March

மார்ச் 25

மார்ச் 25

என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானா? (நெகே.6:11)

இக்காலத்தில் தேவனுடைய ஊழியர்கள் யாவரும் பொய், வந்திகள், ஏமாற்றம் போன்ற பல ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்திலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்த இவைகளால் இயலாது.

தேவஊழியத்தைக் கெடுப்பதற்கென காலங்கள்தோறும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்தான் இவை. மனுக்குலம் ஆரம்பமானது முதல் பிசாசானவன் நமக்கு எதிராளியாக இருந்து, பொய்க்குப் பிதாவுமாய் இருக்கிறான் (யோ.8:44). யோபுவைக் குறிவைத்த அவன், யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? (யோபு1:9) என்றான். எருசலேமின்மீது பற்றுக்கொண்ட உண்மையுள்ள தீர்க்கதரிசியான எரேமியாவைப் பிடித்து, நீ கல்தேயரைச் சேரப்போகிறவன்? (எரேமி.37:13) எனப் பொய்க்குற்றம் சாட்டினர். அந்தப் பொய்ச்சாட்சியைத் தேவனுடைய ஊழியன் மறுத்துக்கூறியும் பயனில்லாமற்போயிற்று. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட பொய்குற்றம் சாட்டப்படுதலின் கசப்பை உணர்ந்தவர். ஏனெனில் அவரைப் பரிசேயர், இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் (லூக்.11:15) என்று கூறினார்.

இன்றும்கூட ஊழியரது எண்ணங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. செய்வன யாவும் தவறு எனக் கூறப்பட்டு, முயற்சிகள் யாவும் பொய்களாலும், வதந்திகளாலும் நிர்மூலமாக்கப்படுகிறது. தேவஊழியருக்கு விரோதமாக எத்தனையோ மொட்டைக் கடிதங்கள். அவைகள் தேவனுடைய வேலையைக் கெடுக்கிறது. அதிக மன வேதனையைக் கொடுக்கிறது. தேவனுடைய ஊழியன் தனக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்ய முனைந்து நிற்கும்போது அவனைப்பற்றி அவதூறாக பல கடிதங்கள் வரும். இவைகள்தான் அவனுடைய வேலையைக் கெடுக்கும் மிகப் பெரிய தடைகள் எனலாம்.