March

மார்ச் 29

மார்ச் 29

…. அவள் வெட்கப்பட வேண்டாமோ? (எண்.12:14)

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டுரமுள்ளது. பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதி.27:4) என்று நீதிமொழிகளில் ஒரு பெரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மீரியாமும், ஆரோனும் மோசேயின் பேரில் பொறாமை கொண்டது நியாயமல்ல. அவர்களுக்குப் பெரும் பொறுப்புக்கள் இருந்தன. உயர்ந்த நிலையில் இருந்தனர். இருப்பினும் இஸ்ரவேலர் அனைவரும் மோசே தலைவனாக இருந்ததினால் அவன்மேல் அவர்கள் பொறாமை கொண்டனர்.

மக்கள் தலைவனாக இருப்பவர்கள் எவரும் பொறுப்பான பதவியில் இருப்பவர்களனைவரும் மக்களுடைய வெறுப்பையும், மதிப்புக் குறைவையும் பெறுபவர். தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தள்ளிவிட்டுத் தாங்கள் உயரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். யோசேப்பின் தமையன்மார் அவன்மீது பொறாமை கொண்டனர். தாவீதின்மேல் சவுல் மன்னன் பொறாமை கொண்டான். பரிசேயர் இயேசுவின்மேல் பொறாமைகொண்டனர். ஒரு பகுதி மக்களால் வெறுக்கப்படுதல் மற்றொரு பகுபியினரால் புகழப்படுதல். இது நல்லாருக்கும், பொல்லாருக்கும் கிடைக்கும் அனுபவம்.

பொறாமை கொண்டு முறுமுறுக்கும் பண்பு நம்மிடம் இருப்பது வெட்கத்திற்குரியதுதான் மீரியாமின் உடலின் குஷ்டம் தோன்றியதுபோன்று மனித உள்ளத்தில் கெட்ட சிந்தை தோன்றியுள்ளது. இது நல்ல பாம்பின் பல்லிலுள்ள கொடிய விஷத்திற்கு ஒப்பானது. தேவனுடைய ஊழியர்களின்மேல் பொறாமை கொண்டு அவர்களைப்பற்றி பேசினவர்களைக் குறித்து நாம் வெட்கப்படவேண்டும். எத்தனைமுறை அர்களுடைய தவறுகள் என்று நாம் கருதினவற்றைப் பெரிதுபடுத்திக் கூறியுள்ளோம். எத்தனை முறை அவர்களுடைய உண்மையான நற்குணங்களைக் குறைத்து மதிப்பிட்டுக் கூறியுள்ளோம். இவையெல்லாவற்றையும் குறித்து நாம் வெட்கப்படவேண்டியது அவசியம்.