March

மார்ச் 22

மார்ச் 22

நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள் (சங்.106:3).

நம்மீதும் அதிகாரம் செலுத்துகிறவர்கள் மீது நமக்கு வெறுப்புத் தோன்றுவது இயல்பு. தேவனால் நீ ஒரு தலைவனாக தெரிந்தெடுக்கப்பட்டிருப்பாயானால் பிறர் உன்னைப் பகைத்தால் நீ ஆச்சரியப்படவேண்டாம். அல்லது நீ ஒருவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டிய நிலை வந்தால் இப்பாவத்திற்கு உட்படாதே. யோவானைப்போல், அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் எனக் கூறவேண்டும். அப்பொழுது நீங்கள், அன்புக்குப் பொறாமையில்லை (1.கொரி.13:4) என்பதை நீரூபிக்க முடியும்.

மாம்சத்தின் கிரியைகள் என்று கலாத்தியர் 5:19-21 வரையில் பட்டியல் ஒன்று கூறப்பட்டுள்ளது. அதில் பொறாமையும், கொலையும், அடுத்தடுத்துக் கூறப்பட்டுள்ளது. காயீன் ஆபேலின் பேரில் பொறாமை கொண்டான். யோசேப்பின் சகோதரார் அவன்மீது பொறாமை கொண்டனர். பிரதான ஆசாரியர் பொறாமையினால் இயேசுவை ஒப்புக்கொடுத்தனர். நீதியைச் செய்கிற உள்ளத்தில் பொறாமை இருக்காது. தனக்கு விருப்பமற்ற காரியத்தைதத் தன் தலைவன் கூறினாலும் உண்மையாக அதைச் செய்து முடிக்கும் உள்ளம் மகிழ்ச்சியடையும். இஸ்ரவேலர் கன்மலையிலிருந்து தண்ணீர் வந்தபின்பும் தேவனுக்குக் கோபமூட்டினர். அவர்கள் கலகம்பண்ணினதினால் பொறுமை மிகுந்த தேவனையும் கோபம் கொள்ளச் செய்தனர். நாமும் அவர்களைப்போல் இருக்கிறோமா? அன்றி மற்றவர்களோடு இணைந்து தேவ ஊழியம் செய்பவர்களுக்கு எதிராகப் போhக்கொடி உயர்த்துகிறோமா?

நமக்கும், நம்முடைய தலைவர்களுக்கும் கலக குணமிருந்தால் தேவனுக்கு விரோதமாகத் தவறு செய்கிறவர்களாக இருப்போம். சந்தர்ப்ப சூழ்நிலையைக் கடந்து கீழ்ப்படிதலோடும் விசுவாசத்தோடும் நடக்கிற மனுஷன் பாக்கியவான். தேவனுடைய வழியில் நடக்கிற மனுஷன் பாக்கியவான். தான் செல்லுகிற வழி குறுகலாகவும், தனிமையில் செல்வதாகவும் அவனுக்குத் தோன்றலாம். ஆனால் அது தேவனால் அமைக்கப்பட்ட ஆசீர்வாதத்திற்குரிய வழி என்பதை மறக்கவேண்டாம்.