March

மார்ச் 24

மார்ச் 24

அவரை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்கள் (சங்.2:12).

ஜனங்கள் கொந்தளித்து எழும்பினாலும், சமாதானத்தின் தேவனை அசைக்க முடியாது. புயலுக்குப்பின் அமைதியுண்டு. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே ஒருவனுக்குப் பலம். யுத்தம் சர்வவல்ல தேவனுடையது.

இரண்டாம் சங்கீதம் முழுவதிலும் இரைச்சலையும், சத்தத்தையும் காண்கிறோம். ஆனால் இரைச்சல் யாவும் ஓய்ந்த பின்பு, உண்மையுள்ளவர்களுக்கு ஆவியானவரின் மெல்லிய சத்தம் தொடர்ந்து நம்பிக்கையைக் கொடுக்கிறது. அவர்களது விசுவாசம் இவ்வுலகத்தைக் காட்டிலும் மேலானது. ஜனங்கள் கொந்தளித்தாலும், அவரை நம்பும் மக்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஜனங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? இதைத்தான் சங்கீதக்காரன் கேட்கிறான். தனிப்பட்ட மனிதனைவிட கும்பல் சீக்கிரம உணர்ச்சி வசப்படும்.

எத்தனையோ தரம் மோசே கும்பலின் கோபத்திற்கு ஆளாகி உள்ளான். அந்தக் கூட்டத்தினர் எகிப்திலிருந்து விடுதலையடைந்ததையும், செங்கடலினைக் கடந்ததையும், பசி, தாகம் தீர்க்கப்பட்டதையும் விரைவில் மறந்துவிட்டனர். காரணமின்றி தங்கள் தலைவனுக்கு விரோதமாக எழும்பினர், முறுமுறுத்தனர்.

தனிப்பட்ட வாழ்விலும், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட வேளையிலும் தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு விரோதமாக எழும்பும் கொடிய மக்களுக்கு பயப்படுவதேயில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் முழு நம்பிக்கையையும் சர்வ வல்லவரில் வைத்துள்ளனர். இந்த இரகசியத்தைக் கற்றுக்கொண்ட தாவீது 27ம் சங்கீதத்தில் இதைக் குறித்துப் பாடியுள்ளார். ஆம், தேவனுடைய பிள்ளைகள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். பூமியின் இராஜா க்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி கர்த்தருக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் பண்ணப்பட்ட மக்களுக்கு விரோதமாக எழும்பி வந்தாலும் பயப்படவேண்டாம்.