March

மார்ச் 19

மார்ச் 19

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்.5:8).

நாங்கள் குருடரோ? என்று இயேசுவிடம் அறிவிற் சிறந்த சிலர் கேட்டனர். தங்கள் வாழ்நாளில் காணாத தேவனுடைய பெரிதான வல்லமையை அவர்கள் கண்டனர். அதாவது பிறவிக் குருடன் கண்பார்வை பெற்றதைத்தான் அவர்கள் பார்த்தனர். அவர்களால் இதை நம்பமுடியவில்லை. பார்வை பெற்றது அந்தக் குருடன்தான் என்று அவனது பெற்றோரும், அயலக்தாரும், சந்தை வெளியில் உள்ளவர்களும் அவனைப்பற்றி சாட்சி பகன்றனர். இச்செயலை நம்ப மறுத்ததோடல்லாமல் மேலும் அவர்கள், முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ? என்று அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.

இதற்குப் பின்பு, கர்த்தராகிய இயேசு அவனைச் சந்தித்து, காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்று கூறினார். அப்பொழுதுதான் பரிசேயர்கள் தங்கள் கண்டனக் கணைகளைத் தொடுத்து, நாங்கள் குருடரோ? என வினவினர்.

தங்களால் எதையும் காண இயலும் என்று கூறுகிற அவர்கள் குருடராகவேயிருக்கிறார்கள். சிந்தனையும், கற்பனையும் இருதயத்தின் ஆழத்தில் இருந்து எழுபவை. போதித்தல், வளைந்து கொடுத்தல், ஒப்குக்கொடுத்தல் இம்மூன்றும் கல்வி கற்பதற்குத் தேவை. இவை வேதாகமப் பயிற்சிக்கும் தேவை. பரிசேயர்கள் அற்புதத்தைக் கண்டனர். ஆனால் ஆண்டவரைப் பார்த்து ஆச்சரியப்படவில்லை. குணமாக்குதலைக் கண்ட அவாகள் குணமாக்கினவரைப் புறம்பே தள்ளிவிட்டனர்.

உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலே சிலர் வார்த்தைகளைப் பகுத்து பொருள் கொள்கின்றனர். சிலர் வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பிடுகின்றனர். லூக்.11:3-36ல் இயேசு கிறிஸ்து ஒளிக்கும், இருளுக்கும் உள்ள உறவினை எடுத்துக் கூறுகிறார். தனக்கும், பிறருக்கும் ஒளி கொடுப்பதற்கென எந்த மனுஷனும் விளக்கை மூடி வைக்கமாட்டான். மறைத்து வைக்கப்பட்ட ஒளி இருளாக மாறிவிடும். ஆகவே ஒரு மனுஷன் மற்றெல்லாவற்றைப் பார்க்கிலும் தன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.