பின்றி இனிய முகத்துடன் இன்னும் ஒரு மைல் தூரம் செல்லுதல் போன்றவை நமக்கு அவசியமே.

கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருப்பவன் அநேகத்தில் உண்மையுள்ளவனாக இருப்பான் என்பது உறுதி.