March

மார்ச் 26

மார்ச் 26

என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும் (சங்.89:24)

தாவீதைப்பற்றிக் கூறப்பட்ட இந்த வசனம் தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் பொருந்தும். புயல் சூழ்ந்த வேளையிலும், நெருக்கப்படும் நேரங்களிலும் இவை நமக்கு சிறந்த வாக்குத்தத்தங்களாக அமைகின்றன. சத்துரு அவனை நெருக்குவதில்லை, ஒடுக்குவதில்லை (சங்.89:22).

தேவனுக்கு விரோதமாகவும், அவரது ஊழியர்களுக்கு விரோதமாகவும் பிசாசு எதிர்த்து நிற்பதையும் கடுமையாக தாக்க முயல்வதையும் வேதாகமத்தில் காண்கிறோம். ஆனால் பிசாசை தேவன் வென்றுவிட்டார். நாமும்கூட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், தங்கள் சாட்சியின் வசனத்திலும் (வெளி 12:11) அவனை ஜெயிப்போம். அதாவது நாம் பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் நம்மைவிட்டுப் போய்விடுவான் (யாக்.4:7, 1.பேதுரு.5:8-.9). அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து விடுவேன் என்ற வாக்குத்தத்தம் நமக்கு ஏசாயா 54:17ஐ நினைவுபடுத்துகிறது. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். கர்த்தருடைய பரிசுத்தவான்களைத் தேவன் பாதுகாக்கிறார். ஆகவே அவர், சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்தேன் (சங்.89:19) என வாக்களித்துள்ளார்.

தாவீதைவிட பலமுள்ள சவுரியவான்தான், சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறவர், அவரே நமது இரட்சகர் இயேசு கிறிஸ்து. அவர் நம்மை இருளிலும், பிசாசின் பிடியிலும், சாவின் பயங்கரத்திலும் விலக்கிக் காத்து வழிநடத்துகிறார். வேதனைகொண்டு சோதனையில் தவிக்கும் உள்ளத்தைப் பார்த்து அவர், என் உண்மையும் என் கிருபையும் உன்னோடிருக்கும்…. இப்பொழுதே அதைக் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.